கஞ்சாவும், சரக்கும் சர்வீஸ்சு... கொஞ்சமும் அசராத சிட்டி போலீசு!

Updated : செப் 25, 2019 | Added : செப் 24, 2019
Share
Advertisement
மேகங்கள் சூழ்ந்த மாலை வேளை ஒன்றில், சித்ராவும், மித்ராவும் மங்கலம் ரோடு வழியாக சென்று கொண்டிருந்தனர்.''11 லட்சம் ரூபாய் பாக்கிஇருக்குதாம்... எப்படி வசூலிக்கிறதுனு தெரியாம, மின்வாரிய அதிகாரிகள் 'திருதிரு'ன்னு முழிச்சிட்டு இருக்காங்களாம்,'' என ஆரம்பித்தாள் சித்ரா.''என்னக்கா சொல்றீங்க?''''ஆமாண்டி. பழைய கலெக்டர் ஆபீசு கேம்பஸ்ல, கேபிள் 'டிவி' நிறுவனத்தோட
கஞ்சாவும், சரக்கும் சர்வீஸ்சு... கொஞ்சமும் அசராத சிட்டி போலீசு!

மேகங்கள் சூழ்ந்த மாலை வேளை ஒன்றில், சித்ராவும், மித்ராவும் மங்கலம் ரோடு வழியாக சென்று கொண்டிருந்தனர்.
''11 லட்சம் ரூபாய் பாக்கிஇருக்குதாம்... எப்படி வசூலிக்கிறதுனு தெரியாம, மின்வாரிய அதிகாரிகள் 'திருதிரு'ன்னு முழிச்சிட்டு இருக்காங்களாம்,'' என ஆரம்பித்தாள் சித்ரா.
''என்னக்கா சொல்றீங்க?''

''ஆமாண்டி. பழைய கலெக்டர் ஆபீசு கேம்பஸ்ல, கேபிள் 'டிவி' நிறுவனத்தோட 'கன்ட்ரோல் ரூம்' இருக்கு. அதுக்கு, மார்க்கெட் கமிட்டிக்கு வாடகையும் கொடுக்கல; மின் கட்டணமும் கட்டாம காலம் கடத்தியிருக்காங்க''
''2017ல் இருந்து, 11 லட்சம் ரூபாய், மின்கட்டண பாக்கி வச்சிருக்காங்க. எப்படியாவது, பணம் கட்டிடுங்கனு, மின்வாரிய அதிகாரிகள் சொல்றாங்களாம்,''
''வழக்கமா கட்டிடுவாங்கதானே''
''அப்பவெல்லாம், டிமாண்ட் நோட்டீஸ் கொடுத்தா, கேபிள் தாசில்தார் அக்கவுண்ட்ல பணம் போட்டுடுவாங்க, பில் கட்டுவாங்களாம். திடீர்னு, 'உங்க கைக்காச போட்டு கட்டுங்க; நாங்க கொடுத்திடறோம்னு,' சொல்லியிருக்காங்க; கட்ட முடியாதுனு, தாசில்தாருங்க 'எஸ்கேப்' ஆகிட்டதால, பென்டிங் ஆயிடுச்சாம்,'' விளக்கினாள் சித்ரா.

அப்போது, ஆண்டிபாளையம் குளத்தில், தண்ணீர் நிரம்பி ரம்மியமாக காட்சியளிக்கிறது. கரையோரம் இருந்த மரத்தின் கீழ் வண்டியை நிறுத்திய சித்ரா, ''பாருடி, எவ்ளோ சூப்பரா இருக்கு?'' என்றாள்.
''உண்மைதாங்க. பென்டாஸ்டிக். இந்த குளத்தை எவ்ளோ அழகா இயற்கை ஆர்வலர்கள் பராமரிக்கிறாங்க. ஆனா, இந்த அதிகாரிங்கதான் ரொம்பத்தான் படுத்துறாங்க,''
''எங்கே?''ஆர்வமாக கேட்டாள் சித்ரா.

''குளம்னு ரெக்கார்டு இருக்கற இடத்துல, கார்ப்ரேஷன்காரங்க, குடிநீர் தொட்டி, குப்பை உரம் உற்பத்தி தொழிற்சாலைனு கட்டி முடிச்சுட்டாங்க. விவசாயிங்க, இதற்கான 'ரெக்கார்டு' எடுத்துட்டுப்போயி, ரெவின்யூ ஆபீசர்களிடம் பேசியிருக்காங்க''
''அதுக்கு அவங்க என்ன சொன்னாங்களாம்?''
''கார்ப்ரேஷன்காரங்க, 70 லட்சம் ரூபா செலவு பண்ணி கட்டுனதா, கணக்கு காட்டியிருக்காங்க. ஒரு ஆர்டர் போட்டா, இடிச்சு தள்ளிடுவாங்க. ஆனால், 'ரிட்டயர்டு' ஆகறப்ப, இந்த 'கேஸ்' எங்களை 'குளோஸ்' பண்ணிடும். அதனால, கோர்ட் மூலமா நிவாரணம் தேடிக்கோங்கன்னு, ஒரு உயரதிகாரி திட்ட வட்டமா சொல்லிட்டாராம். அவரு சொன்ன மாதிரியே, பொதுநல வழக்கு போடலாமுன்னு, விவசாயி சங்கத்தினர் யோசனை பண்றாங்களாம்...''
''அதிகாரிகளே இப்படி பண்ணா, மக்களை என்னன்னு சொல்றது?'' என்ற சித்ரா, வண்டியை ஸ்டார்ட் செய்தாள்.

''ஏங்க்கா... ஆளுங்கட்சியில் கோஷ்டி கானம் கேட்டுதா?''
''இல்லையே மித்து. என்ன மேட்டர்?''
''அ.தி.மு.க., சார்பில், பகுதி வாரியாக கூட்டம் நடத்தறாங்க. அதுல, 'சவுத்' எல்லைக்குள்ள என்னை கேட்காம கூட்டம் நடத்தக்கூடாதுனு, எம்.எல்.ஏ., சவுண்ட் போட்டாராம். அதையும் மீறி கூட்டம் போட்டா, எந்த 'ஹெல்ப்'பும் பண்ண வேணாம்னு, தன்னோட ஆட்களுக்கு ஓப்பனாவே ஆர்டர் போட்டாராம்''
''இதை தெரிஞ்சிகிட்ட மாஜி, 'சவுத்' மேல, தலைமையில புகார் வாசிச்சிட்டாராம். 'கட்சிக்கு யார் வேலை செய்யலைன்னாலும், 'லிஸ்ட்' கொடுங்க. பார்த்துக்கலாம்'னு சி.எம்., மிரட்டல் பாணியில சொன்னாராம்,''
''கரெக்ட்தாண்டி. கோஷ்டி பிரச்னை இருந்தா, உள்ளாட்சி தேர்தல் வந்தா, என்ன பண்ணுவாங்களாம்?'' என்ற மித்ரா, மங்கலம் போலீஸ் ஸ்டேஷன் ரோட்டில் வண்டியை ஓட்டினாள்.

ஸ்டேஷனை பார்த்தவுடன் சித்ரா, ''மித்து, கமிஷனரை பத்தி, ஒருத்தர் ஸ்டேட்டஸ் போட்டாராம். அதை அழிச்சிடுங்கன்னு, அவரை டார்ச்சர் பண்ணாங்களாம்,''
''யாருங்க்கா அந்த தைரியசாலி?''
''அட, அவர் லோக்கல்தான். 'கலெக்டரை மாத்தின மாதிரி, 'சிட்டி' போலீஸ் கமிஷனர உடனே மாத்துங்க'ன்னு, 'பேஸ்புக்'கில், ஸ்டேட்டஸ் பதிவிட்டாராம்,''
''அடுத்த சில நிமிஷத்தில், கமிஷனர் 'ஆபீஸ்'க்கு தகவல் போயிருக்கு. உடனே, சம்பந்தப்பட்ட நபரை போனில் கூப்பிட்டு, 'அந்த பதிவை நீக்கிடுங்க'ன்னு சொன்னதுக்கு, 'முடியாது'ன்னு சொல்லி, லைனை 'கட்' பண்ணிட்டாராம்,''
''அக்கா... உண்மை எப்போதும் கசக்கத்தானே செய்யும். சிட்டியில, நடக்கற லாட்டரி, 24 ஹவர்ஸ் சரக்கு, கஞ்சா, இப்படி பல சட்ட விரோத செயல்களை கண்ட்ரோல் பண்ண மாதிரியே தெரியலைன்னு, 'பப்ளிக்' பேச ஆரம்பிச்சிட்டாங்க,''
''ஆமாண்டி, பேசாம என்ன பண்ணுவாங்க. வெளிய எங்கேயும், தலைகாட்டாம, ஆபீசிலயே இருக்றாராம். நாலு இடத்துக்கு போனாதான், போலீஸ்காரங்களை பத்தி தெரியும்,'' சித்ரா கோபமாக பேசினாள்.

அப்போது, வஞ்சிபாளையம் ரயில்வே பாலம் அருகில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். ஏட்டு ஒருவர், நிறுத்துமாறு சைகை காட்டவே, வண்டியை நிறுத்தி ஆவணங்களை காட்டி விட்டு வந்த சித்ரா, வண்டியை ஸ்டார்ட் செய்தாள்.
''ஏன்... மித்து. 'டீ' சங்க எலக்ஷன் சுமூகமாக முடிஞ்சிடுச்சு போல...''
''ஆமாங்க்கா.. எலக்ஷன் முடிஞ்சிடுச்சு.. ஆனால்...''
''என்னடி... ஆனா..ன்னு இழுக்கறே!''
''பொது செயலாளர் பதவிக்கு போட்டி வந்தது. ஒருத்தர்கிட்ட ஒரு குரூப் பேசி, வாபஸ் வாங்க வெச்சிட்டாங்க. அவரும். ஓ.கே.,ன்னு சொல்லிட்டு விலகிட்டார்.''
''அவர், நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவிச்சு, ஒரு லெட்டர் எழுதியிருக்காரு. அதில், 'டீ' சங்கம், அதன் கல்லுாரி என, ரெண்டிலும், ஒரே நிர்வாகம்தான் நடக்குது. கல்லுாரி வரவு செலவு ஆவணங்களை கேட்டால், 'கோர்ட்டில்' பார்த்துக்கோங்க' என்று, சொல்கின்றனர்,'
என கொட்டித்தீர்த்து விட்டாராம்,''
''அப்புறம் என்ன ஆச்சு...''
''இப்போ, இந்த லெட்டர்தான், எல்லா நிர்வாகிகளிடமும் சலசலப்பை ஏற்படுத்திடுச்சாம்,''
''மித்து, பலமே ஒற்றுமையா இருக்கறதுதான். அனைவரும் ஒன்றுகூடி, கரம் கோர்த்து, லட்சம் கோடி ரூபாய் வர்த்தகம் என்ற லட்சியத்தை அடைய வேண்டும்,' என்பதையே, பல எக்ஸ்போர்ட்டர்ஸ் விரும்புறாங்களாம்,''
''கரெக்டா சொன்னீங்க்கா,'' என்று கூறிய மித்ரா, ''அக்கா... அந்த பேக்கரியில ஏலக்காய் டீ குடிச்சிட்டு போலாம்,'' என்றாள்.

சித்ராவும், ''ஆம்... எனக்கு டீ குடிக்கலாமுன்னு தோணுச்சு,'' என்றவாறே வண்டியை நிறுத்தினாள். இருவரும் கடைக்குள் சென்று, டீ சொல்லி விட்டு, உட்கார்ந்தனர்.
''டிராபிக் ராமசாமியால், சிட்டி போலீசும், கார்ப்ரேஷன் அதிகாரியும் அலறியது, கேட்டுச்சா?'' என்றாள் மித்ரா.
''ம்...ம்...பல்லடம் ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்பு முழுவதையும் அகற்றணும்னு சொல்லி டிராபிக் ராமசாமி, கார்ப்ரேஷன்ல மனு கொடுத்தார். ஆனால், 'அது ஹைவேஸ் வேலைங்க,' என்று அதிகாரி மழுப்பினார்,''
''நம்மாளு விடுவாரா? உடனே, ஹைவேஸ் அதிகாரிக்கு போன் போட்டுட்டாரு.
''கார்ப்ரேஷன்தான் நடவடிக்கை எடுக்கோணும்'னு, அங்கிருந்த பெண் அதிகாரி பதில் சொன்னாராம். இதை கேட்ட இன்ஜினியருக்கு முகத்தில் ஈயாடவில்லையாம்,''
''ஆக்கிரமிப்பு எடுக்கலைன்னா, நான் கேஸ் போட்டுடுவேன்னு' சொல்லிட்டு டிராபிக் கிளம்பிட்டாராம். 'என்ன பண்றதுன்னு', ஒரு டீமே டிஸ்கஷன் பண்ணுதாம்,'' என்றாள் சித்ரா.
பேக்கரியில், 'பில்' செட்டில் செய்து, இருவரும் கிளம்பினர். அப்போது, பள்ளி மாணவர்கள், லேப்-டாப் சகிதம் சென்றனர்.

அதைப்பார்த்த, மித்ரா, ''அக்கா... லேப்-டாப் பார்த்ததும், ஞாபகம் வருது. 15 ஸ்கூலுக்கு கொடுக்கறதுக்கு, 'லேப்-டாப்' வந்திடுச்சு. ஆனா, இன்னும் கொடுக்கலை. இதுக்கு, ராப்பகலா, போலீஸ் வேற பாதுகாப்பா இருக்கு. மேலிடத்திலிருந்து ஆர்டர் வந்தாதான் கொடுப்பாங்களாம்,''
''சாமி வரம் கொடுத்தாலும், பூசாரி கொடுக்கலைங்கறது இதுதானா...?'' என்று கூறி சிரித்தாள் சித்ரா.
வண்டியை முறுக்கிய சித்ராவிடம், ''அக்கா... ஒரே நோட்டீசில், ரெண்டு பேரிடம் அபராதம் வசூல் பண்ண கூத்து நடந்தது தெரியுங்களா?''என்றாள் மித்ரா.

