புதுடில்லி : பதன்கோட் உள்ளிட்ட 4 முக்கிய விமானப்படை தளங்களை தாக்க பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இந்த விமானப்படை தளங்களில் பாதுகாப்பை தீவிரப்படுத்தவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

பாக்.,ஐ சேர்ந்த பயங்கரவாத குழுக்கள் செப்.,25 முதல் 30 ம் தேதிக்குள் இந்த தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதால், விமானப்படை தளங்களில் உச்சகட்ட பாதுகாப்பை உறுதி செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆக.,5 ம் தேதி காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை அடுத்து பாக்., ராணுவத்தால் பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் அவ்வப்போது அனுப்பப்பட்டு வருகின்றனர். விமானப்படை தளம் அல்லது முக்கிய தலைமையகங்களில் பெரிய அளவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

பதன்கோட் மற்றும் உதம்பூர் விமானப்படை தளம் உள்ளிட்ட இடங்களை மர்ம நபர் ஒருவர் கண்காணித்து சென்றதை அடுத்து பாதுகாப்புப்படை மையங்களில் பாதுகாப்பை அதிகரிக்கும்படி ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 2016 ம் ஆண்டு பதன்கோட்டில் ஜெய்சி-இ-முகம்மது பிதாயீன் அமைப்பினர் 3 நாட்கள் நடத்திய தாக்குதலை போன்று மீண்டும் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
8 முதல் 10 ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் நுழைந்து காஷ்மீர் மற்றும் அதனை சுற்றி உள்ள விமானப்படை தளங்களில் தற்கொலைப்படை தாக்குதலை நடத்தலாம். ஸ்ரீநகர், அவந்திபுரா, ஜம்மு, பதன்கோட், ஹிண்டன் ஆகிய விமானப்படை தளங்களுக்க ஆரஞ்சு அலர்ட் அடிப்படையில் தீவிர பாதுகாப்பு போட வேண்டும்.
அச்சுறுத்தல் காரணமாக 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் மூத்த அதிகாரிகள் ஈடுபட வேண்டும். ஜெய்ஷி இ முகம்மது இயக்க பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை கண்காணித்ததன் அடிப்படையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது எனவும் உளவுத்துறை தெரிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE