குழந்தைகள், தங்களுக்கு பிடித்த உணவை பார்த்ததும், 'யம்மி' என, உற்சாக குரல் எழுப்புவது வழக்கம். அதேபோல, சென்னையில், நேற்று நடந்த நிகழ்ச்சியில், மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் இருப்பதை கண்ட, பிரதமர் மோடி, ''தமிழகத்தின் சிறப்புமிக்க காலை உணவான, இட்லி, தோசை, வடை, சாம்பார் தான், உங்களுக்கு இந்த உற்சாகத்தை தந்திருப்பதாக நினைக்கிறேன்,'' எனப்பேசி, மாணவர்கள் மத்தியில் பெரிய ஆரவாரத்தை கிளப்பினார். அதைத் தொடர்ந்து நடந்த, சென்னை ஐ.ஐ.டி., பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற மோடி, தமிழ் மொழிக்கும், தமிழகத்திற்கும் புகழாரம் சூட்டினார்.
இரண்டாவது முறையாக, இந்திய பிரதமராக பொறுப்பேற்ற பின், நரேந்திர மோடி, முதன் முறையாக, நேற்று, சென்னை வந்தார். சென்னை ஐ.ஐ.டி., பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக, காலை, 9:10 மணிக்கு, சென்னை விமான நிலையம் வந்திறங்கிய பிரதமரை, கவர்னர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர், இ.பி.எஸ்., துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் பா.ஜ., பிரமுகர்கள், பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
பா.ஜ., தொண்டர்கள் திரளாக வந்து, வரவேற்பு அளித்தனர். அவர்களிடம், பிரதமர் பேசுகையில், ''நான், அமெரிக்காவில் பேசும்போது, தமிழில் பேசினேன். தமிழ் மொழி, உலகத்தின் பழமையான மொழி என, பேசினேன். தற்போது, அமெரிக்க ஊடகங்களில், தமிழ் மொழி குறித்து, அதிக செய்திகள் வருகின்றன,'' என்றார்.
வரவேற்பு முடிந்ததும், ஹெலிகாப்டரில், ஐ.ஐ.டி., வளாகத்திற்கு சென்றார். சென்னை, தரமணியில் உள்ள, ஐ.ஐ.டி., ஆராய்ச்சி பூங்காவில், 'சிங்கப்பூர் - இந்தியா ஹேக்கத்தான் - 2019' போட்டியில், வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசுகள் வழங்கி பேசுகையில், ''அனைவரும் உற்சாகமாக இருக்கிறீர்கள். இதற்கு, சென்னையின் சிறப்பு காலை உணவான, இட்லி, தோசை, வடை, சாம்பார் காரணமாக இருக்கலாம் என, நினைக்கிறேன்,'' என்றார். அதை கேட்டதும், அரங்கில் கூடியிருந்தோர், மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
பின், மாணவர்களுடன் சில நிமிடங்கள் பேசிவிட்டு, ஐ.ஐ.டி., பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார். அங்கு பேசுகையில், ''உலகில் மிகவும் பழமையான, தமிழ் மொழியின் தாயகமான தமிழகத்தில், தற்போது இருக்கிறோம். அதேநேரம், சர்வதேச அளவில், சென்னை ஐ.ஐ.டி., என்ற, நவீன மொழிக்கு தாயகமாகவும், தமிழகம் திகழ்கிறது,'' என, தமிழுக்கும், தமிழகத்திற்கும், அவர் புகழாரம் சூட்டினார்.விழா முடிந்து, பகல், 1:05 மணிக்கு, ஹெலிகாப்டரில், சென்னை விமான நிலையம் சென்றார். அங்கிருந்து, பகல், 1:20 மணிக்கு, தனி விமானத்தில், டில்லி சென்றார்.
பா.ஜ.,வினர் உற்சாகம்
பிரதமர், தமிழகம் வரும் போதெல்லாம், பா.ஜ., எதிர்ப்பாளர்கள், 'திரும்பி போங்கள் மோடி' என்ற முழக்கத்தை, சமூக வலைதளங்களில் உருவாக்கி, பிரபலமாக்கி வந்தனர். நேற்றும் சிலர், அதை பதிவிட்டனர். அவர்களுக்கு, பா.ஜ.,வினர், உடனுக்குடன் பதிலடி கொடுத்தனர். அதனால், இம்முறை, பிரதமருக்கு எதிரான, அந்த கோஷம் எடுபடவில்லை.
அமெரிக்காவின் எதிர்பார்ப்பு என்ன?
''ஒருமுறை பயன்படுத்தும், பிளாஸ்டிக் பயன்பாட்டை நிறுத்துங்கள்,'' என, பொது மக்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை வந்த, பிரதமர் மோடிக்கு, பா.ஜ., தொண்டர்கள், விமான நிலையத்தில், உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்கள் மத்தியில், பிரதமர் பேசியதாவது: சென்னை வரும் போதெல்லாம், நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். 2019 தேர்தலுக்கு பின், முதன் முறையாக, சென்னை வந்துள்ளேன். நான், அமெரிக்கா சென்று திரும்பியுள்ளேன். அங்கு சென்றபோது, நான் தெரிந்து கொண்டது, அவர்களுக்கு, இந்தியா குறித்து நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளன. நாம், நாட்டின் முன்னேற்றத்திற்காக, கடுமையாக உழைக்கிறோம். அதேபோல, உலக நன்மைக்காகவும் பாடுபட வேண்டும் என்ற எதிர்பார்ப்பை, அவர்களிடம் காண முடிந்தது. இந்த பணியை, 130 கோடி மக்களும் சேர்ந்து செய்ய வேண்டும்.
ஒரு முறை பயன்படுத்தி, துாக்கி எறியும் பிளாஸ்டிக்கினால், மிகப்பெரிய நஷ்டங்கள் ஏற்படுகின்றன. பிளாஸ்டிக் பயன்பாடே வேண்டாம் என, கூறவில்லை. ஒருமுறை பயன்படுத்தும், பிளாஸ்டிக் பயன்பாட்டை நிறுத்த வேண்டும். காந்தியின், 150வது பிறந்த நாள் விழா நடக்கிறது. இந்த ஆண்டு, நாம் அனைவரும் பாதயாத்திரை செல்ல உள்ளோம். அதன் வழியே, அவரது சித்தாந்தங்களை, மக்கள் மத்தியில், அடிமட்ட அளவுக்கு எடுத்து செல்ல வேண்டும். அதற்கு அனைவரும் பணியாற்ற வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.பி., இல.கணேசன், பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா கலந்து கொண்டனர்.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE