ஐதராபாத் நிஜாம் பணம் இந்தியாவுக்கே சொந்தம்: லண்டன் கோர்ட் தீர்ப்பு| Pakistan Loses UK Court Battle For Hyderabad Nizam's 35 Million Pounds | Dinamalar

ஐதராபாத் நிஜாம் பணம் இந்தியாவுக்கே சொந்தம்: லண்டன் கோர்ட் தீர்ப்பு

Updated : அக் 03, 2019 | Added : அக் 03, 2019 | கருத்துகள் (32) | |
லண்டன் : நெட் வெஸ்ட் வங்கி கணக்கில் உள்ள ஐதராபாத் நிஜாமின் 350 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்துக்கு உரிமை கொண்டாடிய பாகிஸ்தானின் கோரிக்கையை நிராகரித்து 'அந்த பணம் இந்தியாவுக்கே சொந்தம்' என லண்டன் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.இந்தியா -பாகிஸ்தான் பிரிவினையின்போது நிஜாம் ஆட்சியின் கீழ் தனி சமஸ்தானமாக இருந்த ஐதராபாதை இந்தியாவுடன் இணைக்க முயற்சி
ஐதராபாத் நிஜாம், பணம், இந்தியா, பாகிஸ்தான், லண்டன்  கோர்ட், தீர்ப்பு

லண்டன் : நெட் வெஸ்ட் வங்கி கணக்கில் உள்ள ஐதராபாத் நிஜாமின் 350 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்துக்கு உரிமை கொண்டாடிய பாகிஸ்தானின் கோரிக்கையை நிராகரித்து 'அந்த பணம் இந்தியாவுக்கே சொந்தம்' என லண்டன் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


latest tamil newsஇந்தியா -பாகிஸ்தான் பிரிவினையின்போது நிஜாம் ஆட்சியின் கீழ் தனி சமஸ்தானமாக இருந்த ஐதராபாதை இந்தியாவுடன் இணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதற்கு நிஜாம் எதிர்ப்பு தெரிவித்தார்.இதையடுத்து ஐதராபாத் மீது இந்தியா ராணுவ நடவடிக்கை எடுத்தது. இதை எதிர்கொள்ள பாகிஸ்தான் தரப்பிலிருந்து நிஜாமுக்கு ஆயுதங்கள் அளிக்கப்பட்டன. இதற்கு பிரதி உபகாரமாக 1948-ம் ஆண்டு ஐதராபாத் நிஜாமின் பல கோடி ரூபாய் பணம் பிரிட்டன் தலைநகர் லண்டனில் இருந்த பாக். துாதர் ஹபிப் இப்ராகிம் ரஹிம்துலாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.அப்பணம் பாக். துாதர் பெயரில் லண்டனில் உள்ள நெட் வெஸ்ட் வங்கி கணக்கில் 'டெபாசிட்' செய்யப்பட்டது.
இந்நிலையில் ஐதராபாத் இந்தியாவுடன் இணைந்த பின் கொடுத்த பணத்தை நிஜாம் திரும்பக் கோரினார். ஆனால் பாகிஸ்தான் திருப்பி தர மறுத்தது. இதற்கிடையே 'பணம் யாருக்கு சொந்தம் என தெளிவாக தெரிந்தால் மட்டுமே அதை உரியவரிடம் தருவோம்' என நெட் வெஸ்ட் வங்கி தெரிவித்தது.இது தொடர்பாக லண்டன் உயர் நீதிமன்றத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பல ஆண்டுகளாக வழக்கு நடந்து வந்தது.
நிஜாமின் வாரிசுகள் இந்தியாவுடன் கைகோர்த்து வழக்கை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் கடந்த ஜூனில் இறுதி கட்ட விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.இந்நிலையில் லண்டன் உயர் நீதிமன்றம் நேற்று அளித்த தீர்ப்பில் கூறியதாவது: நெட் வெஸ்ட் வங்கியில் உள்ள நிஜாமின் பணத்திற்கு உரிமை கொண்டாட பாகிஸ்தானுக்கு எந்த முகாந்திரமும் இல்லை. இந்தப் பணம் ஐதராபாத்தின் ஏழாவது நிஜாமுக்கே சொந்தம்.
இப்போது அவர் உயிருடன் இல்லாத நிலையில் இந்தப் பணம் இந்தியாவுக்கும் ஏழாவது நிஜாமின் இரண்டு பேரன்களுக்கும் தான் சொந்தம்.இவ்வாறு லண்டன் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.லண்டனின் நெட் வெஸ்ட் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட நிஜாமின் பணம் இப்போது வட்டியுடன் சேர்த்து 350 கோடி ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது.


Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X