தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக, இடைத்தேர்தல் நடக்க உள்ள, இரண்டு சட்டசபை தொகுதிகளிலும், தீபாவளி கவனிப்பு, பலமாக இருக்கும் என்ற, எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதை தடுக்க, சோதனைகளை தீவிரப்படுத்த, தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில், காலியாக உள்ள, நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கு, அடுத்த மாதம், 21ல், இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இரு தொகுதிகளிலும் நேற்று, வேட்பு மனு தாக்கல் துவங்கியது.இடைத்தேர்தல் என்றாலே, 'கவனிப்புகள்' தான் முக்கியத்துவம் பெறும். வழக்கம்போல், இரு தொகுதிகளிலும், அனைத்து மாவட்ட நிர்வாகிகளையும், தேர்தல் பணியில் ஈடுபடுத்த, அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., முடிவு செய்துள்ளது.
விக்கிரவாண்டி தொகுதியில், அ.தி.மு.க., - தி.மு.க., இடையிலும், நாங்குநேரி தொகுதியில், அ.தி.மு.க., - காங்கிரஸ் இடையிலும், நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. இரு கட்சிகளிலும், முக்கிய நிர்வாகிகளுக்கு, குறிப்பிட்ட பகுதிகளை பிரித்துக் கொடுத்து, ஆதரவு திரட்ட வலியுறுத்துவது வழக்கம்.அவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் உள்ள, வாக்காளர்களை வளைத்து, தங்கள் கட்சிக்கு, ஓட்டுகளை பெற்றுத் தர வேண்டும். எனவே, அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் உள்ள, வாக்காளர்களின் தேவைகள் அனைத்தையும் செய்து தருவர்.
அச்சம்
அடுத்த மாதம், 27ம் தேதி, தீபாவளி பண்டிகை வர உள்ளதால், அதற்கு ஒரு வாரம் முன் நடக்கும், இடைத் தேர்தல், 'தீபாவளி தேர்தல்' ஆக அமையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப, ஆளும் தரப்பிலும், எதிர் தரப்பிலும், 'கவனிப்புகள்' பலமாக இருக்கும் என, இரு தொகுதி வாக்காளர்களும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.வாக்காளர்கள், மகிழ்ச்சியாக உள்ள நிலையில், இரு தொகுதிகளிலும் உள்ள வியாபாரிகள், கவலை அடைந்துள்ளனர். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் என்பதால், வியாபாரத்திற்கு பொருட்களை வாங்கி வருவதும், எடுத்துச் செல்வதும் சிரமமாக இருக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
அதேபோல், தீபாவளி, 'சீட்' பிடித்தவர்கள், பணம் கட்டியவர்களுக்கு, பொருட்களை வாங்கி வருவதிலும் சிக்கல் ஏற்படும். இது குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, சத்யபிரதா சாஹு கூறியதாவது:இரு தொகுதிகளிலும், தேர்தல் நடத்தை விதிகள், அமலில் உள்ளன. வாகன சோதனை நடத்த, இரு தொகுதிகளிலும், தலா, மூன்று பறக்கும் படைகள், மூன்று நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அறிவுரைகள்
இது தவிர, விழுப்புரம் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள, மற்ற சட்டசபை தொகுதிகளில், தலா, ஒரு பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.இரு தொகுதிகளிலும், பொருட்களை எடுத்து செல்வோர், உரிய ஆவணங் களுடன் சென்றால், எந்த பிரச்னையும் இல்லை. ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லும் பொருட்கள், பறிமுதல் செய்யப்படும். இது தொடர்பாக, இரண்டு மாவட்ட கலெக்டர்களுக்கும், உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.
ஓட்டுச்சாவடிகள் தயார்!
நாங்குநேரி தொகுதியில், 1.27 லட்சம் ஆண்கள்; 1.29 லட்சம் பெண்கள்; மூன்று திருநங்கையர் என, மொத்தம், 2.56 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் ஓட்டளிக்க, 299 ஓட்டுச்சாவடிகள், 170 இடங்களில் அமைக்கப்பட்டு உள்ளன.
விக்கிரவாண்டி தொகுதியில், 1.11 லட்சம் ஆண்கள்; 1.11 லட்சம் பெண்கள்; 25 திருநங்கையர் என, மொத்தம், 2.22 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் ஓட்டளிக்க, 275 ஓட்டுச்சாவடிகள், 139 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.இரு தொகுதிகளிலும், வாக்காளர்கள் ஓட்டளித்ததும், அந்த சின்னம் அச்சாவதை பார்க்கும் வசதி உள்ள, வி.வி.பாட் ஓட்டுப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது. விக்கிரவாண்டி தொகுதியில், பெண் வாக்காளர்களை விட, ஆண் வாக்காளர்கள், 10 பேர், கூடுதலாக உள்ளனர். நாங்குநேரி தொகுதியில், ஆண்களை விட, 2,357 பெண் வாக்காளர்கள், கூடுதலாக உள்ளனர்.- நமது நிருபர் -