''அட.. அதெங்கடி?''
''ரெண்டு நாளைக்கு முன்னாடி, ஆத்துப்பாளையம் மின் மயானம் பக்கத்தில, வாகன சோதனை நடந்தது. அப்போ, 'ஹெல்மெட்' இல்லாமல் வந்த ரெண்டு பேரை பிடிச்சு, ஒவ்வொருத்தர்கிட்டயும், ஆயிரம் ரூபாய் வாங்கிட்டு, ஒரே நோட்டீசில், ரெண்டு பேரின் பேரை எழுதி கொடுத்திட்டாங்களாம்,''
''அதில, எஸ்.ஐ., கையெழுத்து இல்லாம, வெறும் 'சீல்' மட்டுமே இருந்தது. நோட்டீஸ் ஒரிஜினலா அல்லது டூப்ளிகேட்டான்னு சந்தேகம் வந்ததில், சம்பந்தப்பட்ட நபர், போலீசிடம் கேட்டிருக்கார்,''
''உடனே, கோபப்பட்ட போலீஸ்காரர், 'ஒழுங்கு மரியாதையா போயிடு. இல்லேன்னா, வேற ஏதாவது கேஸ் போட்டு, உள்ளே தள்ளிடுவேன் மிரட்டினாராம்,''
''வர...வர.. இந்தமாதிரி போலீசாரோட ஆட்டம் ஜாஸ்தியாயிட்டே போகுது. பெரிய அதிகாரி வழக்கம்போல, எதையும் கண்டுக்கறதில்லை. சிட்டியில இப்படின்னா, ரூரலில் இதைவிட மோசமாக இருக்குதுடி,'' என்றாள் சித்ரா.

''ஏங்க்கா.. என்னாச்சு?''
''காளைகளுக்கு பேர் போன ஊரில், விவசாயி ஒருவர் தனது தோட்டத்தில் 'போர்வெல்' போட்டாராம். பக்கத்து தோட்டத்துக்காரர், எதிர்ப்பு தெரிவிச்சு, ஆளுங்கட்சி புள்ளியிடம் கூறவே, அவரும், ஸ்டேஷனுக்கு போன் போட்டு, 'இளம்' அதிகாரியிடம் சொல்லியிருக்கார்,''
''உடனே, அந்த அதிகாரியும், விவசாயி, 'போர்வெல்' மெஷின்காரரை கூப்பிட்டு, 'போர்' போடக்கூடாதுன்னு மிரட்டினாராம். மித்து, அதிகாரிக்கு, சொந்த ஊர், அதே ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதி என்பதால் குறுநில மன்னர்போல, ஆட்சி செய்து வருகிறார்,''
''ஸ்டேஷனுக்கு புகார் கொடுக்க வரும் மக்களிடம், வயது, வித்தியாசம் பார்க்காமல், 'வாய்யா... போய்யா'ன்னு, சாதிக்க வேண்டிய வயசுல, இப்படி ஆட்டம் போடற அதிகாரியை, 'கோவிந்தராஜ பெருமாளே...' நீதான் காப்பத்தணும்,'' என்ற சித்ரா, வழியிலிருந்த பெருமாள் கோவிலை பார்த்து கும்பிட்டாள்.

''என்னக்கா, இவ்ளோ டிராபிக்கா இருக்குது''
''ஆமாண்டி, டெய்லியும் இப்படித்தான் இருக்குது. ஆனா, இதை கட்டுப்படுத்த வேண்டிய 'குளுகுளு' அதிகாரி, தன்னோட 'ஸ்டேட்டஸ்' என்னன்னு தெரிந்தும் கூட, மணிக்கணக்கில் ஒரே இடத்தில உட்காந்துக்கிறாராம். எவ்ளோ வேலை இருந்தாலும், நல்லா ஓய்வெடுக்கறதே அவருக்கு முழுநேரடியூட்டியா போயிடுச்சாம்,''
''ஓ... விஷயம் அப்படி போகுதா? அக்கா... சிட்டி முழுவதும் இப்படித்தான் கதை போகுது. அதிகாரி, சாட்டையை கையில் எடுத்தாத்தான் பரவாயில்லை,''
''ம்...ம்.... அவருதான் எதையுமே கண்டுக்க மாட்டேங்குறாரே?'' என்ற சித்ரா, ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் முன் வண்டியை நிறுத்தி விட்டு, உள்ளே நுழைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X