குறுகியகால வளமாக மாற்றிவிடாதீர்...

Added : அக் 03, 2019
Advertisement

தமிழகம் பல விஷயங்களில் முன்னிலை வகிக்கிறது என்பதை விட, சில மாதங்களாக காணப்படும் அடுத்தடுத்த தகவல்கள், மற்ற மாநிலங்களை விட செயல்திறன் மிக்க மாநிலமாக மாறும் காலத்தை நோக்கி பயணிக்கத் துவங்கியிருக்கிறது என்றே கூறலாம்.

எதிலும் ஊழல் அல்லது வலுமிக்க அரசியல் தலைவர்கள் ஆதிக்கம் அல்லது சில கட்சித் தலைவர்கள் மட்டும் தமிழகத்தை வழிநடத்தும் தகுதி படைத்தவர்கள் என்ற காலமாற்றம், உள்ளாட்சித் தேர்தலில் மட்டும் அல்ல, அடுத்து வரும் சட்டசபைத் தேர்தலிலும் மாற்றத்தை தரும்.ஏனெனில் ஒரு காலத்தில் காமராஜர், அடுத்தது பக்தவத்சலம், அதற்கு அடுத்ததாக அண்ணாதுரை ஆகிய முதல்வர்கள் மக்களுக்கு அடுத்தடுத்து ஏதாவது நல்லது செய்வதை அனுசரித்த அரசியல் படிப்படியாக, அதிக அளவு தேய்ந்த நிலைமாறி இருக்கிறது.

இன்று, 21ம் நுாற்றாண்டில் சமூக பிரக்ஞை என்பதும், தகவல் தொடர்பு என்பது மக்களை ஆக்கிரமிக்கும் போது, அரசு என்பது பார்வையாளராக இருக்க முடியாது என்பது நிரூபணமாகிறது.அகில இந்திய அளவில், பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி பல விஷயங்களை வெளிப்படையாக முன்னிறுத்துவதில் ஆர்வம் காட்டி அமல்படுத்துவதும் நடக்கிறது. ஆனால், நிர்வாக சீர்திருத்தம் அல்லது அரசின் நடவடிக்கைகள் மாறிவிடும் என்ற மக்கள் மனோபாவம், அதற்காக இதுநாள் வரை அவர்கள் பொறுத்திருந்த தன்மை, இனித் தொடராது என்பதின் அறிகுறிகள் அதிகம் காணப்படுகின்றன.

தமிழகத்தில், 'பேனர்' கலாசாரத்தில், சுபஸ்ரீ என்ற இளம்பெண் மரணம், பெரிய அளவில் விவாதிக்கப்பட்டதும், பேனர் வைத்த, அ.தி.மு.க., பிரமுகர் ஜெயகோபால் கைது என்பதும் அதில் ஐகோர்ட் எழுப்பிய கேள்விகளும் மக்கள் மனதில் பதிந்திருக்கும். இனியாவது பேனர் கலாசாரம் குறைய வழிவரலாம், மருத்துவ படிப்பிற்கு, தவறான வழிகளைக் கையாளும் சிலரது, 'நீட் தேர்வு' முறைகேடு சம்பவங்களில் தமிழகம் முன்னிற்பதில் பல பின்னணி உள்ளன.

டாக்டர் தொழில் என்பது வசதிகளை குவிக்கும் தொழில் என்பதால், ஒரு தந்தையான டாக்டர் வெங்கடேசன் தன் மகன் உதித் சூர்யாவுக்காக ஆள்மாறாட்ட விண்ணப்பம் செய்த தவறு சாதாரணமானது என்று அவர் கூறும் கருத்து, படித்த மத்தியதர மக்களில், சிலர் எந்த அளவு முறைகேடுகளை ஆதரித்தனர் என்பதின் அடையாளமாகும்.அவர் மட்டும் அல்ல, வாணியம்பாடியிலும் இதே தவறை ஒரு டாக்டர் செய்திருக்கிறார்.

இவற்றின் நடுவே முதல்வர் பழனிசாமி அதிக அளவு வெளிநாடுகளுக்கு சென்றார் என்பதை புகாராக கூறிய, தி.மு.க.,வுக்கு பதிலாக, 7,000 கோடி ரூபாய் அளவில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அதற்கான புரிந்துணர்வு தகவல்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அமைய இருக்கும் திட்டங்கள் வெளிப்படையாக நடந்திருப்பது முக்கியமானது.

முதல்வர் பயணத்திற்கு பின் சட்டசபைக் காலத்தில் இவற்றை அறிவிக்கவோ அல்லது எதிர்க்கட்சியான, தி.மு.க., வெள்ளை அறிக்கை தரக்கேட்டது, மக்கள் மனதில் நிற்க வழியின்றிச் செய்திருக்கிறது.இனி அடுத்ததாக இத்திட்டங்கள் அமலாவதில் தாமதம் ஏற்படுமா, அதற்கான அறிகுறிகள் அதிகம் தெரியுமா என்பதை இனி தான் பார்க்க வேண்டும். அதன் எதிரொலியாக நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை இடைத்தேர்தல் முடிவுகள் காணப்படும் என்பது வாதத்திற்கு சரியாக இருக்கலாம்.

ஆனால், இடைத்தேர்தல் என்பதை மையமாக்கி சட்டசபை பலம் கணிக்கப்படும் சூழ்நிலை, அண்டை மாநிலமான கர்நாடகம் போல இங்கு இல்லை. அங்கு முதல்வர் எடியூரப்பா தலைமையிலான அரசுக்கு தனி மெஜாரிட்டி பெற ஆறு எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தேவை. தமிழகத்தில் புரட்டாசி மாதத்திற்கு முன்பே பல மாவட்டங்களில் மழைப் பொழிவும், மேட்டூர் அணைக்கு அதிக அளவு காவிரி நீர் வருகையும், நம் வறட்சியை குறைக்கலாம்.

தமிழகத்தின் நீர் மேலாண்மையை கவனிக்க சில முடிவுகளை தமிழக அரசு எடுத்திருந்த போதும், தமிழகத்தில் நெல் விளைச்சலும், கரும்பும் அதிகரிக்கப் போகிறதா என்பதை அடுத்த சில ஆண்டுகளுக்கு கண்காணிப்பது அவசியம்.அதே போல மின்தேவை அதிகரிக்காத சூழ்நிலை இப்போது ஏற்பட்டாலும், இத்துறையில் இன்னமும் முழு அளவு மின்பகிர்மாண உத்திகள் அமலாகவில்லை. காரணம் மின்மாற்றிகள், மின்வழித்தடங்களில் உள்ள பழைய உத்திகள் ஆகியவை அடுத்த முன்னேற்றப் பாதைக்கு நம்மை இட்டுச் செல்லுமா என்பது, கேள்வியே.

உள்ளாட்சி அமைப்புகள், மற்ற சில கூட்டுறவு நல அமைப்புகள் மின்கட்டண பாக்கி என்பது மின்வாரியத்தின் செயலை முடக்கும் வகையில் கோடிகளில் இருப்பதும் முன்னேற்றத்திற்கு வலுவாகாது.புதிய தொழில் தொடங்க முதல்வர் வெளிநாட்டு பயணம் நிறைய முதலீட்டாளர் களை கவர்ந்திருந்த போதும், இதற்கான உட்கட்டமைப்பு விஷயங்களில், எந்த அளவு வளர்ந்த மாநிலமாக மாற உதவும் என்பதும் பல விஷயங்களில் வெளிப்படையாக வேண்டும்.ஏனெனில், மத்திய அரசு நேசக்கரம் நீட்டும் நேரத்தில், நம் வளர்ச்சி உறுதி செய்யப்படாத பட்சத்தில், அதிக வேலைவாய்ப்புகள் என்பது குறுகியகால வளமாக மாறலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X