அரியலுார்: பெற்ற தாய்க்கு தங்குவதற்கு வீட்டில் இடம் கொடுக்காத இரு மகன்கள், அவரை தெருவில் வீசிய சம்பவம், அரியலுாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அரியலுார் மாவட்டம், செங்குந்தபுரம் கிராமம், கம்பர் தெருவைச் சேர்ந்த, மாணிக்கம் மனைவி பட்டம்மாள், 95. இவருக்கு சண்முகம், 65, சதாசிவம், 59, சரோஜா, சகுந்தலா ஆகிய நான்கு பிள்ளைகள் உள்ளனர். அனைவருக்கும், திருமணமாகிவிட்டது.
ஓய்வு பெற்ற ஆசிரியர்:
மகன்கள் இருவரும், அதே கிராமத்தில், அருகருகே வசிக்கின்றனர். ஒருவர், 'சுவீட்ஸ்' கடை வைத்துள்ளார்; மற்றொருவர், ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.
கடந்த, நான்கு ஆண்டுகளுக்கு முன், மாணிக்கம் இறந்துவிட்டதால், பட்டம்மாள் தனியாக வசித்தார். முதுமையின் காரணமாக, உடல்நலம் குன்றிய பட்டம்மாள், மகன்களின் உதவியை நாடினார். ஆனால், மகன்கள் இருவரும், அவரை வீட்டில் சேர்க்க மறுத்தனர்.
இதையடுத்து, சகுந்தலாவின் கணவர் சிவகுருநாதன், வடலுாரில் உள்ள விடுதி ஒன்றில், பட்டமாளை சேர்த்தார். தன் மகன்களை பார்க்க வேண்டும் என்று ஆவலில், சில மாதங்களுக்கு முன், செங்குந்தபுரம் கிராமத்துக்கு சென்றார். அப்போதும், இரண்டு மகன்களும், அவரை ஏற்காததால், மகள் சகுந்தலா வீட்டில் வசித்தார். இந்நிலையில், சகுந்தலா, தன், இரு சிறுநீரகமும் பாதிக்கப்பட்டு நோய்வாய்ப்பட்டார். இதனால் மாமியாரையும், மனைவியையும், சிவகுருநாதனால் கவனிக்க முடியவில்லை. இதனால், மாமியார் பட்டம்மாளை, அவரது மகன்களிடம் விடலாம் என நினைத்து, நேற்று முன்தினம் இரவு, செங்குந்தபுரத்திற்கு அழைத்து சென்றுள்ளார். ஆனால், இரு மகன்களும், பெற்ற தாயை, அவர்களது வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை. அவர்கள் மனம் மாறுவர் என நினைத்து, பட்டம்மாளை அங்கேயே அமர வைத்து விட்டு, சிவகுருநாதன் கிளம்பினார்.
மகன்களுக்கு அறிவுரை:
இந்நிலையில், மகன்கள் இருவரும், பட்டம்மாளை துாக்கி வந்து, தெருவில் போட்டனர். நேற்று முன்தினம் இரவு முழுவதும், கொசுக்கடியிலும், பனியிலும், பட்டம்மாள் கிடந்தார். இதனால், அவரது உடல்நலம் மேலும் பாதிக்கப்பட்டது. இதைக் கண்ட கிராம மக்கள், மகன்கள் இருவரையும் அழைத்து, உங்கள் தாயை, நீங்கள் தான் கவனித்துக்கொள்ள வேண்டும் என, அறிவுரை வழங்கினர். அவர்கள், ஏற்றுக்கொள்ள மறுத்தனர்.
இதனால், '108' ஆம்புலன்ஸ் மூலம், பட்டம்மாளை, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில், கிராம மக்கள் சேர்த்தனர். அவரை, சக நோயாளிகளின் உறவினர்கள் மற்றும் செங்குந்தபுரத்தைச் சேர்ந்த மக்கள் கவனித்து வருகின்றனர். இதுகுறித்து, கிராம மக்கள் கொடுத்த புகாரின்படி, ஜெயங்கொண்டம் போலீசார் விசாரிக்கின்றனர்.