புதுடில்லி: முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமின் மனுவை, டில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சிதம்பரம், தன் செல்வாக்கை பயன்படுத்தி, சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதாக, சி.பி.ஐ., வைத்த வாதத்தை ஏற்று, டில்லி உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.
மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையை தலைமையிடமாக வைத்து செயல்பட்ட, ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனம், 2008ல், வெளிநாட்டு முதலீடுகளை பெறுவதற்கு, விதிமுறைகளை மீறி அனுமதி பெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த, சி.பி.ஐ., அப்போது நிதி அமைச்சராக இருந்தவரும், காங்., மூத்த தலைவருமான சிதம்பரத்துக்கு, இந்த முறைகேட்டில் தொடர்பு இருப்பதாக வழக்கு பதிவு செய்தது. அமலாக்க துறையும் தனியாக விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில், ஆகஸ்ட் 21ல், சிதம்பரத்தை, சி.பி.ஐ., கைது செய்தது. தற்போது அவர், டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
விசாரணை
இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமின் கோரி, சிதம்பரம் தரப்பில், டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதி, சுரேஷ் கைத் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.பி.ஐ., சார்பில் ஆஜரான, சொலிசிட்டர் ஜெனரல், துஷார் மேத்தா, மூத்த வக்கீல், அமித் மகாஜன் ஆகியோர் வாதிட்டதாவது:சிதம்பரம், மத்திய உள்துறை அமைச்சராகவும், நிதி அமைச்சராகவும் பதவி வகித்தவர். தற்போது, எம்.பி.,யாக உள்ளார். செல்வாக்கான அரசியல்வாதியான அவர், மூத்த வழக்கறிஞரும் கூட. அவருக்கு ஜாமின் அளிக்கப்பட்டால், சாட்சிகளை கலைத்து விடுவார்.
வெளிநாடுகளுக்கு, அவர் தப்பிச் செல்வதற்கும் வாய்ப்பு உள்ளது. வழக்கு தொடர்பான முக்கிய ஆதாரங்களை அழித்து விடும் வாய்ப்பும் உள்ளது. எனவே, அவருக்கு ஜாமின் வழங்கக் கூடாது. இவ்வாறு, அவர்கள் வாதிட்டனர். இதைத் தொடர்ந்து, சிதம்பரம் தரப்பில் ஆஜரான வக்கீல், அர்ஷ்தீப் சிங், ''சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது, நுாற்றுக்கணக்கான பிரதிநிதிகள் அவரை சந்தித்துள்ளனர். ''ஐ.என்.எக்ஸ்., மீடியாவை சேர்ந்தவர்கள் சந்தித்தது பற்றி, அவருக்கு தெரியாது,'' என்றார்.
'லுக் அவுட்'
அப்போது, சி.பி.ஐ., தரப்பு வழக்கறிஞர்கள் கூறியதாவது:சிதம்பரம், ஐ.என்.எக்ஸ்., மீடியாவைச் சேர்ந்த இந்திராணி முகர்ஜியை சந்தித்துள்ளார். நாங்கள் நடத்திய விசாரணையின் போது, நிதி அமைச்சர் அலுவலகத்தின் பார்வையாளர் வருகைப் பதிவேட்டில், இது தொடர்பான விபரங் கள் இல்லை; அவை அழிக்கப்பட்டிருக்கலாம். ஆனாலும், இந்திராணி முகர்ஜியும், அவரது கணவர், பீட்டர் முகர்ஜியும், தாங்கள் தங்கியிருந்த ஓட்டலில் இருந்து, நிதி அமைச்சக அலுவலகத்துக்கு வந்த கார் பற்றிய விபரங்கள், எங்களிடம் உள்ளன.இவ்வாறு, அவர்கள் கூறினர். இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:இந்த வழக்கில், சிதம்பரத்துக்கு எதிராக, ஏற்கனவே, தேடப்படும் நபர் என்ற, 'லுக் அவுட்' நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனவே, ஜாமின் அளித்தால், அவர், வெளிநாடுக்கு தப்பிச் சென்று விடுவார் என கூறுவதை ஏற்க முடியாது. அடுத்ததாக, வழக்கு தொடர்பான ஆதாரங்களை அழித்து விடுவதாக கூறுவதையும் ஏற்க முடியாது.
கலைத்து விடுவார்
இந்த வழக்கு குறித்த ஆதாரங்கள் அனைத்தும், விசாரணை அமைப்புகளிடம் உள்ளன. தற்போது, எம்.பி., பதவியை தவிர, அவரிடம் வேறு எந்த அதிகாரமும் இல்லை.
ஆனாலும், ஜாமின் அளித்தால், செல்வாக்கை பயன்படுத்தி சாட்சிகளை கலைத்து விடுவார் என, சி.பி.ஐ., தரப்பில் கூறுவதை ஏற்றுக் கொள்கிறேன். இதன் அடிப்படையில், சிதம்பரத்தின் ஜாமின் மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார். சிதம்பரத்தின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, அவர், தொடர்ந்து, திகார் சிறையிலேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE