புதுடில்லி : டில்லி -லக்னோ இடையே இயக்கவுள்ள தேஜஸ் ரயில் காலதாமதமாக வந்தால் பயணிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என ஐ.ஆர்.சி.டி.சி தெரிவித்துள்ளது.

டில்லி - லக்னோ மற்றும் மும்பை - ஆமதாபாத் இடையே தேஜஸ் ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில்களை தனியாரிடம் ஒப்படைக்க அரசு முயற்சிக்கும் நிலையில் அக்.,4 முதல் டில்லி - லக்னோ இடையே தேஜஸ் இயக்கப்பட உள்ளது.

மேலும் ரயில்கள் பல மணிநேரம் காலதாமதமாவது அடிக்கடி தொடர்ந்து வருவதால் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர். இதனை தடுக்கவும், பயணிகளின் சிரமத்தை குறைக்கவும் ரயில் தாமதத்துக்கு இழப்பீடு வழங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது. அதன்படி தேஜஸ் ரயில் 1 மணி நேரம் தாமதமாக வந்தால் ரூ.100 , 2 மணி நேரம் தாமதமாக வந்தால் ரூ.250 என பயணிகளுக்கு இழப்பீடு வழங்க ஐ.ஆர்.சி.டி.சி முடிவு செய்துள்ளது.

இதுமட்டுமின்றி இந்த தேஜசில் பயணிக்கும் பயணிகளுக்கும் அவர்களது உடமைக்கும் காப்பீடு வழங்குகிறது. தேஜஸ் ரயிலில் பயணிக்கும் பயணிகளின் உடமைகள் திருட்டு போனால் ரூ.1 லட்சம் மற்றும் பயணத்தின் போது பயணிகளுக்கு உயிரிழப்போ அல்லது விபத்து நேர்ந்தாலோ ரூ.25 லட்சம் வரையும் காப்பீடு வழங்கப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த ரயிலில் பயணிகளுக்கென்று சிறப்பு வசதிகள் செய்யப்பட இருக்கிறது. பயணிகள் தங்கள் உடமைகளுடன் பயணிக்கத் தேவையில்லை என்றும், அவர்களது உடமைகளை பயணத்தின் ஆரம்பத்தில் பெற்றுக்கொண்டு, பயணத்தின் முடிவில் மீண்டும் பயணிகளிடமே ஒப்படைக்கும் நடைமுறையயும் அறிமுகப்படுத்த இருக்கிறது.

தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE