நீட் நுழைவுத் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த உதித் சூர்யா கைது!| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'நீட்' நுழைவுத் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த உதித் சூர்யா கைது!

Updated : செப் 26, 2019 | Added : செப் 25, 2019 | கருத்துகள் (72)
Share
 நீட், நுழைவுத் தேர்வு, ஆள் மாறாட்டம்,உதித் சூர்யா, கைது

'நீட்' நுழைவுத் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து, மருத்துவ கல்லுாரியில் சேர்ந்த விவகாரத்தில், குடும்பத்துடன் தலைமறைவான, மாணவர் உதித் சூர்யாவை, தனிப்படை போலீசார், திருப்பதியில் சுற்றி வளைத்தனர். பின், உதித் சூர்யா கைது செய்யப்பட்டு, சென்னை, சி.பி.சி.ஐ.டி., போலீஸ் விசாரணைக்குஒப்படைக்கப்பட்டார்.

சென்னை, தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர், டாக்டர் வெங்கடேசன்; ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி, கயல்விழி. இவர்களது மகன், உதித் சூர்யா, 21.இரண்டு ஆண்டுகளுக்கு முன், பிளஸ் 2 முடித்த, உதித் சூர்யாவை, டாக்டராக்க வேண்டும் என, வெங்கடேசன் விரும்பினார். ஆனால், இரண்டு முறை, 'நீட்' நுழைவுத் தேர்வு எழுதியும், உதித் சூர்யா தேர்ச்சி பெறவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த, வெங்கடேன், மூன்றாவது முயற்சியாக, மே, 5ம் தேதி நடந்த, நீட் தேர்வில், உதித் சூர்யாவை பங்கேற்க வைத்துள்ளார்.

இந்த தேர்வில், உதித் சூர்யா, 385 மதிப்பெண்கள் பெற்று, தேனி அரசு மருத்துவ கல்லுாரியில் சான்றிதழ்கள் சமர்ப்பித்து, எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்ந்துள்ளார். இவர், மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில், வேறு ஒருவரை தேர்வு எழுத வைத்து, தேர்ச்சி பெற்றதும், ஆள்மாறாட்டம் செய்து, எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்ந்ததும் தெரிய வந்தது. இது தொடர்பாக, தேனி மருத்துவ கல்லுாரி, 'டீன்' ராஜேந்திரனுக்கு, 'இ - மெயிலில்' புகார் வந்தது.

இதையடுத்து, தேனி மருத்துவ கல்லுாரி பேராசிரியர்கள், உதித் சூர்யாவின் சான்றிதழ்களை சரிபார்த்தனர். அப்போது, உதித் சூர்யாவின், 'நீட்' தேர்வு ஹால்டிக்கெட்டில், வேறு ஒருவரின் புகைப்படம் இருப்பது தெரிய வந்தது.இதற்கிடையில், 'மன அழுத்தம் காரணமாக, எனக்கு படிக்க பிடிக்கவில்லை' என, உதித் சூர்யா, கல்லுாரி நிர்வாகத்திடம் கடிதம் எழுதி கொடுத்துள்ளதும், சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து, ராஜேந்திரன், தேனி மாவட்ட போலீசாரிடம் புகார் அளித்தார்.அம்மாவட்டத்தை சேர்ந்த, க.விலக்கு போலீசார், உதித் சூர்யா மீது வழக்குப் பதிந்து, தீவிரமாக தேடி வந்தனர். சென்னை, தேனாம்பேட்டையில் வசித்து வந்த உதித் சூர்யா, பெற்றோருடன் தலைமறைவானார். மேலும், உதித் சூர்யாவுக்கு, முன்ஜாமின் பெறும் முயற்சியும் நடந்தது.

இந்நிலையில், நீட் தேர்வு ஆள்மாறாட்டம் குறித்த வழக்கை, சி.பி.சி.ஐ.டி., போலீசாரின் விசாரணைக்கு மாற்றி, டி.ஜி.பி., திரிபாதி உத்தரவிட்டார். சி.பி.சி.ஐ.டி, - எஸ்.பி., விஜயகுமார் தலைமையிலான போலீசாரும், உதித் சூர்யாவை தேடி வந்தனர். இந்நிலையில், பெற்றோருடன் உதித் சூர்யா, திருப்பதியில் பதுங்கி இருப்பதாக, தேனி மாவட்டம், க.விலக்கு காவல் நிலைய தனிப்படை போலீசாருக்கு, தகவல் கிடைத்தது. அங்கு விரைந்த தனிப்படையினர், ஒரு வீட்டில் பதுங்கி இருந்த, உதித் சூர்யா மற்றும் பெற்றோரை, சுற்றி வளைத்து பிடித்தனர்.

பின், உதித் சூர்யாவை கைது செய்து, மூவரையும், சென்னை, எழும்பூரில் உள்ள, சி.பி.ஐ.டி., அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். பல மணி நேர விசாரணைக்கு பின், உதித் சூர்யா, தேனிக்கு அழைத்து செல்லப்பட்டார்; பெற்றோரும் உடன் சென்றுள்ளனர்.

இதுகுறித்து, சி.பி.சி.ஐ.டி., போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:தேனி மாவட்ட, சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில், இன்று ஆஜராக வேண்டும் என, உதித் சூர்யா மற்றும் அவரது பெற்றோருக்கு, 'சம்மன்' அளித்துள்ளோம். முறைப்படி உதித் சூர்யாவை கைது செய்து, ஆள்மாறாட்டம் பின்னணியில் இருக்கும் கும்பல் குறித்து விசாரிக்க உள்ளோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்விதேனி மருத்துவக் கல்லுாரியில், ஆள் மாறாட்டம் செய்து சேர்ந்ததாக, மாணவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் நிலை பற்றி, தமிழக அரசு பதில் அளிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

தமிழக மருத்துவக் கல்லுாரிகளில், வெளிநாட்டில் வசிக்கும் இந்தியருக்கான ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பப்படாததால், காலியான, 207இடங்களை, நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் நிரப்ப, தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனு, தள்ளுபடி செய்யப்பட்டது.இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டு மனுவை விசாரித்த, நீதிபதிகள், கிருபாகரன், வேல்முருகன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:

மருத்துவக் கல்லுாரிகளில் சேர, தேர்வு எழுதும் மாணவர்களிடம், தகுந்த நடைமுறை பின்பற்றப்படுகிறதா என்பதை, இந்த நீதிமன்றம் அறிய விரும்புகிறது. வெளிநாட்டில் வசிக்கும் இந்தியருக்கான ஒதுக்கீடு; மாநில ஒதுக்கீடு; அகில இந்திய ஒதுக்கீடு ஆகியவற்றின் கீழ் சேர்க்கப்பட்ட மாணவர்களின் பட்டியல்; அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் விபரங்களை, அரசு தாக்கல் செய்ய வேண்டும்.மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு, 'நீட்' எனப்படும் தகுதி தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து, தேனி மருத்துவக் கல்லுாரியில் சேர்ந்ததாக, மாணவருக்கு எதிராக, வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. கீழ்க்கண்ட கேள்விகளுக்கு, தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும்:

* ஆள் மாறாட்டம் வாயிலாக, மருத்துவக்கல்லுாரிகளில் எத்தனை பேர் சேர்ந்துள்ளனர்?

* நீட் தேர்வு எழுதியவர்கள்; மருத்துவக்கல்லுாரிகளில் அனுமதிக்கப்பட்டவர்களின் சுய அடையாளங்களை, அதிகாரிகள் சரிபார்த்தனரா?

* ஆள் மாறாட்டம், மோசடி, ஏதாவது கண்டுபிடிக்கப்பட்டதா?

* ஆள்மாறாட்ட மோசடி செய்து, தேனி மருத்துவக் கல்லுாரியில் சேர்ந்ததாக, மாணவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் நிலை என்ன?

* மோசடி செய்து, மருத்துவக் கல்லுாரியில் சேர அனுமதி பெற்றது தெரிந்தும், குறித்த நேரத்தில், தேனி மருத்துவக் கல்லுாரி முதல்வர் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது உண்மையா?

* மாணவர்களின் அடையாளத்தை சரிபார்த்து, தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டதில் இருந்து, சட்டப்படியான நடைமுறையை, அதிகாரிகள் பின்பற்றினரா?

* இரட்டை வசிப்பிட சான்றிதழ் போன்று, வேறு ஏதாவது மோசடி வழிமுறைகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளனவா?விசாரணை, 26ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

- நமது நிருபர் -

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X