சென்னை : பிரதமர் மோடி - சீன அதிபர் சந்திப்பு குறித்த முன்னேற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக முதல்வர் பழனிசாமி நாளை மாமல்லபுரம் செல்கிறார்.

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையிலான அதிகாரப்பூர்வமற்ற சந்திப்பு, மாமல்லபுரத்தில் அக்.,11 முதல் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. இது முக்கியமானதாகவும் கருதப்படுகிறது. மாமல்லபுரத்தில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில், இரு நாட்டு வர்த்தகம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது.

அதிகாரிகள் குழு ஆய்வு
சீன அதிபர் வருகைக்காக முன்னெச்சரிக்கையாக சீன அதிகாரிகள் குழு மற்றும் தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குழு, மாமல்லபுரத்தில் பாதுகாப்புஏற்பாடுகளை ஆய்வு செய்தனர். மாமல்லபுரத்தில் உள்ள பழமையான புராதான சிற்பங்களையும் சீன அதிபர் பார்வையிடுகிறார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை
இதற்கான பணிகள் தீவிரமாக நடந்துவரும் நிலையில் முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை ஆய்வு செய்ய முதல்வர் பழனிசாமி நாளை (அக்.,02) மாமல்லபுரம் செல்கிறார். மாவட்ட கலெக்டர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய்கோகலே மற்றும் பிரதமர் அலுவலக உயர் அதிகாரிகள், உள்ளிட்ட10 பேர் கொண்ட குழுவினரும் மாமல்லபுரம் வந்துள்ளனர்.

கண்காணிப்பு
கடற்கரை கோவில் முழுவதும் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ளது. இதனை கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரவும் அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் மற்றும் டி.ஜி.பி. ஆகியோர் உத்தரவிட்டனர். இதனால், உச்சகட்ட பாதுகாப்பு வளையத்திற்குள் வந்துள்ளது மாமல்லபுரம்.
பேனருக்கு அனுமதி கோரி மனு
மாமல்லபுரம் வருகை தரும் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் இருவரையும் வரவேற்று பேனர் வைக்க அனுமதிக்க வேண்டும் என ஐகோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை 14 இடங்களில் பேனர் வைக்க அனுமதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இம்மனுவை அக்.,3ம் தேதி ஐகோர்ட் விசாரிக்க உள்ளது.

தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE