பாட்னா : நாட்டில் கும்பல் வன்முறை அதிகரித்து விட்டதாக கூறி பிரதமருக்கு கடிதம் எழுதியது தொடர்பான விவகாரத்தில், நடிகை ரேவதி பிரபல சினிமா இயக்குனர்கள் அடூர் கோபால கிருஷ்ணன், மணிரத்னம் உள்ளிட்ட 50 பேர் மீது பீஹார் போலீசார் தேச துரோக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நாடு முழுவதும் கும்பல் வன்முறை அதிகரித்து விட்டதாகவும் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்களை தடுத்து நிறுத்தும்படியும் சினிமா உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 50 பேர் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜூலையில் கடிதம் எழுதினர். திரைப்பட இயக்குனர்கள் மணிரத்னம் அடூர் கோபால கிருஷ்ணன் ஷ்யாம் பெனகல் அபர்ணா சென் வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா நடிகையர் ரேவதி கொங்கனா சென் உள்ளிட்ட 50 பேர் இந்த கடிதத்தை எழுதியிருந்தனர்.
இது தொடர்பாக பீஹார் மாநிலத்தை சேர்ந்த சுதீர் குமார் ஓஜா என்ற வழக்கறிஞர் முஜாப்பர்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் 'இந்த பிரபலங்கள் தங்கள் கடிதத்தில் எழுதியிருந்த விஷயத்தை ஊடகங்களிடம் வெளிப்படையாக தெரிவித்ததன் மூலம் நம் நாட்டின் புகழுக்கும் பிரதமரின் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தி விட்டனர். அவர்கள் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் இந்த பிரபலங்களுக்கு எதிராக தேச துரோக வழக்கு பதிவு செய்ய பீஹார் போலீசாருக்கு உத்தர விட்டார். இதையடுத்து பீஹார் மாநிலம் முஜாப்பர்பூர் போலீசார் ரேவதி உள்ளிட்ட பிரபலங்களுக்கு எதிராக தேச துரோகம் தேச ஒற்றுமைக்கு பாதிப்பு ஏற்படுத்துவது ஆகிய பிரிவுகளின் கீழ் எப்.ஐ.ஆர். எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். பிரபலங்கள் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு சினிமா பிரபலங்கள் எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ராகுல் கண்டனம்
பிரதமருக்கு கடிதம் எழுதிய பிரபலங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு காங்கிரஸ் எம்.பி., ராகுல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்; அவர்கூறியதாவது: நாட்டில் என்ன நடக்கிறது என எல்லாருக்கும் தெரியும். இதில் எந்த ரகசியமும் இல்லை. பிரதமர் மோடிக்கு எதிராக, மத்திய அரசுக்கு எதிராக, யார் யாரெல்லாம் பேசுகின்றனரோ அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கின்றனர். ஊடகங்கள் நசுக்கப்படுகின்றன. சர்வாதிகார ஆட்சியை நோக்கி நாடு செல்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE