15 ஆண்டுக்கு பின் மீண்டும் ராமதாஸ் - ரஜினி மோதல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

15 ஆண்டுக்கு பின் மீண்டும் ராமதாஸ் - ரஜினி மோதல்

Updated : செப் 29, 2019 | Added : செப் 28, 2019 | கருத்துகள் (32)
ராமதாஸ்,ரஜினி, மோதல்

நடிகர் ரஜினியும், அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரும், மும்பையில் சந்தித்து பேசியது தொடர்பாக, பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் விமர்சனம் செய்திருந்தார். அதற்கு, ரஜினி ரசிகர்கள் பதிலடி தந்துள்ளதால், பா.ம.க., - ரஜினி இடையே,
மீண்டும் மோதல் வெடித்துள்ளது.


ரகளைகடந்த, 2002ல், ரஜினி நடித்த, பாபா படம் வெளியானது. அப்படத்தில் ரஜினி, சிகரெட் பிடிக்கும் காட்சி இடம் பெற்றதால், பா.ம.க., தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 'இளைஞர்களை கெடுக்கும், இதுபோன்ற காட்சியில், ரஜினி நடிக்கக் கூடாது' என, ராமதாஸ் எச்சரித்தார்.
அதையடுத்து, பாபா படம் ஓடிய தியேட்டர்களில், பா.ம.க.,வினர் புகுந்து, ரகளையில் ஈடுபட்டனர். பா.ம.க.,வினர் - ரஜினி ரசிகர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

இதனால், 2004 லோக்சபா தேர்தலில், பா.ம.க., போட்டியிட்ட தொகுதிகளில், ரஜினி ரசிகர்கள், எதிர் பிரசாரம் செய்தனர். ஆனாலும், அந்த தேர்தலில், பா.ம.க., அமோக வெற்றி பெற்றது. காங்கிரஸ் தலைமையிலான மத்திய அமைச்சரவையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக, அன்புமணி பொறுப்பேற்றார். 'சினிமாவில், புகை பிடிக்கும் காட்சியில், நடிகர்கள் நடிக்கக் கூடாது' என, உத்தரவிட்டார்.

பின், ரஜினி நடித்த படங்களில், புகை பிடிக்கும் காட்சி தவிர்க்கப்பட்டது. அதன்பின், சமரசம் ஏற்பட்டு, ராமதாஸ் வீட்டு விசேஷத்திற்கு, ரஜினி வந்தார்; ரஜினி வீட்டு விசேஷத்திற்கு, ராமதாஸ்சென்றார்.

இந்நிலையில், சமீபத்தில் மும்பையில் நடந்த, ரஜினி - பிரசாந்த் கிஷோர் சந்திப்பு தகவல் வெளியானது. இச்சந்திப்பு குறித்து, ராமதாஸ் தன், 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:

அண்ணே... பிரசாந்த் கிஷோரை பார்த்தீங்களா...?

இல்லப்பா... அங்க நமக்கு முன்னாடி, 100 பேர், கியூவில் நிற்கிறாங்களாம். நமக்கு, 'டோக்கன்' நம்பர், 101 தான். அதான் அப்புறம் போகலாம்னு திரும்பிட்டேன்.இவ்வாறு, அதில் கூறியுள்ளார். ரஜினியை கிண்டல் செய்து, ராமதாஸ் வெளியிட்ட, 'டுவிட்டர்' பதிவு, ரஜினி ரசிகர்கள் வட்டாரத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளங்கள் வாயிலாக, ராமதாசை வசைபாடி, பதிலடி கொடுத்து வருகின்றனர். அதன் விபரம்:

*முதல்வர், இ.பி.எஸ்., உடன் கூட்டணி வைத்து விட்டு, பிரசாந்த் கிஷோரை பார்க்க, 'வெயிட்' பண்ணின நீங்க, இப்போ அவரையே நக்கல் செய்யலாமா... அ.தி.மு.க., கூட்டணிக்கு, கொஞ்சம் உண்மையாக இருங்க

* அண்ணே... எங்கண்ணே போறீங்க?இந்த தேர்தல்ல, ரஜினி கட்சியில, கூட்டணி வைக்க, போயஸ் கார்டனுக்கு போறேன். என்னண்ணே... ரஜினி உங்களோட கூட்டணி வச்சிட்டாரா? அதை ஏன் கேக்கிறீங்க... போன வேகத்துல ஓடி வந்துட்டேன்...

* நாளைக்கு, ரஜினி அரசியலுக்கு வரும்போது, முதல் ஆளா, வரிசையில நிக்க போறீங்க... அப்ப, இந்த முகத்தை துாக்கி எங்கே வைப்பீங்க...?

* கண்ணுங்களா இது, பாபா படம் ரிலீஸ் ஆண்டு இல்லை. இப்ப நாங்க எல்லாம், 'டிரவுசர்' போடுவதும் இல்லை... பார்த்து பேசுங்க...

* எந்த ஜென்மத்திலும், திராவிடக் கட்சிகளோடு கூட்டணி இல்லை; அது போன மாசம். கூட்டணி வைச்சிட்டிங்களே... இது, இந்த மாசம்.

* என்ன சார், அடிக்கடி கூட்டணி மாறும் நீங்க பேசலாமா... அப்பறம், அடுத்த இலக்கு எங்கே?

* தாத்தா நீங்க எங்கே போறீங்க... நானாப்பா, இங்கே எந்த அமைச்சர் பதவி யும் கிடைக்கல... அதனால, அந்தப் பக்கம் போலாம்னு பார்க்கிறேன்.

* நல்லாவே கலாய்க்கிறார். இவர் சொல்வது, ஒருவேளை தினகரனா இருக்குமோ, ஏனெனில், 'டோக்கன்' வருதே.இவ்வாறு, ரஜினி ரசிகர்கள் கூறியுள்ளனர்.

பதினைந்து ஆண்டு களுக்கு பின், ரஜினியை பற்றி, ராமதாஸ் விமர்சித்துள்ளார். ரஜினி ரசிகர்களும், ராமதாசை பதிலுக்கு விமர்சித்துள்ளதால், இரு தரப்பினர் இடையே, மோதல் வெடித்துஉள்ளது. பொங்கலுக்கு, ரஜினியின் அரசியல் படம், தர்பார் வெளியாகிறது.

இந்த படத்தை ஓடவிடாமல், வட மாவட்டங்களில் தடுக்க முயற்சிக்கலாம் என, ரஜினி ரசிகர்கள் சந்தேகிக்கின்றனர். எனவே, பா.ம.க.,வினரின் எதிர்ப்புகளை முறியடிக்க, ரஜினி ரசிகர்களும் தயாராகி வருகின்றனர்.

- நமது நிருபர் -Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X