அருண் ஜெட்லி மனைவி எம்.பி.,யாகிறாரா?

Added : செப் 28, 2019
Share
Advertisement
அருண் ஜெட்லி மனைவி  எம்.பி.,யாகிறாரா?

அருண் ஜெட்லி மனைவி எம்.பி.,யாகிறாரா?

பா.ஜ., சீனியர் தலைவரும், முன்னாள் அமைச்சருமான அருண் ஜெட்லி மறைந்து,ஒரு மாதம் ஆகிவிட்டது. அவருடைய ராஜ்யசபா, எம்.பி., பதவி இப்போது காலியாக உள்ளது. அந்தப் பதவிக்கு தேர்தலை அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம். கடந்த ஆண்டு தான், உத்தர பிரதேசத்திலிருந்து, ராஜ்யசபா, எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஜெட்லி. ஆறு ஆண்டுகளுக்கான இந்தப்பதவியில், அவர், ஒரு ஆண்டு தான் பொறுப்பில் இருந்தார். இந்தப்பதவியை யாருக்கு கொடுப்பது என, மோடியும், அமித் ஷாவும் ஆலோசித்து வருகின்றனர்.இந்த பதவிக்கு, பா.ஜ., தலைவர்கள் பலர், 'லாபி' செய்து வருகின்றனர். ஆனால், ஜெட்லியின் மனைவி சங்கீதாவை, எம்.பி.,யாக்க வேண்டும் என்பது மோடியின் விருப்பம். அமித் ஷாவும் இதை ஆமோதித்துள்ளார். 'கட்சிக்கும், அரசுக்கும் ஜெட்லி அதிகமாக உழைத்துள்ளார்; எனவே, கட்சி அவருடைய குடும்பத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும்' என, பல சீனியர் தலைவர்களும் ஆசைப்படுகின்றனர்.தவிர, சங்கீதா, காஷ்மீரைச் சேர்ந்தவர். 'காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டுள்ள நிலையில், காஷ்மீரி பண்டிட் குடும்பத்தைச் சேர்ந்த சங்கீதா, கட்சிக்கு மிகவும் பயன்படுவார். இவர் காஷ்மீர் சென்று, சிறப்பு அந்தஸ்தை நீக்கியதால், காஷ்மீரி பண்டிட்கள் எப்படி பயன்பெறுவர்' என, பிரசாரம் செய்யலாம் என்கிறார் அமித் ஷா. எனவே, இவர், விரைவில் ராஜ்யசபா வேட்பாளராக அறிவிக்கப்படக்கூடும்.


அதிரப்போகும் தமிழகம்!எப்போதுமே அதிரடியாக செயல்படுவதில் ஆர்வமுள்ளவர் பிரதமர் மோடி. அரசு நிகழ்ச்சிகள் அனைத்தையும், தலைநகர் டில்லியிலேயே வைத்துக் கொள்ளக் கூடாது; மாநில தலைநகரங்களிலும், முக்கிய நகரங்களிலும், வெளிநாட்டு தலைவர்கள் சந்திப்பு போன்ற நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என, முடிவெடுப்பது மோடியின் வழக்கம்.கடந்த முறை, மோடி பிரதமராயிருந்த போது, சீன அதிபர், ஜி ஜின்பிங்கை, தன் சொந்த மாநிலமான, குஜராத் தலைநகர், ஆமதாபாதிற்கு அழைத்துச் சென்றார். இம்முறை, சீன அதிபரை, தமிழகத்தில், காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள மகாபலிபுரத்திற்கு அழைத்து வருகிறார் மோடி. இதனால், தமிழகமே அதிரப்போகிறது என்கின்றனர், சீனியர் அதிகாரிகள். அக்டோபர், 11ம் தேதி காலை, சீன அதிபர் சென்னை வருகிறார். இங்கிருந்து, மகாபலிபுரம் செல்கிறார். பாதுகாப்பு அதிகாரிகள், வெளியுறவு அதிகாரிகள், மொழிபெயர்ப்பாளர்கள் என, 300 பேர் கொண்ட, 'மெகா டீம்' சீன அதிபருடன், மகாபலிபுரம் வர உள்ளது. இங்குள்ள நகராட்சி, ஜி ஜின்பிங்கிற்கு மாபெரும் வரவேற்பு அளிக்க உள்ளது. மகாபலிபுரத்திலுள்ள ஓட்டல்கள் அனைத்தும், 'புக்' செய்யப்பட்டுள்ளன.இதே போல, பிரதமர் மோடியுடனும், 200க்கும் மேலான அதிகாரிகள் மகாபலிபுரம் வருகின்றனர். தமிழகத்திற்கும், குறிப்பாக காஞ்சிபுரத்திற்கும், சீனாவிற்கும் உள்ள தொடர்பு, இங்கிருந்து போதி தர்மர், புத்த பிக்குவாக சீனா சென்று, அங்கு புத்த மதத்தை பரப்பிய வரலாறு குறித்தெல்லாம் மோடி, சீன அதிபரிடம் பேசுவாராம்.பிரதமர் மோடி, -சீன அதிபர் சந்திப்பு, தமிழகத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என, அதிகாரிகள் சொல்கின்றனர்.


மோடியும், -டிரம்ப்பும் எப்படி நெருக்கமாகினர்?அமெரிக்காவில் நடைபெற்ற, 'ஹவ்டி மோடி' நிகழ்ச்சி, அங்குள்ள இந்தியர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இதில், அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்து கொண்டதோடு, பிரதமர் மோடியை வானளாவ புகழ்ந்து தள்ளினார்; இருவரும் கைகோர்த்தபடி வளைய வந்தனர். மோடியும், -டிரம்ப்பும் எப்படி இவ்வளவு நெருக்கமாகினர் என, சாமானியர்கள் மாத்திரமல்லாது உலக தலைவர்களும் வியக்கின்றனர். பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப்பை முதன் முதலில் சந்திக்கும் முன், இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள், 'டிரம்ப் ஒரு ஜோக்கர், அவரை நம்பமுடியாது, கண்டபடி பேசுவார்' என, பிரதமரிடம் சொன்னார்களாம். மோடி, வெளிநாட்டு தலைவர்களை சந்திக்கும் போது எந்த ஒரு அதிகாரியையும் வைத்துக் கொள்ளாமல், தனிமையில் சந்திப்பது தான் வழக்கம். அப்படித்தான் டிரம்ப்பை சந்தித்துஉள்ளார் மோடி. அப்போது டிரம்ப், 'உங்கள் நாட்டை, ஆர்.எஸ்.எஸ்., என்ற அமைப்பு தான் ஆள்கிறது என்கிறார், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான். ஆர்.எஸ்.எஸ்., என்றால் என்ன; அதைக் கண்டு இம்ரான் ஏன் பயப்படுகிறார்' என, மோடியிடம் கேட்டாராம்.அதற்கு நீண்ட விளக்கம் அளித்த மோடி, டிரம்ப் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பொறுமையாக பதில் சொல்லியிருக்கிறார். அத்துடன், பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரீப் இருந்த போது, அவருடைய பிறந்த நாளன்று, முன் அறிவிப்பு இல்லாமல், பாகிஸ்தானுக்கு, 'சர்ப்ரைஸ் விசிட்' செய்தது குறித்தும் டிரம்ப்பிடம் சொன்னாராம் மோடி. இரு நாடுகளும், நட்புறவுடன், சுமுகமாக இருக்க வேண்டும் என்பது தான் எங்கள் எண்ணம் என, சொல்லிய மோடி, பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் எப்படியெல்லாம் ஆதரவு அளித்து வருகிறது என்பதை விலாவாரியாக எடுத்துச் சொன்னாராம்.'அதிகாரிகள், டிரம்ப்பை பற்றி பலவிதமாக சொன்னார்கள். ஆனால், நான் அதை நம்பவில்லை. அவருடன் தனியாக பேசிய பிறகு, என்னையும், இந்தியாவையும், டிரம்ப் நன்றாக புரிந்து கொண்டார்' என, தனக்கு நெருக்கமான தலைவர்களிடம் சொல்லியிருக்கிறார் மோடி.இதே போல, மோடியின், ரஷ்ய அதிபர் புடின் உடனான சந்திப்பும், தனிமையில் தான் நடந்துள்ளது. உடன், மொழிபெயர்ப்பாளர்கள் மட்டுமே இருந்தனர். நடு இரவில் ஆரம்பித்த இந்த சந்திப்பு, விடியற்காலை, 4:00 மணி வரை நீடித்ததாம்.மோடியின் வெளிநாட்டு பயணங்களின் வெற்றிக்கு, தலைவர்களை தனியாக சந்திப்பதும் ஒரு முக்கிய காரணம் என்கின்றனர், வெளியுறவுத்துறை அதிகாரிகள்.


ராகுல் மீது சோனியா கோபம்?காங்கிரஸ் தலைவராக சோனியா மீண்டும் பதவியேற்ற பிறகு, கட்சியில் இதுவரை என்ன நடந்தது என, ஆய்வு செய்து வருகிறார். இது குறித்து, பல தலைவர்களிடமும் ஆலோசனை நடத்தி வருகிறார். காங்., தலைவராக ராகுல் இருந்த போது, அவர் சரியான முறையில் கட்சியை வழி நடத்தி செல்லவில்லை; பல விவகாரங்களில் கோட்டை விட்டுவிட்டார் என்பது, இந்த ஆலோசனையில் தெரிய வந்துள்ளதாம். இதனால், ராகுல் மீது, சோனியா கோபத்தில் இருப்பதாக, சீனியர் காங்., தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.ராகுல் காங்., தலைவரானதும், பல இளைய தலைமுறையினருக்கு கட்சியில் முக்கிய பதவிகளை வாரி வழங்கினார்; சிலரை, தனக்கு நெருக்கமாக வைத்துக் கொண்டார். இப்படி ராகுலுக்கு நெருக்கமானவர்கள், இப்போது சோனியாவால் வெளியே தள்ளப்படுகின்றனர்.ராஜிவ் காலத்திலிருந்தே, அவர் வீட்டிலும், அலுவலகத்திலும், முக்கிய பங்கு வகித்தவர் ஜார்ஜ். ராஜிவை பார்ப்பதற்கு, வி.ஐ.பி.,க்களுக்கு இவர் தான் நேரம் ஒதுக்குவார். ராகுல் பதவிக்கு வந்ததும், ஜார்ஜை துரத்தி விட்டார். ஆனால், சோனியா இவரை மீண்டும் அழைத்து வந்திருக்கிறார். கடந்த, 2017க்குப் பிறகு, சோனியா எந்த ஒரு தேர்தல் பிரசாரத்திற்கும் சென்றதில்லை. காரணம், அவரது உடல்நிலை மற்றும் டாக்டர்களின் அட்வைஸ். அடுத்த மாதம், ஹரியானா மற்றும் மஹாராஷ்டிர மாநில சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன.

இந்த மாநில காங் தலைவர்கள், பிரசாரத்திற்கு சோனியா வர வேண்டும் என, விரும்புகின்றனர். ராகுல் வந்தால், வரும் ஓட்டுகள் கூட வராது; எனவே, சோனியா தான் வர வேண்டும் என, அவர்கள் நச்சரித்து வருகின்றனர். கட்சி மீண்டும் எழுந்து நிற்க, வெற்றி முக்கியம் என்பதால், அதிக நாட்கள் பிரசாரம் செய்யாவிட்டாலும், ஓரிரு நாட்களாவது பிரசாரம் செய்யலாமா என, சோனியா ஆலோசிக்கிறாராம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X