நாமக்கல்: ப.வேலூர் அடுத்த ஜேடர்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, கபிலர்மலையில், கடந்த, ஜூன், 26ல், பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து, 18 பவுன் நகை, அதே பகுதியில் மற்றொரு வீட்டில், ஒன்பது பவுன் நகை, 300 கிராம் வெள்ளிப் பொருட்கள், 50 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். ப.வேலூர் அடுத்த கொளக்காட்டுப்புதூர், அண்ணா நகரில், பூட்டியிருந்த வீட்டில், ஒன்பது பவுன் நகை, ஆக., 22ல், வேலூர் அடுத்த உரம்பூரில், 5 பவுன் தாலிச் சங்கிலி ஆகியவற்றை திருடிச் சென்றதாக புகார் செய்யப்பட்டது. பரமத்தி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், ப.வேலூர் எஸ்.ஐ., ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர். நேற்று காலை, 10:30 மணிக்கு, ஜேடர்பாளையம் அடுத்த சோழசிராமணி தடுப்பணை அருகே, இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் பள்ளிபாளையம் பகுதியில் இருந்து வந்த நபர், போலீசாரை கண்டதும், வாகனத்தை திருப்பிச் செல்ல முயன்றார். சந்தேகமடைந்த போலீசார் அவரை விரட்டி சென்று மடக்கி பிடித்து விசாரித்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும், தற்போது, பள்ளிபாளையம் பெரும்பாறையில் வசிக்கும் அருண்ராஜ், 25, என்பதும், தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த ஆற்றங்கரை வால்தோப்பு முனியாண்டி, 42, முத்து முருகன், 40, ஆகியோருடன் சேர்ந்து, பகலில் சாணை பிடிப்பது போல் சென்று, நோட்டம் விட்டு பூட்டிய வீடுகளை குறிவைத்து திருட்டு சம்பவத்தை அரங்கேற்றியதையும் ஒப்புக் கொண்டார். அவரிடமிருந்து, 24.5 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. முனியாண்டி, முத்துமுருகன் ஆகியோர், ஏற்கனவே, திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு, புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE