பொருளாதார பொய் மந்த நிலை!| Dinamalar

பொருளாதார பொய் மந்த நிலை!

Added : செப் 21, 2019 | கருத்துகள் (10) | |
எத்தனையோ பொய், புரட்டுகளை கேள்விப் பட்டிருப்போம். ஆனால், நாட்டில் தற்போது பரவி வரும், ஒரு புரட்டு குறித்து, கனவில் கூட யோசித்திருக்க மாட்டோம். அப்படியொரு பொய்யான தகவல், விஷக் கிருமி போல, சமீப காலமாக நாட்டில் வேகமாகப் பரவுகிறது.'நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து விட்டது; பொருட்கள் உற்பத்தி தேக்கமடைந்து விட்டது; மக்களிடம் பணமில்லை; மிக மோசமான பொருளாதார நிலைக்கு
பொருளாதார பொய் மந்த நிலை!

எத்தனையோ பொய், புரட்டுகளை கேள்விப் பட்டிருப்போம். ஆனால், நாட்டில் தற்போது பரவி வரும், ஒரு புரட்டு குறித்து, கனவில் கூட யோசித்திருக்க மாட்டோம். அப்படியொரு பொய்யான

தகவல், விஷக் கிருமி போல, சமீப காலமாக நாட்டில் வேகமாகப் பரவுகிறது.'நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து விட்டது; பொருட்கள் உற்பத்தி தேக்கமடைந்து விட்டது; மக்களிடம் பணமில்லை; மிக மோசமான பொருளாதார நிலைக்கு சென்று கொண்டிருக்கிறோம்' என்பது தான், அந்தப் புரட்டு. இந்த விஷக்கிருமிக்கு, பொருளாதார புரட்டு என, பெயர்.பரப்பப்படும் புரட்டுகளுக்கு, பதில் கொடுக்கும் தகுதியும், திறமையும், மத்தியில் ஆளும் கட்சியான, பா.ஜ.,வுக்கு இல்லை என்பது தான் யதார்த்தம். பொருளாதாரப் புரட்டுகளை பரப்பிக் கொண்டு இருக்கும் அரசியல் கட்சிகளுக்கும், சில ஊடகங்களுக்கும், இது, நல்ல வாய்ப்பாக உள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான, பா.ஜ., அரசின் மீது, லோக்சபா தேர்தலுக்கு முன், எவ்வித ஊழல் குற்றச்சாட்டுக்களையும், எதிர்க்கட்சிகளால் சுமத்த முடியவில்லை. எனினும், 'ரபேல் ஊழல், ரபேல் ஊழல்' என, நடக்காத ஒரு ஊழலை, நடந்தது போல கூறிக் கொண்டே இருந்தன.


காங்கிரஸ் தலைவர், ராகுல், ஒரு படி மேலே போய், பிரதமர் மோடியை, 'திருடன்' என்று கூட குற்றம் சாட்டினார். 'ரபேல் விமானம் வாங்கிய விவகாரத்தில், அனைத்தும் சட்டப்படி தான் நடந்துள்ளது; ஊழல் நடைபெறவில்லை' என, உச்ச நீதிமன்றம் அறிவித்த பின், இந்த விவகாரத்தில், எதிர்க் கட்சிகளின் சுருதி இறங்கியது.தேர்தல் முடிவுகள் வெளியாகி, பா.ஜ., கூட்டணி, 350 தொகுதிகளில், வெற்றி பெற்று, ஆட்சியில் அமர்ந்தவுடன், பிரதமர் மோடி தலைமையிலான அரசை வீழ்த்த, பொருளாதாரப் புரட்டை, கையில் எடுத்துள்ளன, எதிர்க்கட்சிகள்.பொருளாதாரம் என்றால் என்னவென்றே தெரியாதோர் கூட, 'நாட்டின் பொருளாதாரம் சரிந்து விட்டது; தொழிற்சாலைகள் ஒவ்வொன்றாய் மூடப் படுகின்றன. லட்சக் கணக்கான தொழிலாளர்கள், வேலை இழந்து, வீதிக்கு வந்து விட்டனர்.

'மத்திய பா.ஜ., அரசின் நிர்வாகச் சீர் கேட்டால், அசோக் லேலாண்ட் மோட்டார் வாகன உற்பத்தி தொழிற்சாலை, உற்பத்தியைக் குறைத்து, தொழிலாளர்களுக்கு, 'லே- ஆப்' எனப்படும், வேலையிழப்பு கொடுத்து இருக்கிறது...' என, புலம்புகின்றனர்.இவை எல்லாம் பொய்!சில ஆண்டுகளுக்கு முன், பாட்டு கேட்க, செல்லும் இடமெல்லாம் எடுத்துச் செல்லப்பட்ட, 'டிரான்சிஸ்டர்' அறிமுகமானதும், வீடுகளின் உட்புறங்களில் இருந்த, பெரிய சைஸ், வானொலிப் பெட்டி

களின் விற்பனை குறைந்தது.


'டேப் ரெக்கார்டு'களின் அறிமுகம், டிரான்சிஸ்டர்களின் விற்பனையைக் குறைத்தது.'டேப்' என அழைக்கப்படும், ஒலி நாடாக்களின் அறிமுகம், இசைத்தட்டுகள் எனப்படும், ரெக்கார்டு தயாரிப்புக்கு மூடு விழா நடத்தியது. 'சிடி'க்கள் வந்து, ஒலி நாடாக்களை வீட்டுக்கு அனுப்பின. மொபைல் போன்கள் வருகையால், 'பேஜர்கள்' எனப்படும், செய்தியை வார்த்தைகளாக மட்டும் பார்க்கக் கூடிய கருவிகள், வழக்கொழிந்து போயின.கால மாற்றத்தால், ஒன்றின் அறிமுகம், மற்றொன்றை ஓரங்கட்டுவது தவிர்க்க இயலாதது. ஓட்டுச்சீட்டு முறைக்கு, ஓட்டுப்பதிவு இயந்திரம் விடை கொடுத்து அனுப்ப வில்லையா... அது மாதிரி தான்!'ஒரு காலத்தில், கொடி கட்டிப் பறந்த, அந்த பிஸ்கட் கம்பெனி மூடப்பட்டு விட்டது; கார் தொழிற்சாலைகள் உற்பத்தியை நிறுத்தி, கதவடைப்பு செய்யத் துவங்கி விட்டன; தங்கத்தின் விலை, விண்ணைத் தொட்டுக் கொண்டிருக்கிறது; உற்பத்தித் திறன் குறைந்து விட்டது; அரசு கஜானா காலியாகி விட்டது.'செலவுக்கு பணமில்லாமல், ரிசர்வ் வங்கியின் இருப்பு நிதியிலிருந்து, மத்திய அரசு, 1.76 லட்சம் கோடி ரூபாய் பெற்று, நிதி நிலைமையை சரி செய்து கொண்டிருக்கிறது' என்பன போன்ற, புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டு, நாட்டு மக்களை, மூளைச் சலவை செய்து கொண்டிருக்கின்றனர் சிலர்.

'ஆமை நுழைந்த வீடும், அமீனா புகுந்த வீடும் உருப்படாது' என்பர். இது, அந்த கால சொலவடை. அதை, இந்த காலத்துக்கு ஏற்ப, 'கம்யூனிஸ்ட்கள் கால் வைத்த தொழிற்சாலைகள் உருப்படாது' எனலாம்.


விவசாயத்திற்கு மின்சாரம் கொடு என போராடுவர்; மின் கம்பிகளை வைக்க, விவசாய நிலங்களில் குழி தோண்டினால் போராடுகின்றனர். இப்படி இருந்தால், வளர்ச்சி எப்படி வரும்?பள்ளியில் நான் பயிலும் காலத்தில், பழையன கழிதலும், புதியன புகுதலும் இயல்பே என, படித்திருக்கிறேன். கால ஓட்டத்திற்கேற்ப, மாற்றம் என்பது மட்டும் தான் தவிர்க்க இயலாத ஒன்று.பொருளாதார மந்தம் என, எதிர்க்கட்சிகள், 'புருடா' விடுவது ஒன்றும் புதிதில்லை. சிலர் அந்த பொய்யை, புளுகை, புரட்டை, 'அப்படியும் இருக்குமோ...' என, சந்தேகப் படத் துவங்குவது தான், சகித்துக் கொள்ள இயலவில்லை.இன்றைக்கு, 'மாருதி' கார் கம்பெனி, உற்பத்தியை குறைத்ததற்கும், மற்ற கார் தொழிற்சாலைகள் மூட ஆலோசனை செய்து கொண்டு இருப்பதற்கும், மத்தியில் ஆட்சியிலிருக்கும், பா.ஜ.,வே காரணம் என்று, 'குதித்து'க் கொண்டிருக்கும் எதிர்கட்சிகளுக்கு ஒரு கேள்வி...

சென்னை, வண்டலுாரில் இயங்கிய, 'ஸ்டாண்டர்ட்' மோட்டார் தொழிற்சாலை, பல ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டதே, அப்போது மத்தியில், பா.ஜ.,வா ஆட்சி செய்தது; மோடியா, பிரதமராக பதவியிலிருந்தார்; காங்கிரஸ் கட்சி தானே, பதவியில் இருந்தது!அப்போது, காங்கிரஸ் கட்சியை, எந்த எதிர்கட்சியாவது குற்றம் சாட்டியது உண்டா... இப்போதுள்ள தைரியம், அப்போது எங்கே போயிருந்தது?பழைய, ஸ்டாண்டர்ட் மோட்டார் தொழிற்சாலையில் பணி புரிந்து, பணியில் இருந்து நீக்கப்பட்ட, ஆயிரக்கணக்கான தொழிலாளர்களில் சிலர், சென்னை அடையாறில் உள்ள கோவிலில், 'செக்யூரிட்டி'களாக பணி புரிந்து கொண்டிருக்கின்றனர் என்பது, யாருக்காவது தெரியுமா?சரி... சென்னை, பெரம்பூரில், 'பக்கிங்ஹாம் - கர்னாடிக் மில்ஸ்' என்ற பெயரில், பின்னி மில் இயங்கி வந்ததே. அந்த ஆலை என்ன ஆனது... ஏன் மூடப் பட்டது... அப்போதும் ஆட்சியில் இருந்தது, காங்கிரஸ் தானே!

இப்போது, அந்த இடத்தில், சினிமா, 'ஷூட்டிங்' அல்லவா நடந்து கொண்டிருக்கிறது.


மூடப்பட்ட பின்னி மில்லின் தொழிலாளர்கள் என்ன ஆயினர்... அவர்கள் கதி என்ன என்பது, யாருக்காவது தெரியுமா?சென்னை அம்பத்துாரில், 'இந்தியா மீட்டர்ஸ்' என, ஒரு தொழிற்சாலை இருந்ததே, அது என்ன ஆனது; ஏன் மூடப்பட்டது. அதே ஊரில் இயங்கி வந்த, 'டன்லப்' டயர் தொழிற்சாலை என்ன ஆனது... ஏன் மூடப்பட்டது?எதிர் காலத்தில், மத்தியில், பாரதிய ஜனதா கட்சி என்ற ஒரு கட்சி, ஆட்சிக்கு வரும்; நரேந்திர மோடி என்றொரு பிரதமர் வருவார்; அவர் பதவியில் அமர்ந்ததும், ஒவ்வொரு கார் தொழிற்சாலையாக மூடு விழா நடத்துவார் என யூகித்து, முப்பது ஆண்டுகளுக்கு முன்பே, தொழிற்சாலைகளை மூடி போய் விட்டனரா?

கடந்த, ஐம்பது ஆண்டு கால வரலாற்றில், மூடு விழா கண்ட தொழிற்சாலைகளின் பட்டியலும், தொழில்களும் ஏராளம்.


தி மெயில், அலை ஓசை, நாத்திகம், நவசக்தி, சுதேசமித்திரன் போன்ற பத்திரிகை அலுவலகங்கள் என்ன ஆயின; எங்கே போயின?சரி, பத்திரிகை நிறுவனங்களை விடுங்கள். சென்னையில் ஓடியன், மிட்லண்ட், வெலிங்டன், அலங்கார், பிளாசா, சித்ரா, கெயிட்டி, நியூ எலிபின்ஸ்டன், பாரகன், சாந்தி, சன், நாகேஷ் போன்ற சினிமா தியேட்டர்கள் ஏன் மூடப்பட்டன?

இதுபோல, தமிழக நகரங்கள் பலவற்றில், ஏராளமான சினிமா தியேட்டர்கள், கல்யாண மண்டபங்களாக மாறியுள்ளனவே, அதற்கு காரணம், பொருளாதார மந்த நிலையா?செயற்கைக்கோள் மூலம் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சிகள் அறிமுகமான போது, மார்க்கெட்டில் இருந்த, சாலிடெர், டயனோரா, ஈ.சி., டி.வி., கிருஷ் டிவி, ஒனிடா போன்ற, 'டிவி' தயாரிப்பு நிறுவனங்கள் என்ன ஆயின... எப்படி காணாமல் போயின? சோனி, சாம்சங், ஆப்பிள், எம்.ஐ., என, புதுப்புது மொபைல் போன் கம்பெனிகளின் வருகை, பழையனவற்றை கபளீகரம் செய்கின்றன.

பழையன கழிதலும், புதியன புகுதலும் இயற்கை விதி. தொழிற்சாலைகளில் மட்டுமல்ல, ஓட்டல்கள், கடைகள், ஸ்டுடியோக்கள், கட்டடங்கள், மருத்துவமனைகள் போன்ற அனைத்துத் துறைகளிலும், பழையன கழிதலும், புதியன புகுதலும் இயற்கை. அது தான் நடந்து கொண்டிருக்கிறது.மூதறிஞர் ராஜாஜி ஆரம்பித்த, சுதந்திரா கட்சி இப்போது என்ன ஆனது; ம.பொ.சி.,யின் தமிழரசுக் கழகம் எங்கே போனது... காங்., இளங்கோவனின் தந்தை, ஈ.வெ.கி.சம்பத் ஆரம்பித்த கட்சியின் கதி என்ன?பொதுவாகவே, தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு, குறிப்பாக, - தி.மு.க.,வுக்கு, ஒரு பழக்கம் உண்டு. நாட்டில் ஏதாவது நல்லது நடந்து விட்டால், தாங்கள் தான் அதற்கு காரணம் என்பர். ஏதாவது கெட்டதோ, அக்கிரமமோ நடந்தால், தங்களுக்கு முன் ஆட்சியில் இருந்தோரே, அதற்கு காரணம் என, கதைப்பர்.இப்போது, நாட்டில் நடக்காத அவலங்களுக்கு எல்லாம், பாரதிய ஜனதாவும், பிரதமர் மோடியுமே காரணம் என, கூறத் துவங்கி உள்ளனர்.

காங்கிரசை சேர்ந்த, முன்னாள் பிரதமர், மன்மோகன் சிங் ஆட்சியில், ௧ கிலோ துவரம் பருப்பின் விலை, 200 ரூபாய். மோடியின் ஆட்சியில், ௧ கிலோ துவரம் பருப்பு, 80 - 90 ரூபாய் தான்.

இப்போது, நாடு முழுவதும், நகைக் கடைகளிலும், துணிக் கடைகளிலும், ஓட்டல்களிலும் கூட்டம் பிதுங்கி வழிந்து கொண்டு தான் இருக்கிறது.



நாட்டின் பொருளாதார நிலை, கேள்விக்குறியாகி இருந்தால், மக்களின் வாங்கும் சக்தி குறைந்து, கடைக்காரர்கள், ஈ ஓட்டிக் கொண்டல்லவா இருந்திருப்பர். அவ்வாறு இல்லையே... பிறகு ஏன், இந்த பொய்யும், புரட்டும், பித்தலாட்டமும்?நீங்கள் அரசியல் என்ற, 'தொழில்' செய்து வருவதால், உண்மையான தொழிலை ஆட்டம் காணச் செய்கிறீர்களா?ஜெர்மனியை ஆண்ட, சர்வாதிகாரி ஹிட்லர், தன்னுடன், கோயபல்ஸ் என்ற ஓர் உதவியாளரை வைத்திருந்தானாம். பொய்யை பரப்ப வேண்டியது மட்டுமே, கோயபல்ஸ் வேலை. ஒரு பொய்யை திரும்பத் திரும்ப பிரசாரம் செய்து கொண்டிருந்தால், அந்த பொய்யையே உண்மை என, மக்கள் நம்ப ஆரம்பித்து விடுவர் என்பது தான், ஹிட்லரின், 'ஐடியா!'தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகளும், கட்சி சார்பு, 'டிவி' ஊடகங்களும், கோயபல்ஸ் வேலையைத் தான் செய்து கொண்டிருக்கின்றன.

வாருங்கள், பொருளாதார புரட்டுகளை புறம் தள்ளுவோம்; நல்லதொரு எதிர்காலத்தை நோக்கி, பீடு நடை போடுவோம்! தொடர்புக்கு:இ--மெயில்: essorres@gmail.com


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X