'ஏம்ப்பா... நாம காசு கொடுக்குறோம்; நடிகன் நம்மளை சந்தோஷப்படுத்துறான்; அவ்வளவு தானே! அப்படி இருக்குறப்போ, நீ ஏம்ப்பா அவனை, 'தலைவன்'னு கூப்பிடுறே; நியாயப்படி, நீதானே அவனுக்கு தலைவன்?'இப்படி ஒரு கேள்வியை, நாம நம்ம அப்பா கிட்டே கேட்டிருந்தா, இன்னைக்கு, 5 வயசுல இருக்குற நம்ம பொண்ணோ, பையனோ, பிகில் படத்தை, முதல் நாளே பார்த்தாகணும்னு நம்ம கிட்டே முன்பதிவு பண்ணாது; இல்லையா?
ஏன் தமிழா... நம்ம சோத்துல உப்பு இருக்குதா; எதுக்காக, இதை கேட்குறேன்னா... புதிய கல்வி கொள்கை பற்றியெல்லாம் நம்ம நடிகருங்க கருத்து சொல்றாங்களே...'ஏன் சொல்லக் கூடாதா?'அய்யோ நண்பா... ஜனநாயக நாட்டுல யாரு வேணுமின்னாலும் கருத்து சொல்லலாம்ப்பா. ஆனா, அதுக்கு முன்னாடி, நம்ம மேல கறை இருக்குதான்னு பார்க்கணுமா; இல்லையா?
என்ன கறை?
ஆங்... இது கேள்வி! இப்போ, ஊருக்கொரு ரசிகர் மன்றத்தை வைச்சுக்கிட்டு, 'நான் ரொம்ப பெரிய ஆளு'ன்னு சொல்லிட்டு இருக்குற எந்தவொரு நடிகரும், ரசிகர் கூட்டத்துக்கு நடுவுல மைக் பிடிச்சா சொல்றது என்ன; 'நண்பா... எல்லாரும் முதல்ல அவங்கவங்க குடும்பத்தை பாருங்க; குடும்பத்துக்கு அப்புறம் தான்... நான்!'யோசி... அவங்க ஏன் இப்படி சொல்லணும்; ஏன்னா, சினிமா போதையில இருக்குற தமிழன், 'உணர்வுப்பூர்வமான முட்டாள்'ங்கிறது, சினிமாக்காரனுக்கு நல்லாவே தெரியும். இதுக்கு ஒரு சின்ன உதாரணம்... தர்பார் படத்தை இயக்கிட்டு இருக்குற இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், தன்னோட, ரமணா படத்துல வைச்ச ஒரு வசனம்!அதுல, ஊழல்வாதிகளை தண்டிக்கிற நாயகனை, யாரும் காட்டிக் கொடுக்காத சூழல்ல, வட நாட்டு காவல் துறை அதிகாரி, தமிழர்களை பார்த்து கோபமா சொல்ற வார்த்தை... 'சென்டிமென்டல் இடியட்ஸ்!'அதைக்கேட்டு, படம் பார்த்துட்டு இருந்த எந்த ஒரு தமிழனுக்கும் கோபம் வரலை; அரங்கத்துக்கு வெளியே எந்த ஒரு போராட்டமும் நடக்கலை! 'தமிழுக்கும், தமிழனுக்கும் ஓர் இழுக்குன்னா பொங்கிருவோம்'னு இப்போ ஊளையிடுற அத்தனை கரை வேட்டிகளும், அன்னைக்கு... மூச்! படம்... ஹிட்; தமிழனோட மானம்... அவுட்!அப்போ, நாம, 'சென்டிமென்டல் இடியட்ஸ்' தானா?
ஆஹா... தலைவா!
