பக்கவாதம் நோய்க்கு, பக்கா சிகிச்சை: அரை மணி நேரத்தில் மீண்ட நோயாளி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பக்கவாதம் நோய்க்கு, 'பக்கா' சிகிச்சை: அரை மணி நேரத்தில் மீண்ட நோயாளி

Added : செப் 23, 2019 | கருத்துகள் (19)
Share
கரூர்:பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அளிக்கப்பட்ட துரிதமான சிகிச்சையால், 30 நிமிடங்களில், சகஜ நிலைக்கு திரும்பினார். கரூர், நீலிமேட்டைச் சேர்ந்தவர், கருணாநிதி, 40; ஆட்டோ ஓட்டுனர். 20ம் தேதி, இவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார்.உடனடியாக, அரசு மருத்துவக் கல்லுாரியில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, டாக்டர்கள் துரிதமாக சிகிச்சை
 பக்கவாதம் நோய்க்கு, 'பக்கா' சிகிச்சை: அரை மணி நேரத்தில் மீண்ட நோயாளி

கரூர்:பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அளிக்கப்பட்ட துரிதமான சிகிச்சையால், 30 நிமிடங்களில், சகஜ நிலைக்கு திரும்பினார்.

கரூர், நீலிமேட்டைச் சேர்ந்தவர், கருணாநிதி, 40; ஆட்டோ ஓட்டுனர். 20ம் தேதி, இவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார்.உடனடியாக, அரசு மருத்துவக் கல்லுாரியில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, டாக்டர்கள் துரிதமாக சிகிச்சை அளித்து, பாதிப்பிலிருந்து மீட்டனர். கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை டீன், ரோஸி வெண்ணிலா கூறியதாவது:இந்த மருத்துவமனை, நோயாளிகளுக்கு துரிதமாகவும், துல்லியமாகவும் சிகிச்சையளிக்கும் வகையில், தாய் திட்டத்தில், 40 லட்சம் ரூபாய் மதிப்பில் நவீனப்படுத்தப்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள், மாரடைப்பு, வலிப்பு நோய், நச்சு பாதிப்புக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மூளையின் ஒரு பக்கம் ரத்த ஓட்டம் குறைந்து, அப்பகுதி செயல்படாமல் போகும் போது, அதோடு தொடர்புடைய ஒரு கை, ஒரு கால் மற்றும் முகத்தின் ஒரு பகுதி செயலற்று போவது பக்கவாதமாகும்.உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, கொழுப்பு, மாரடைப்பு, இதய வால்வு கோளாறு, இதயம் செயலிழப்பு, இதய துடிப்பு கோளாறு போன்றவை, பக்கவாதம் வருவதற்கு அடித்தளம் அமைக்கின்றன. கடந்த, 20ம் தேதி காலை, 11:15 மணிக்கு, பக்கவாதம் அறிகுறியுடன், வலது கை, கால் பாதிக்கப்பட்ட நிலையில், கருணாநிதி என்பவர், இங்கு சேர்க்கப்பட்டார். அவருக்கு, டாக்டர் முரளிதரன் தலைமையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.பாதிப்பில் இருந்து மீள, 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மருந்து, ஊசி மூலம் செலுத்தப்பட்டது. இதனால், மூளை ரத்த குழாயில் உறைந்திருந்த ரத்தம் விலகி, மீண்டும் ரத்த ஓட்டம் சீரானது. அவருடைய கை, கால், 30 நிமிடங்களில் சகஜ நிலைக்கு திரும்பின.சற்று தாமதமாக வந்திருந்தாலும் அல்லது சிகிச்சை அளிக்க தாமதித்திருந்தாலும், அவர் வாழ்நாள் முழுவதும், ஒரு கை, ஒரு கால் செயலிழந்த நிலையிலேயே வாழ வேண்டி இருந்திருக்கும். இந்த மருந்து விலை அதிகம் என்பதால், தனியார் மருத்துவமனைகளில், இருப்பு வைத்திருப்பது சந்தேகம். ஆனால், அரசு மருத்துவமனைகளில், எப்போதும் இருப்பு வைக்கப்பட்டிருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X