இரு 'லேடி'களும் 'அடிக்கிறாங்க' கூடி...

Added : செப் 30, 2019
Share
Advertisement
 இரு 'லேடி'களும் 'அடிக்கிறாங்க' கூடி...

செ ன்னை ஐ.ஐ.டி.,யில், பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியை, 'டிவி'யில் பார்த்துக் கொண்டிருந்தாள் சித்ரா.நாளிதழ்களை புரட்டிக் கொண்டிருந்த மித்ரா, ''என்னக்கா, உள்ளாட்சி தேர்தல் நடத்துறதுக்கு ஜரூரா வேலை நடந்துக்கிட்டு இருக்காமே,'' என, விவாதத்தை துவக்கினாள்.''ஆமாப்பா, ஆளுங்கட்சிக்காரங்க ரொம்பவே ஆர்வமா இருக்காங்க.
மகளிர் ஓட்டுகளை அள்ளுறதுக்காக, ஒரே நாளில், 2,000 பேருக்கு தாலிக்கு தங்கம் வழங்கியிருக்காங்க; வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தி, பட்டுப்புடவை கொடுத்திருக்காங்க.''சவுத் ஜோன்ல ஏற்கனவே கவுன்சிலரா இருந்தவங்களே, திரும்பவும் 'சீட்' கேக்குறாங்களாம்.
ஆளுங்கட்சி வி.ஐ.பி.,யிடம் 'துண்டு' போட்டு வச்சிருக்காங்க. ஏரியாவுக்குள்ள ஆளுங்கட்சி செல்வாக்கு எப்படி இருக்குன்னு உளவுத்துறை மூலமா, 'ரிப்போர்ட்' வாங்கியிருக்காங்களாம்.''அதனால, ஆளுங்கட்சி வார்டு செயலாளர் முன்னாடி தான், தெருவிளக்குகளை எல்.இ.டி., மாத்துறாங்களாம். புது குடிநீர் இணைப்பு கொடுக்கவும் உத்தரவு போட்டிருக்காங்க. அந்தந்த ஏரியா ஆளுங்கட்சிக்காரங்க முடிவு செஞ்சாதான், 'கனெக் ஷன்' கெடைக்கும்னு சொல்றாங்க...''''அப்படியா...''''பழைய ஆட்களை கழட்டி விட்டு, புது முகங்களுக்கு வாய்ப்பு கொடுப்பாங்கன்னு பேசிக்கிறாங்க,''''மேயர் பதவிக்கு யார் நிப்பாங்கன்னு முடிவு செஞ்சிட்டாங்களா...''''இன்னும் முடிவாகலை.
ஆனா, வடவள்ளிக்காரங்களால, இந்த முறை போட்டி போட முடியாத சூழல் இருக்கு. அதனால், தெற்கு பகுதியை சேர்ந்தவங்க, 'மூவ்' பண்றாங்க. நுாறு வார்டை சேர்ந்த மக்களும் ஓட்டு போடணுமே. கோடிக்கணக்குல செலவு செய்யணும்; படிப்பறிவுள்ள, கெத்தான வேட்பாளரை நியமிக்க, ஆளுங்கட்சி மேலிடம் திட்டம் போட்டிருக்கு.
தேர்தல் நடந்தா, அடுத்தடுத்து வேலை ஜரூரா நடக்கும்,''''எதிர்க்கட்சிக்காரங்க, 'மூவ்' எதுவுமே சொல்லலையே...'''வர்ற, 4ம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவாங்க. மறுநாள், 5ம் தேதி கட்சிக்காரங்களுக்கு நகல் கொடுப்பாங்க. ஒவ்வொரு வார்டும் எப்படி மாறியிருக்குன்னு, அப்பதான் எல்லாத்துக்கும் வெளிப்படையா தெரியும்.
''உள்ளாட்சி தேர்தல் நடத்துவாங்கன்னு, இன்னும் பலரும் நம்பாம இருக்காங்க. மறுபடியும் கோர்ட்டுக்கு போயி, தடுத்திருவாங்கன்னு பேசிக்கிறாங்க...''முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்துக்கு மீண்டும் ஜாமின் மறுக்கப்பட்ட செய்தி, 'டிவி'யில் ஒளிபரப்பாகியது.அதைப்பார்த்த மித்ரா, ''கோர்ட் அவமதிப்பு வழக்குல, கார்ப்பரேஷன் கமிஷனர் ஆஜரானாராமே,'' என, 'ரூட்'டை மாற்றினாள்.''அது, ஒனக்கும் தெரிஞ்சு போச்சா... கோவைப்புதுார்ல பிருந்தாவன் நகர்ல, 'ரிசர்வ் சைட்'டை ஒருத்தரு ஆக்கிரமிச்சிருக்காரு. பக்கத்து 'சைட்' உரிமையாளர், கோர்ட்டுக்கு போயிருக்காரு.
கோர்ட் உத்தரவை, கார்ப்பரேஷன் அதிகாரிங்க, கண்டுக்காம விட்டுட்டாங்க.''அவமதிப்பு வழக்குல நேர்ல ஆஜராகணும்னு சம்மன் வந்ததுக்கு அப்புறம்தான், கமிஷனருக்கே விஷயமே தெரிஞ்சிருக்கு. கோர்ட்டுல ஆஜராகணும்; இல்லேன்னா, ரூ.50 ஆயிரம் 'டிபாசிட்' செய்யணும்னு, உத்தரவு போட்டிருந்தாங்க. நீதிபதி உத்தரவுக்கு கட்டுப்பட்டு, கோர்ட்டுல ஆஜராகிட்டாரு,''''அதெல்லாம் சரி, மாவட்ட உயரதிகாரி ஒருத்தரு, ஆளுங்கட்சி வி.ஐ.பி.,க்கு வலதுகரமா இருக்காராமே. கார்ப்பரேஷன் சம்பந்தப்பட்ட விழாவா இருந்தாலும், கலந்துக்கிறாராமே...'' என, கிளறினாள் மித்ரா.''அதை விடு. உயரதிகாரிங்க எப்பவுமே நெளிவு சுளிவோட நடந்துக்குவாங்க.
கார்ப்பரேஷன் 'மாஜி' கவுன்சிலருக்கு, ஒன்பது வீடு இருக்காமே; அதைப்பத்தி விளக்கமா சொல்லு,''''குளக்கரையில வசிக்கிறவங்களுக்கு மாற்று வீடு கொடுத்துட்டு, காலி செய்ய வைக்கிறாங்க. முத்தண்ணன் குளக்கரையில வசிக்கிறவங்களுக்கு, கார்ப்பரேஷன் நோட்டீஸ் கொடுத்திருக்கு. 'மாஜி' கவுன்சிலர் ஒருத்தரு, ஒன்பது வீடுகளை வாடகைக்கு விட்டுருக்காராம். அதனால, ஆக்கிரமிப்பு அகற்ற விடாம தடுக்குறாராம்,''''ஆக்கிரமிப்பு எடுக்கறதிலும், இவ்ளோ சிக்கல் இருக்கா...''''அதிருக்கட்டும், தொழில்துறையை சேர்ந்தவங்களுக்கு, குறைதீர்ப்பு கூட்டம் நடத்தப் போறதா சொன்னாங்களே...'' பழசை கிளறினாள் மித்ரா.''நம்மூர்ல, தொழில் மைய பொது மேலாளரா கண்ணன்னு ஒருத்தரு இருந்தாரு.
தொழில்துறையை சேர்ந்தவங்களோடு நல்ல தொடர்புல இருந்துருக்காரு. வெளிப்படைத்தன்மையோடு ஆபீஸ் நடத்தியிருக்காரு. தந்தைக்கு ஒடம்பு சரியில்லைன்னு, 'லீவு'ல போயிருக்காரு. திரும்பி வர்றதுக்குள்ள, ஊட்டியில இருந்த கார்த்திக் வாசனை கோவைக்கு நியமிச்சிட்டாங்க. கோவைக்காரரை, திருப்பூருக்கு மாத்திட்டாங்க. இதை கேள்விப்பட்டு, தொழில்துறை சங்கத்துக்காரங்க, 'அப்செட்'டுல இருக்காங்க,'' என்றாள் சித்ரா.நவராத்திரி விழாவுக்கு, கோவில்களில் வைக்கப்பட்டுள்ள கொலுவை பற்றிய செய்தி, புகைப்படங்களுடன் நாளிதழில் வெளியாகி இருந்தது.அதைப்படித்த மித்ரா, ''உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் புதுசா ஒயரிங் செய்றாங்களாமே...'' என, இழுத்தாள்.''ஆமா மித்து, நானும் கேள்விப்பட்டேன்.
இப்பத்தான் ஒயரிங் வேலை செஞ்சாங்க. மறுபடியும் ஒயரிங் செய்யணும்; கேமராக்களை மாத்தணும்னு உயரதிகாரி சொன்னதுனால, மாத்திட்டு இருக்காங்களாம்.''அந்த அதிகாரி, பழனியில் வேலை பார்த்தப்ப, ஒட்டன்சத்திரத்துல இருக்கற நிறுவனத்தோடு நெருங்கிய தொடர்பாம்.
கோவை மண்டலத்துல எல்லா கோவில்களிலும், அந்த நிறுவனமே ஒயரிங் வேலை செய்யுதாம்,''''அரசு மருத்துவமனை வளாகத்துல, டாக்டர் ஒருத்தரு மாரடைப்புல இறந்த விஷயத்தை கேள்விப்பட்டு, எல்லோருமே அதிர்ச்சியாகிட்டாங்களாமே...'' என, அடுத்த விஷயத்துக்கு தாவினாள் மித்ரா.''ஆமாப்பா, அரசு மருத்துவமனை டாக்டரு, மாரடைப்பு ஏற்பட்டு, கார் பக்கத்துல விழுந்தாரு. இதுல சோகமான விஷயம் என்னான்னா, அந்த வழியா, மருத்துவமனை ஊழியர்கள் கடந்து போயிருக்காங்க. யாருமே கண்டுக்கலையாம்.''இளைஞர் ஒருத்தரு ஓடி வந்து துாக்கியிருக்காரு.
அக்கம் பக்கத்துல இருக்கறவங்க உதவியோட, அவசர சிகிச்சை பிரிவுக்கு துாக்கிட்டு போயிருக்காங்க. அதுக்கப்புறம்தான், டாக்டர்ங்கிற விஷயமே தெரிஞ்சிருக்கு. சிகிச்சை அளிக்கிறதுக்கு முன்னாடியே, அவர் இறந்துட்டாரு...''''இதுல இருந்து, மருத்துவமனை நிலைமை எப்படியிருக்குன்னு தெரியுதா,'' என்ற மித்ரா, ''கார்ப்பரேஷன் ரெண்டு 'லேடி' அதிகாரிங்க, வசூலில் பிண்ணி பெடலெடுக்குறாங்களாமே...'' என, நோண்டினாள்.''ஆமா மித்து, 170 வீடு இருக்கிற அபார்ட்மென்ட்டுக்கு வரி விதிக்கிற பொறுப்பு எனக்குதான் இருக்குன்னு சொல்லி, வீட்டுக்கு, ரூ.10 ஆயிரம் வீதம், ரூ.17 லட்சம் வாங்கியிருக்காங்களாம்.
இதை கேள்விப்பட்ட உயரதிகாரிங்க, வாயடைச்சு போயிட்டாங்க. அந்த, 'லேடி' அதிகாரி கூட வேலைபார்த்த பலரும் திகைச்சு போயிருக்காங்க,''''அப்படியா...'' என்ற மித்ரா, ''நம்மூருக்கு சி.எம்., வந்துட்டு போனாரே, அதைப்பத்தி எதுவுமே சொல்லலையே'' என, கிளறினாள்.''சி.எம்., எளிமையானவரா இருக்காரு. நம்மூருக்கு வந்தா, ஏகப்பட்ட கெடுபிடி செய்ய ஆரம்பிச்சிட்டாங்க. மழை கொட்டுனாலும் கூட, வாகன ஓட்டிகளை, சிக்னல்ல காத்திருக்க வைக்கிறாங்க. 'பொக்கே' கொடுக்கறதுக்காக, ஏர்போர்ட்டுல, அதிகாரிங்க, ரெண்டு மணி நேரம் காத்திருக்க வேண்டியிருக்காம்,'' என்றாள் சித்ரா.''மாஜி அமைச்சர் ஒருத்தரு, சி.எம்.,மை பார்க்க கால்கடுக்க வெகுநேரம் காத்திருந்தாராமே..''''அதுவா, கால்நடைத்துறை முன்னாள் அமைச்சர் தாமோதரன், வனத்துறை விழாவுக்கு வந்திருந்தாரு.
மேடைக்கு பக்கத்துல ரொம்ப நேரம் காத்திருந்தாரு. மேடை ஏற விடாம தடுத்து வச்சிருந்தாங்க. அவரை பார்த்த, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மேடையில இருந்து கீழிறங்கி வந்து அழைச்சிட்டு போயிருக்காரு,''''காங்கிரஸ் கட்சியில, மாநில பொதுக்குழுவை, நம்மூர்ல நடத்தி இருக்காங்களே...'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள் மித்ரா.''காங்கிரசுல, கோவை மாநகர், தெற்கு, வடக்கு மாவட்ட தலைவர்ன்னு மூணு பதவி இருக்கு.
இதுல, மாநகர் மாவட்ட தலைவர் பதவி, எட்டு மாசமா காலியா இருக்கு. யாரையுமே நியமிக்காமலேயே, மாநில பொதுக்குழு நடத்தியிருக்காங்க...''''அந்தக்கட்சிக்காரங்க, எப்பவுமே அப்படித்தானே...'' என்றவாறு, ''போலீஸ்காரங்க, 'பிரஷர்' தாங்க முடியாம, வேண்டுமென்றே தப்பு, தப்பா அபராதம் வசூலிக்கிறாங்களாமே...'' என, கடைசி மேட்டருக்கு தாவினாள் மித்ரா.''இது சம்பந்தமா விசாரிச்சேன். போக்குவரத்து போலீஸ்காரங்களுக்கு, எவ்வளவு வழக்கு போடணும்; எவ்வளவு அபராதம் வசூலிக்கணும்னு 'டார்கெட்' கொடுத்திருக்காங்களாம். அதனால, பிடிக்கிறவங்க மேல ஏதாவது ஒரு வழக்கு போட்டு கணக்கு காட்டுறாங்களாம்,'' என்றபடி, சமையலறைக்குள் நுழைந்தாள் சித்ரா.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X