இதோ... இப்போ கூட, நடிகர் விஜய் சொன்னாரே... 'என் பேனர், கட் அவுட் எதுல வேணும்னாலும் கை வைங்க; ஆனா, என் ரசிகன் மேல மட்டும் கை வைக்காதீங்க!' - இதை கேட்டதும், 'ஆஹா... தலைவா...'ன்னு புல்லரிச்சு போயிருச்சுல்ல நம்ம கூட்டம். அப்போ நாம யாரு?இந்த இடத்துல தான் அந்த கேள்வியை கேட்டாகணும்... எந்த நடிகனாவது, 'நல்லா படிங்க; நிறைய படிங்க; நிறைய மொழி கத்துக்கோங்க; உலகம் முழுக்க சுத்துங்க; உங்க பொருளாதார நிலைமையை உயர்த்திக்கோங்க'ன்னு, தன்னோட ரசிகர்களுக்கு அறிவுரை சொல்லி கேட்டிருக்கோமா; கிடையாது!எப்படி சொல்ல முடியும்; அப்படி சொல்லி அவன் படிக்கப் போயிட்டா, படிச்சு முன்னேறிட்டா, சினிமாவுக்கு ரசிகர் படையும், அரசியலுக்கு தொண்டர் படையும் எப்படி கிடைக்கும்; யோசிச்சு பாருங்க...
நடிகனுக்கு பேனர் கட்டுறவனும், பால் அபிஷேகம் பண்றவனும், பிஎச்.டி., முடிச்சவனா என்ன?எந்த ஒரு ரசிகர் மன்றத்துலேயாவது ஓர் ஆசிரியர், பிரபல மருத்துவர், அரசு அதிகாரி, காவல் துறை அதிகாரி, மாவட்ட ஆட்சியர், இப்படி யாராவது உறுப்பினரா இருக்காங்களா; பிடிக்கும்... அவங்களுக்கும் எல்லா நடிகர்களையும் பிடிக்கும்; ஆனா, நடிகனை நடிகனா மட்டும் பார்க்கிறதுக்கு அவங்க படிப்பும், நல்ல வேலையும், அது தர்ற அனுபவமும் சொல்லித் தந்திருக்கு.ஆனா, சினிமா வெறி கொண்ட ரசிகனுக்கு?
நடிகன் யாரு?
நடிகன் - மிகச் சாதாரணமான ஆள்; நாம இல்லேன்னா அவன் இல்லை!நாம வணங்க ஆயிரம் கடவுள் இருக்கலாம்; ஆனா, அவனுக்கு நாம மட்டும் தான் கடவுள். இந்த உண்மை தெரிஞ்சும், நடிகன் படத்தைப் போட்டு, 'கடவுள்'னு போஸ்டர் அடிக்கிறோமே தமிழா!எது யதார்த்தமோ, எது உண்மையோ, அதை நம்ம கண் முன்னாடி நிகழ்த்தி காட்டுற ஒரு நாடக கலைஞனை, 'சர்க்கஸ்' கலைஞனை, நாட்டுப்புற கலைஞனை நாம இந்தளவுக்கு கொண்டாடுறோமா... மாட்டோம்; ஏன்னா, உண்மைகள் நமக்கு பிடிக்காது!ஆனா, சாத்தியமில்லாத பொய்கள் நமக்கு ரொம்ப பிடிக்கும். அதனால தான், திரையில அதை நிகழ்த்தி காட்டுற சினிமா நடிகனை, நாம அண்ணாந்து பார்க்குறோம்; அவனுக்கு எல்லாம் தெரியும்னு நம்புறோம்; 'எந்த ஏழு பேரு'ன்னு கேட்டா கூட, 'அந்த ஏழு பேரு'ன்னு விளக்கம் கொடுத்து, பல்லை காட்டுறோம்!நடிகனுக்கும், 40 வயசுல நரை விழும்; 50க்கு மேல பற்கள் ஆட்டம் காணும்; 60க்கு மேல அவனுக்கும் மூட்டு வலி வரும்னு, நம்ம மர மண்டைக்கு புரிய மாட்டேங்குது! 60 வயசு கடந்த தகப்பனை, 'கம்முன்னு ஒரு மூலையில இரு'ன்னு சொல்ற நாம, 60ஐ கடந்த சினிமா நடிகனை, 'நாடாள வா'ன்னு கூப்பிடுறோமே... இது, அசிங்கம் இல்லையா?
தெரியுமா நண்பா?
இலவச கல்வி, இலவச உணவு, இலவச சீருடை, இலவச, 'டிவி', இலவச சிகிச்சைன்னு, தமிழக குடும்பங்கள்ல பாதிக்கும் மேல இலவசங்களால தான் வாழ்க்கையை ஓட்டிட்டு இருக்கு. இப்படிப்பட்ட குடும்பத்துல இருக்குற ஓர் ஆண் சம்பாதிக்கிற பணத்துல பாதி... டாஸ்மாக்குக்கு; மீதி, சினிமாக்காரனுக்கு!உனக்கு தெரியுமா நண்பா;கொஞ்ச நாளைக்கு முன்னாடி, கடலுார் மாவட்டம் புவனகிரியில, காப்பான் பட ரிலீசை கொண்டாடுறோம்னு, நடுரோட்டுல ஆட்டம் போட்டுட்டு இருந்த, நடிகர் சூர்யா ரசிகர்களை, புவனகிரி இன்ஸ்பெக்டர் கண்டிச்சிருக்கார். கூடவே, 'இனிமே இப்படி செய்ய மாட்டோம்'னு எழுதி தரச் சொல்லியிருக்கார்.தாய்மொழியான தமிழ்ல, தப்பும் தவறுமா அவங்க எழுதின கடிதத்தை, கண் கொண்டு பார்க்க முடியலை. இத்தனைக்கும், பசங்க அத்தனை பேரும் கல்லுாரி மாணவர்கள்!இந்த சம்பவம் நடந்து இரண்டு வாரத்துக்கு மேல ஆகுது.
பல தமிழ் மாணவர்களோட உயர் கல்விக்கு உதவிட்டு வர்ற நடிகர் சூர்யாவோட, 'அகரம்' அறக்கட்டளையில இருந்து, அந்த பசங்களுக்கு கல்வி பயிற்றுவிக்கப் போறதா எந்த அறிவிப்பும் வரலை.ஆனா, புதிய கல்வி கொள்கையை நடிகர் சூர்யா விமர்சிக்கிறார். அதுவும், அரசுப்பள்ளியில படிச்சு சாதிச்ச மாணவர்களுக்கு பரிசு வழங்குற மேடையில வைச்சு, 'சமமான கல்வி கொடுக்காம, பொதுத்தேர்வு எப்படி நடத்த முடியும்'னு சூடாகுறார்!'ஏன் சூர்யா... அரசுப்பள்ளியில படிக்கிற மாணவர்கள்ல, உங்ககிட்டே பரிசு வாங்குற அளவுக்கு ஒருத்தன் சாதிக்கிறான்; இன்னொருத்தன் சறுக்குறான்னா, பிரச்னை... கற்பிக்கிறதுலேயா; கத்துக்குறதுலேயா?'ன்னு நாம கேட்டிருக்கணும்; ஆனா, கேட்கலை!
மேடை அவசியம்!
இதோ... சுபஸ்ரீ இறந்து இத்தனை நாளைக்கு அப்புறம், பிகில் இசை வெளியீட்டு விழா மேடையில, நடிகர் விஜய், பேனர் கலாசாரத்தை கண்டிக்கிறார். 'ஆக, உங்க சினிமாவுக்கான மேடை அப்போ அமையலேன்னா, சுபஸ்ரீ மரணத்தைப் பற்றி பேசியிருக்கவே மாட்டீங்க; அப்படித்தானே நண்பா?'ன்னு நாம யாராவது கேட்டோமா?
துாத்துக்குடி துப்பாக்கி சூடு நடந்தப்போ, நள்ளிரவு நேரத்துல பாதிக்கப்பட்டவங்க வீட்டுக்கு போய் ஆறுதல் சொன்ன விஜய், சுபஸ்ரீ வீட்டுக்கு இன்னும் ஏன் வரலை; ரஜினி ஏன் வரலை; சூர்யா, கார்த்தி, தனுஷ் ஏன் வரலை; அட... எல்லாத்துக்கும் முதல் ஆளா வர்ற, நம்ம வீட்டு பிள்ளை ஏம்ப்பா வரலை!ஏன்னா... இன்னைக்கு முளைச்ச சிவகார்த்திகேயனும், 'ரசிகர்களே... நீங்க இல்லேன்னா நான் இல்லை!'ங்கிற அதே பல்லவியைத் தான் பாடுறாரு!விவேகம் இல்லையே!நாம படிக்காததை, நம்ம வீட்டு பிள்ளைங்க படிக்காததை, நாம கும்பிடுற நடிகர் வீட்டு பிள்ளைங்க படிக்குதுங்கிறது, நமக்கு நல்லா தெரிஞ்ச உண்மை! தப்பும் தவறுமா பேசினாலும் எழுதினாலும், நமக்கு தமிழ் தவிர எதுவும் தெரியாது; ஆனா, நடிகர் வீட்டு பிள்ளைகளுக்கு தமிழ் தெரியுமோ என்னவோ... கண்டிப்பா மற்ற மொழிகள் தெரியும்!யோசிச்சுப் பாருங்க... சினிமா டிக்கெட் கட்டண உயர்வு தொடர்பா பேசினா, 'நாங்க தயாரிக்கிற பொருளுக்கு அரசு எப்படி விலை நிர்ணயம் பண்ணலாம்?'னு, 'மெர்சலா' முஷ்டி முறுக்குற நடிகர்கள்கிட்டே, 'எங்க ரசனையை எப்படி நீங்க குறைச்சு மதிப்பிடலாம்; இப்படி ஒரு மட்டமான படத்துக்கு இத்தனை ரூபாய் கட்டணமா?'ன்னு, 'விவேகமா' என்னைக்காவது கேட்டிருக்கோமா?இதுக்கும் மேல... நம்ம சோத்துல உப்பு இருக்குதா, இல்லையான்னு யோசிக்காம தான் இருக்கணுமா தமிழா?
காப்பானா நடிகன்?
கடலுார் சம்பவம் மூலமா, தமிழ் நடிகர்களோட ரசிகர்கள் என்ன மாதிரியான கல்வி தரத்துல இருக்குறாங்கங்கிறது வெளிச்சத்துக்கு வந்திடுச்சு. இது மூலமா, அரிதிலும் அரிதான ஒரு சந்தர்ப்பம், நம்ம காவல் துறைக்கு கிடைச்சிருக்கு. ஆமா... இனிமே குற்றவாளிகளை ஊடகங்கள்கிட்டே அறிமுகப்படுத்தும் போது, 'சம்பந்தப்பட்ட குற்றவாளி இந்த கட்சிக்காரன்'னு சொல்றதோட சேர்த்து, 'இந்த நடிகனுடைய ரசிகன்'னும் காவல் துறை சொல்லணும்.'என் ரசிகர்கள் மேல கை வைக்காதீங்க'ன்னு சொல்ற நடிகர்கள், ஏதாவது குற்றத்துல தன் ரசிகர்கள் சம்பந்தப்பட்டிருக்காங்கன்னு தெரிஞ்சா, என்ன செய்றாங்கன்னு இனி தமிழகம் பார்க்கணும்; அது மூலமாவது, நம்ம சினிமா பைத்தியம் தெளியணும்; நாம திருந்தணும்!
ஞாபகம் இருக்கா நண்பா; ஜல்லிக்கட்டுக்கான மெரினா போராட்டத்தை துவக்கி வைச்சது சினிமாக்காரன் இல்ல; ஆனா, அதை முடிச்சு வைச்சது...புத்தி இருந்தா புரிஞ்சுக்கோ; பொழைச்சுக்கோ!
துரைகோபால்
சமூக ஆர்வலர்
தொடர்புக்கு: duraigopal40@gmail.com