முதியோரை மதிப்போம், பாதுகாப்போம்!
ஐக்கிய நாடுகள் சபையின் அறிவுறுத்தலின்படி, 1991 முதல், ஒவ்வோர் ஆண்டும், அக்டோபர், 1ம் தேதி, உலக முதியோர் தினமாக கொண்டாடப்படுகிறது. முதியோரை மதித்தல், அவர்களுக்கு மரியாதை செலுத்துதல் போன்றவை, இந்த நாளின் பிரதான நோக்கங்களாகும்.முதியோருக்கு உணவு, உறைவிடம் மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்; சமூகம் மற்றும் சட்ட ரீதியிலான பாதுகாப்பு அளித்தல்; மனித உரிமை மற்றும் அடிப்படை சுதந்திரத்தை, முதியோர் அனுபவிக்க வழி வகை செய்தல் போன்றவை, முதியோர் நலனுக்காக, ஐக்கிய நாடுகள் சபை வரையறுத்துள்ள விதிமுறைகள்.சக்கரம் போன்றது வாழ்க்கை. பிறக்கும் போது, சக்கரம் சுழல ஆரம்பிக்கிறது என்றால், அந்த சக்கரம், முழுச்சுற்று சுற்றி வரும் போது, ஒரு மனிதனின் ஆயுள் காலம் முடிவடைகிறது.
காலச் சக்கர சுழற்சிக்குள், பச்சிளம் பாலகன், சிறுவன்,வாலிபன், நடுத்தர வயதினன், முதியவன் என, பல வேஷங்களை, பல விதமாக ஒவ்வொருவரும் தரிக்க வேண்டியுள்ளது.இதில், முதுமைப் பருவம் தான் மிகவும் கொடியது. ஆண்டு, அனுபவித்து, ஓய்ந்த காலத்தில், உற்ற துணை யாருமின்றி, மனதில் பட்டதை சொல்ல முடியாமல், நினைத்தபடி செயல்பட முடியாத நிலையில், முதியோருக்கு இயற்கையே, கை, கால்களில் விலங்கு போடும் காலம் இது.நம் தமிழ் சமுதாயத்தில், குடும்பத் தலைவர் என்ற அந்தஸ்து, வீட்டின் பெரியவர்களான முதியோருக்குத் தான் இருக்கிறது. அப்பா, குடும்பத் தலைவர்; அம்மா குடும்பத் தலைவி; பிறர், குடும்ப உறுப்பினர்கள் என்று தான், நீண்ட காலமாக இருந்தது.கூட்டுக் குடும்பங்கள் சிதறிய பின், அணுக் குடும்பங்கள் எனப்படும், சின்னஞ்சிறு குடும்பங்கள் தலை துாக்கிய பின், முதியோருக்கு சிரம திசை ஆரம்பித்து விட்டது.கிராமங்களுக்குச் சென்றால், பெரும்பாலான வீடுகளில் தாத்தா, பாட்டி மட்டும் இருக்கின்றனர்; அவர்களின் வாரிசுகள், நகரங்களுக்கு குடிபெயர்ந்துள்ளனர். அதே நேரம், நகரங்களில், தாத்தா, பாட்டி இருக்கும் வீடுகளை, விரல் விட்டு எண்ணி விடலாம்.நகரங்களில் உள்ள முதியோரில் பலர், நகரின் ஒதுக்குப்புறமாக உள்ள முதியோர் இல்லங்களில் அடைக்கலமாகி உள்ளனர். வசதி இல்லாதோர், தங்கள் குடும்ப உறுப்பினர்களாலும், பிறராலும் அவமரியாதைக்கு ஆளாகுகின்றனர்.நகரங்களில், வசதியானவர்கள் வீடுகளில், ஒன்றிரண்டு வீடுகளில் தான், முதியோருடன் குடும்ப உறுப்பினர்கள் வசிக்கின்றனர். பிற வீடுகளின் குடும்ப உறுப்பினர்கள், பொருளாதாரத்தை ஈட்ட, பிற நாடுகள், நகரங்களுக்கு சென்றுள்ளனர்;
முதியோர் மட்டும் தனித்து வாழ்கின்றனர்.
பணம், வசதி, வாய்ப்புகள் இருக்கும் முதியோர் என்றால், உடல் நலக்குறைபாடு என்ற பிரச்னை மட்டும் தான் பெரிதாக இருக்கும். சாதாரண, ஏழை முதியோர் என்றால், உடல் நலப் பிரச்னைகளுடன், வாழ்க்கையை ஓட்ட சந்திக்கும் பிற பிரச்னை கள், அவர்களுக்கு பெரிய போராட்டமாகவே இருக்கும்.உடலளவிலும், மனதளவிலும் சோர்வடைந்த காலத்தில், அன்பாக பேச, அரவணைக்க, ஆட்கள் இல்லாத நிலையில், முதியோர் இல்லங்களை நாடும் முதியோர் நிலை, மிகவும் பரிதாபத்திற்குரியது. முதியோர் பராமரிப்பு மையங்களுக்கு செல்ல முடியாதோர், தனித்து வாழ்ந்து, சந்திக்கும் பிரச்னைகள், எழுத்தில் வடிக்க இயலாத சோகங்கள்.அதிலும், கணவர் இறந்த பின், வாரிசுகளை நம்பி வாழும் மனைவி; மனைவி இறந்த பின், பிள்ளைகளை நம்பி வாழும் கணவர் போன்றோர் நிலை, மிகவும் பரிதாபத்திற்குரியது.
ஆரோக்கியம், பணம், பாதுகாப்பு, அரவணைப்பு தேவைப்படும் காலம், முதுமை காலம். பெரும்பாலான முதியோருக்கு, இவற்றில் ஏதாவது ஒன்று தான் கிடைக்கிறது; பிற கிடைப்பதில்லை. இதனால், நம் நாட்டில் இவர்கள் நிலை மிகவும் பரிதாபமாக இருக்கிறது.
ஆனால், சில மேற்கத்திய நாடுகள் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில், முதியோருக்கு சிறப்பான கவுரவம் அளிக்கப்படுகிறது.
தமிழகத்தில் மட்டும் இன்று, 300க்கும் மேற்பட்ட முதியோர் இல்லங்கள், வியாபார நோக்கோடு செயல்படுகின்றன. ஆதரவற்றோருக்காக, ஆரம்பத்தில் துவக்கப்பட்ட முதியோர் இல்லங்கள், இன்று, ஆதரவு இருந்தும், அனாதைகளாக ஆக்கப்பட்டோருக்காக செயல்படுகின்றன.உண்மையில் இவை, முதியோர் இல்லங்கள் இல்லை; மனிதக்காட்சி சாலைகள். 'மிருகங்கள்' வந்து, மனிதர்களைப் பார்த்துச் செல்லும், மனிதக்காட்சி சாலைகள். தங்களைப் பெற்று, வளர்த்து, ஆளாக்கி, அழகு பார்த்த பெற்றோரை, முதியோர் இல்லங்களில் தள்ளி விடும் கல் நெஞ்சம் படைத்தவர்களை, மிருகங்கள் என்று தானே கூற வேண்டும்!குழந்தைகளின் எதிர்காலத்தை மட்டுமே சிந்தித்து, தங்கள் சுகத்தையும், சுதந்திரத்தையும் இழந்து, தங்களை முழுவதுமாக அர்ப்பணிக்கின்றனர், பெற்றோர். அவர்களின் வயது முதிர்வு காரணமாக, முதியோர் இல்லங்களிலும், ஆதரவற்றோர் இல்லங்களிலும், பெற்ற பிள்ளைகளே தள்ளி விடுவது, ஆறறிவு படைத்த மனிதனின் செயலாக இருக்க முடியாது.நம் நாட்டைப் பொருத்த மட்டில், ௬௦ வயதுக்கு மேல் முதியோர் என, அழைக்கப்படுகின்றனர். நம் அரசுகள், 60 வயதை தாண்டியோருக்கு, மாதம், 1,௦௦௦ ரூபாய் ஓய்வூதியம் அளிக்கிறது. எனினும், 65, 70 என, தள்ளாத வயதில் தான், முதியோர் பென்ஷன் பலருக்கும் கிடைக்கிறது.ஒவ்வொரு தாலுகா அலுவலகங்களிலும், முதியோர் பென்ஷன் வழங்குவதற்காக, தனியாக தாசில்தார் இருந்தாலும், ௬௦ வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், பென்ஷன் கிடைக்கவில்லை; அதிலும், லஞ்சம், ஊழல் தலை விரித்தாடுகிறது.முதியோர் நலனுக்காக துவக்கப்பட்டுள்ள சமூக நல அமைப்புகள் உள்ளன. அவை, முதியோர் நலனுக்காக, அநேகமாக பாடுபடுவதில்லை. அந்த அமைப்பின் உறுப்பினர்களுக்காக மட்டுமே செயல்படுவது போல, அவற்றின் செயல்பாடுகள் உள்ளன.இன்னமும், பெரும்பான்மையான வங்கிகள், மின் கட்டண வசூல் மையங்கள், பிற டிக்கெட் கவுன்டர்களில், முதியோருக்கு என, தனிச் சலுகைகள், வரிசைகள் கிடையாது. பஸ்களில் கூட, ஒன்றிரண்டு இருக்கைகள் தான், முதியோருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
அத்தகைய இடங்களில், சேவைகளை பெற, முதியோர் மிகுந்த சிரமங்களை அனுபவிக்கின்றனர்.
உலகம் முழுவதும், இளம் தலைமுறையினரால், இளம் வயது குடும்ப உறுப்பினர்களால் முதியோர் புறக்கணிக்கப்படும் நிலையில், சில, 'கொடுத்து வைத்த' முதியோரும் உள்ளனர். அவர்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் அல்லது ஆட்சியாளர்களாக உள்ளனர்.முதுமை பருவம் எய்தி, அவர்கள் இறந்தாலும், அத்தகையோர் இறப்பை, நாட்டு மக்கள், உறவினர்கள் ஏற்பதில்லை. ஆனால், நம் வீட்டில் அல்லது பக்கத்து வீட்டில், ௭௦ - ௮௦ வயதில் யாராவது இருந்தால், 'கிழம்' என, கிண்டல் செய்வர்.அரசியலில் சிறப்பான இடத்தில் இருக்கும் அநேகர், முதியோரே. ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்துக்கு, 73; பா.ஜ., மூத்த தலைவர், அத்வானிக்கு, ௯௧; பிரதமர் மோடிக்கு, 70வயதாகிறது. தி.மு.க., தலைவர் கருணாநிதி, ௯௦ வயது வரை, அரசியலில், 'ஆக்டிவ்' ஆக இருந்தார். ஜெயலலிதா மரணமடையும் போது, அவருக்கு வயது, ௬௮; எம்.ஜி.ஆர்., இறக்கும் போது, ௭௦; முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இறக்கும் போது, ௯௪ வயது.
அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்புக்கு வயது, 73. மீண்டும் அதிபராக, அடுத்த தேர்தலுக்கான பிரசாரத்தில் மும்முரமாக இறங்கியுள்ளார். காங்கிரஸ் தலைவர், சோனியாவுக்கு, ௭௨ வயது; தேசியவாத காங்கிரஸ் தலைவர், சரத் பவாருக்கு, 78; ஆர்.ஜே.டி., கட்சித் தலைவர், லாலு பிரசாத்திற்கு, 71 வயதாகிறது.
அரசியலில் உள்ள முதியோரை, முதியோராக நாம் நினைப்பதில்லை. 'தலைவா' என்றும், 'காக்க வந்த கடவுளே' என்றும் பாராட்டுகிறோம்.
ஆனால், இந்த வாய்ப்பு, ஏழைகளாக இருக்கும் அல்லது நடுத்தர வயதினராக இருக்கும்,முதியோருக்கு கிடைப்பதில்லை. இவர்களுக்கு பெரும்பாலும் கிடைப்பது, ஏச்சு, பேச்சு, பசி, பட்டினி, நோய், நொடி தான்!'ஒழுக்கங்களிலேயே உயர்வான ஒழுக்கம், தாய், தந்தையரை பேணிப் பாதுகாப்பது தான்' என்கிறது, ஹிந்து மதம். 'வயதானோரை கவனிப்பது, அநேக ஆசிர்வாதங்களைக் கொண்டு வருகிறது' என்கிறது, கிறிஸ்துவம். 'அந்திம காலத்தில் அனைத்தையும் இழந்து, பரிதாபமாக நிற்கும் முதியோருக்கு, இளையோரும், அவரது குடும்பத்தினரும் ஆதரவுக்கரம் நீட்ட வேண்டும்' என்கிறது இஸ்லாம்.இன்றைய இளைய தலைமுறையினரிடம், குறிப்பாக பள்ளி, கல்லுாரி மாணவர்களிடம், முதியோரின் சிறப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய காலம் இது. முதியோரும், தங்களைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளுக்கேற்ப, தங்களை மாற்றிக் கொள்ள, அனுசரிக்கக் கற்றுக் கொண்டால், அவர்களின் துன்பங்களும், துயரங்களும் விடை பெறும்.வயதாகி விட்டதே என்ற எண்ணத்தை, முதியோர் முதலில் கைவிட வேண்டும். உலகப் புகழ்பெற்ற, ஆங்கில எழுத்தாளர், சிட்னி ஷெல்டன், 80 வயதைத் தாண்டியும் எழுதிக் கொண்டிருந்தார். ஜான் கெலன் என்ற அமெரிக்க விண் ஆராய்ச்சியாளர், 77வது வயதில், தன் இரண்டாவது விண்வெளிப் பயணத்தை வெற்றிகரமாக முடித்தார்.மன் கவுர் என்ற, பஞ்சாப் மூதாட்டிக்கு வயது, 103. இவர், 93வது வயதில் தான், விளையாட்டுத் துறையில் நுழைந்தார். 'வேர்ல்ட் மாஸ்டர்ஸ் அதலெடிக் சாம்பியன்ஷிப்' போட்டியில், தங்கப் பதக்கங்களை குவித்துள்ளார். இவருக்கு பயிற்சியாளராக இருப்பது, இவரின் மகன், குருதேவ் சிங், வயது, ௭௯.ஜப்பான், ஹிரோஷிமா பகுதியைச் சேர்ந்த, ஷிகேமி ஹிராடா என்ற முதிய ஆண், 96 வயதில் பட்டம் பெற்று, உலகிலேயே அதிக வயதில் பட்டம் பெற்றவர் என்ற, 'கின்னஸ்' சாதனை படைத்துள்ளார்.முதுமை ஒரு வரப்பிரசாதம். அதை சுகமாகவோ, சுமையாகவோ மாற்றுவது, முதியோரின் கையில் தான் உள்ளது. இளமையை குழந்தைகளுக்காக தியாகம் செய்தது போலவே, முதுமையையும், பிள்ளைகளுக்குத் தியாகம் செய்யும் மனப்பக்குவத்தை ஏற்படுத்திக் கொண்டால், முதுமை சுகமாக மாறுவது சாத்தியம்.கரம் பிடித்து, நடக்கக் கற்றுக் கொடுத்த தாய், தந்தையரை கடைசி காலத்தில், கவலையின்றி வாழ வைக்க, பிள்ளைகள் கரம் கொடுக்கும் போது, முதுமை சுகமாக மாறும்!நா. பெருமாள் சமூக ஆர்வலர் தொடர்புக்கு: 98402 53693இ - மெயில்: gomal_44@yahoo.com