சேலம்:மலேஷியாவில் நடக்க உள்ள, உலக கோப்பை சிலம்ப போட்டி, சப் - ஜூனியர் இந்திய அணிக்கு தேர்வான நிலையில், வறுமை வாட்டுவதால், அதில் பங்கேற்க முடியாமல், மளிகை வியாபாரி மகள் தவிக்கிறார்.
சேலம், அன்னதானப்பட்டி, மணியனுார் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர், முகம்மது ஹரீஷ். கரூர் அருகே, தளவாய்பாளையத்தில், மளிகை கடை வைத்துள்ளார். இவரது மகள் ராபிதா, 9, தனியார் பள்ளியில், நான்காம் வகுப்பு படிக்கிறார்.
பதக்கம்
சிலம்பத்தில் ஆர்வமுடைய இவர், மாவட்ட, மாநில, தேசிய அளவில், 50க்கும் மேற்பட்ட பதக்கங்களை குவித்துள்ளார். கடந்த மாதம், கன்னியாகுமரியில், தெற்காசிய சப் - ஜூனியர் மற்றும் நாகர்கோவிலில் நடந்த ஆசிய போட்டியில், தங்கப்பதக்கம் வென்றார். அக்., 3ல், ஆசிய நாடான, மலேஷியா தலைநகர், கோலாலம்பூரில் நடக்கும், சப் - ஜூனியர் உலக கோப்பையில், இந்திய அணி சார்பில் பங்கேற்க, தேர்வு செய்யப்பட்டுள்ளார்.ராபிதா, உடன் செல்லும் முகம்மது ஹரீஷ் ஆகியோரின் பயண செலவுக்கு, 1.20 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது.
வசதியில்லை
முகம்மது ஹரீஷ் கூறுகையில், ''மளிகை கடையில் கிடைக்கும் வருவாய் மூலம், தேசிய, தெற்காசிய போட்டிகளில், மகளை பங்கேற்க செய்ததால், பதக்கங்களை குவித்தார். ''அவர், உலக கோப்பை போட்டிக்கு தேர்வானது மகிழ்ச்சியளித்தாலும், அழைத்து செல்ல பண வசதி இல்லை. தன்னார்வ அமைப்பு, பொதுமக்கள் உதவினால், மகள் சாதிக்க வாய்ப்பு கிடைக்கும்,'' என்றார்.உதவ நினைப்பவர்கள், 79048 79438, 99761 18378 என்ற மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE