சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

'புரட்சியாளர் டி.வி.ஆர்.,' : இன்று டி.வி.ஆர்., பிறந்த நாள்

Updated : அக் 02, 2019 | Added : அக் 02, 2019 | கருத்துகள் (6)
Advertisement
புரட்சியாளர் டி.வி.ஆர்., டி.வி.ஆர்., பிறந்த நாள்

“நாங்கள் இருவரும் பள்ளித் தோழர்கள். அந்தக் காலத்திலேயே அவர் வித்தியாசமானவர். பல முற்போக்கு எண்ணங்கள் சிறுவயதிலேயே உண்டு. இது மேல்தட்டு மாணவர்களுக்கு பிடிக்காது. அவர்கள் அவரது போக்கை மறைமுகமாக கேலி செய்வர். அது எனக்கு தெரிந்தால் போதும் அவர்களை நையப்புடைத்து விடுவேன்.”

இதைச் சொன்னவர் பின்னாளில் இலக்கிய ஆர்வலராகவும் இடதுசாரி தலைவராகவும் திகழ்ந்த ப.ஜீவானந்தம் என்ற ஜீவா. அவர் குறிப்பிடும் வித்தியாசமானவர் 'தினமலர்' இதழைத் தோற்றுவித்த டி.வி. ராமசுப்பையர்.

இன்று மக்கள் பத்திரிகையாகத் திகழும் தினமலர் இதழை நிறுவிய டி.வி.ஆர். என்று அழைக்கப்படும் தழியல் வேங்கடபதி ராமசுப்பையர் ஒரு புரட்சிக்காரர். 1920களின் இறுதியில் தமிழக கிராமங்களில் ஜாதிப் பற்று தீண்டாமை தலைவிரித்தாடியது. உயர் ஜாதியினர் வாழும் பகுதிகளுக்குள் தாழ்த்தப்பட்டவர்கள் நுழைய முடியாது. இந்தக் கொடுமையை முறியடிக்க நினைத்தார் டி.வி.ஆர்.

'அவர்கள் தானே இங்கு வரமுடியாது நாம் அங்கு போகலாமே' என டி.வி.ஆர். தீர்மானித்தார். சேரிகளுக்குச் சென்று தாம்பூல விழா நடத்தினார். தென் மாவட்டங்களில் ஊர்ப் பெரியவர்களை பிரபலமானவர்களை அழைக்க வேண்டுமானால் வெறுங்கையோடு போய் அழைக்க மாட்டார்கள்; தாம்பூலம் கொடுத்து அழைப்பார்கள். இன்றும் அவன் என்ன பெரிய இவனா வெற்றிலை பாக்கு வச்சு அழைக்கணுமா? என்று பேச்சு வழக்கு உண்டு. டி.வி.ஆர். சேரிகளுக்குப் போனார். வீடு வீடாகப் போய் வெற்றிலை பாக்கு வைத்து சேரி மக்களை அழைத்து அந்தப் பகுதியில் உள்ள பொது இடத்தில் கூட்டி அவர் அந்த மக்களிடையே பேசுவார்.


இலவச கல்வி:

நண்பர்களைக் கொண்டு 'நந்தனார்' நாடகங்கள் போடுவார். விளைவு மக்களிடம் ஏற்பட்டு வரும் எழுச்சியைக் கண்டு இந்தியாவிலேயே முதன் முறையாக 1936 நவம்பர் 12ம் தேதி திருவிதாங்கூர் மகாராஜா 'இனிமேல் பிறப்பு அல்லது ஜாதி அடிப்படையிலான எந்த ஓர் இந்துவும் நமது கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட திருக்கோவில்களில் நுழைய எந்த ஒரு கட்டுப்பாடும் இருக்கக் கூடாது என்று உத்தரவிடுகிறோம்' என ஆணை பிறப்பித்தார்.

சர்.சி.பி.ராமஸ்வாமி ஐயர் திருவிதாங்கூர் சமஸ்தான திவானாக இருந்த போது இலவச கட்டாயக் கல்வியை அறிமுகப்படுத்தினார். அதற்கு ஒரு குறிப்பிட்ட சமயத்தினரிடமிருந்து எதிர்ப்பு இருந்தது. 'மதபோதனையோடு கூடிய ஆரம்ப கல்வியைத் தான் நாங்கள் அளித்து வருகிறோம். அதனால் கல்வியை கட்டாயப்படுத்தக் கூடாது' என அவர்கள் கூறினர். உடன் எந்தப் பகுதியில் இருப்பவர்கள் ஏற்றுக் கொள்கிறார்களோ அங்கு இலவச கட்டாய கல்வியை நடைமுறைப்படுத்திக் கொள்ளலாம் என சி.பி.ராமஸ்வாமி ஐயர் கூறிவிட்டார்.


மதிய உணவு:

அரச குடும்பத்தைச் சேர்ந்த விசாகம் திருநாள் மகாராஜாவின் பேரன் ஏ.என். தம்பியுடன் இணைந்து மூன்று மாதங்களுக்குள் தோவாளை அகஸ்தீஸ்வரம் கல்குளம் விளவங்கோடு பகுதிகளில் 50 பள்ளிகள் கட்டினார் டி.வி.ஆர். ஏழைக் குழந்தைகளுக்கு அரசாங்கம் மதிய உணவு அளிக்கவும் ஏற்பாடு செய்தார். அந்தப் பள்ளிகளில் படித்தவர்கள் இன்றும் உலகம் முழுவதும் இருக்கின்றனர். கன்னியாகுமரி கல்வி அறிவில் முழுமை பெற்ற மாவட்டமாக விளங்க இவையெல்லாம் அடித்தளம் அமைத்தன.

எழுத்தாளர்கள் மீது பெரும் மதிப்பு உடையவர் டி.வி.ஆர். தினமலர் இதழின் முதல் இதழை வெளியிட்டதே ஓர் எழுத்தாளர் தான். அவர் தமிழறிஞர் வையாபுரிப் பிள்ளை. இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பெரிதும் மதிக்கும் எழுத்தாளர் சுந்தர ராமசாமி உருவாக காரணமானவர்களில் ஒருவர் டி.வி.ஆர்.


புத்தகங்கள்:

சுந்தரம் ராமசாமிக்கு 18 வயது வரை தமிழ் படிக்கத் தெரியாது. அவரைத் தமிழை நோக்கித் திருப்பியவர் டி.வி.ஆர். சுந்தரம் ராமசாமி எழுதியுள்ளதாவது: ஏழு வயதிலிருந்து 10 வயது வரை என் தாயார் தங்கம்மாளும் ராமசுப்பையரும் ஒன்றாக விளையாடிய குழந்தைகள். என் 10 வயதில் நான் உடம்பு சரியில்லாமல் படுத்துவிட்டேன். அப்போது டி.வி.ஆர். அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வருவார். அப்பா அம்மாவிற்கு ஆறுதல் கூறுவார்.

மாலையில் நாலரை மணி முதல் ஐந்து மணிக்குள் வருவார். அந்த நேரம் எனக்கு நன்கு தெரியும். அவர் வரமாட்டாரா என எதிர்பார்க்கும் பழக்கமும் எனக்கு வந்து விட்டது. எனக்கு சதா படுக்கையில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் பொழுது போவது கஷ்டமாக இருந்தது. அப்போது அவர் என்னிடம் 'நான் நாகர்கோவில் கிளப்பின் செயலர். உனக்கு வேண்டிய புத்தகங்கள் அங்கிருந்து கிடைக்கச் செய்கிறேன்; பொழுதும் போகும்; அறிவும் வளரும்' என்றார்.

புத்தகங்கள் படிக்கும் வழக்கமே அப்போது தான் எனக்கு ஏற்பட்டது. பள்ளியில் நான் தமிழ் படிக்கவில்லை. என் 18வது வயதில் சிலேட்டு வாங்கித் தமிழ் எழுத்துகளை எழுதிப் படிக்கத் தொடங்கினேன். என் இந்த முயற்சியைக் கண்டு ரொம்ப ரொம்ப சந்தோஷப்பட்டு என்னைத் தட்டிக் கொடுத்து பாராட்டினார் டி.வி.ஆர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

டி.வி.ஆருக்குள் ஒரு புரட்சியாளர் இருந்தார். அவர் தொட்ட எல்லாவற்றிலும் அதைப் பார்க்க முடியும். அவற்றின் முகமாக விளங்குகிறது தினமலர்.

- மாலன், பத்திரிகையாளர்
maalan@gmail.com

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RM -  ( Posted via: Dinamalar Android App )
03-அக்-201900:00:12 IST Report Abuse
RM திரு. டி.வி.ஆர் அவர்களின் மனப்பூர்வமான அர்ப்பணிப்பு, சமுதாய நலனில் உண்மை ஆர்வம்,இவைதான் காலங்கள் கடந்தாலும் பத்ரிக்கை உலகில்தினமலரின் தனி இடத்திற்கு காரணம்.
Rate this:
Share this comment
Cancel
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
02-அக்-201911:29:04 IST Report Abuse
வல்வில் ஓரி தினமலருக்கு வாழ்த்துக்கள் அதன் நிறுவனருக்கு வணக்கங்கள்
Rate this:
Share this comment
Cancel
G.VIJAYABASKAR - Tiruchchirappalli,இந்தியா
02-அக்-201910:41:09 IST Report Abuse
G.VIJAYABASKAR டி . வீ .ஆர் அவர்களின் பிறந்தநாள் பத்திரிக்கை உலகத்திற்கு நன்னாள். அவர் தோற்றுவித்த 'தினமலர்' பல நூற்றாண்டுகள் காணவும்... வாழையடி வாழையென வாழ வாழ்த்துக்கள் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X