பீஹாரில் திடீர் மோதலால் கூட்டணியில் விரிசல்?| Dinamalar

பீஹாரில் திடீர் மோதலால் கூட்டணியில் விரிசல்?

Updated : அக் 08, 2019 | Added : அக் 06, 2019 | கருத்துகள் (2)
Share
பாட்னா : பீஹாரில், பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில், 100க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், மீட்புப் பணிகள் முடுக்கி விடப்படாததால், டெங்கு காய்ச்சல் போன்ற நோய்கள் வேகமாக பரவி வருகின்றன. 'மீட்புப் பணியை சரியாக மேற்கொள்ளாத, முதல்வர் நிதிஷ் குமார் பதவி விலக வேண்டும்' என, கூட்டணி கட்சியான, பா.ஜ., திடீரென எதிர்ப்பு குரல் எழுப்பியுள்ளது. இதற்கு பதிலடியாக, ஐக்கிய
பரஸ்பரம், வெள்ள நிவாரணம், கூட்டணி, விரிசல், மோதல்

பாட்னா : பீஹாரில், பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில், 100க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், மீட்புப் பணிகள் முடுக்கி விடப்படாததால், டெங்கு காய்ச்சல் போன்ற நோய்கள் வேகமாக பரவி வருகின்றன. 'மீட்புப் பணியை சரியாக மேற்கொள்ளாத, முதல்வர் நிதிஷ் குமார் பதவி விலக வேண்டும்' என, கூட்டணி கட்சியான, பா.ஜ., திடீரென எதிர்ப்பு குரல் எழுப்பியுள்ளது. இதற்கு பதிலடியாக, ஐக்கிய ஜனதா தளம் கட்சியினரும், பா.ஜ.,வினரை விமர்சிப்பதால், கூட்டணி முறியும் அபாயம் நிலவுகிறது.

பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. பா.ஜ.,வைச் சேர்ந்த சுஷில் குமார் மோடி, துணை முதல்வராக உள்ளார். சமீபத்தில், பீஹாரில் பெய்த பலத்த மழை, மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளை வெள்ளக்காடாக்கி விட்டது.


தொற்று நோய்


லட்சக்கணக்கான மக்கள், வீடுகளை விட்டு வெளியேறி, நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். இதுவரை, 100க்கும் மேற்பட்டோர் வெள்ளப் பெருக்கிற்கும், மழைக்கும் பலியாகியுள்ளனர். தலைநகர் பாட்னா, வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. மழை நின்று, ஒரு வாரத்துக்கு மேலாகியும், மீட்புப் பணிகள் முழுவீச்சில் துவங்கவில்லை. குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால், தொற்று நோய் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

டெங்கு போன்ற நோய்களும் வேகமாக பரவி வருகின்றன. மருத்துவமனைகளில் நோயாளிகள் குவிந்துள்ளனர். துணை முதல்வர் சுஷில் குமார் மோடி, தன் குடும்பத்தினருடன், வீட்டிலிருந்து, படகில் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில், மீட்புப் பணிகள் மந்தமாக நடப்பதால், ஆளும் கூட்டணி கட்சிகளான, ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., இடையே மோதல் அதிகரித்துள்ளது.

இரு கட்சியினருமே, ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். பா.ஜ.,வைச் சேர்ந்தவரும், மத்திய கால்நடைத் துறை அமைச்சருமான கிரிராஜ் சிங் கூறியதாவது: ஒரு கப்பலில் பிரச்னை ஏற்பட்டு, அதனால் பயணியருக்கு பாதிப்பு ஏற்பட்டால், அதற்கு, அந்த கப்பலின் கேப்டன் தான் பொறுப்பேற்க வேண்டும். அதேபோல், ஒரு மாநிலத்தில் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், அந்த மாநிலத்தின் முதல்வர் தான், அதற்கு பொறுப்பேற்க வேண்டும்.

மழை நின்று ஒரு வாரமாகியும், மீட்புப் பணிகளை துவங்கவில்லை என்றால், அதிகாரத்தில் இருப்பவர்கள் தான், இதற்கு பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார். மேலும், முதல்வர் நிதிஷ் குமாரை விமர்சித்து, சமூக வலைதளங்களில் தினமும், கடுமையான விமர்சனங்களை பதிவிட்டு வருகிறார். மாநில நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான சுரேஷ் சர்மா கூறுகையில், ''அமைச்சர் என்ற முறையில், அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கிறேன். ''ஆனால், அவர்கள் அதை செயல்படுத்துவது இல்லை. முதல்வர் நிதிஷ் குமார் தான், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.


இயற்கை சீற்றம்


இவர்கள் தவிர, பா.ஜ.,வில் உள்ள இரண்டாம் நிலை தலைவர்களும், முதல்வர் நிதிஷ் குமாரையும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியினரையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதற்கு பதிலடியாக, ஐக்கிய ஜனதா தளம் கட்சியினரும், பா.ஜ., தலைவர்களை விமர்சித்து வருகின்றனர். ஐக்கிய ஜனதா தளம் கட்சி செய்தி தொடர்பாளர் கே.சி.தியாகி கூறியதாவது: பீஹாரில் நடப்பது, ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி. மீட்புப் பணி விஷயத்தில், எங்களுக்கு எவ்வளவு பொறுப்பு உள்ளதோ, அதே பொறுப்பு, பா.ஜ.,வினருக்கும் உள்ளது. இயற்கை சீற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு, அரசியல் உள்நோக்கம் கற்பிப்பது தவறு. கூட்டணி தர்மத்தை மீறி பேசும், மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் மீது, பா.ஜ., மேலிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக, பா.ஜ.,வுக்கு ஆதரவாக, பிரதான எதிர்க்கட்சியான, லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியினர் கருத்து தெரிவித்துள்ளனர். அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் ரகுவன்ஸ் பிரசாத் சிங், மனோஜ் ஜெயின் ஆகியோர், 'வெள்ள பாதிப்புக்கு நடவடிக்கை எடுக்கவில்லை' என, முதல்வர் நிதிஷ் குமாரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இவர்கள், பா.ஜ., தலைவர்களுடன், மறைமுகமாக பேச்சு நடத்தி வருவதாகவும், தகவல்கள் வெளியாகி உள்ளன. இது, ஐக்கிய ஜனதா தள தலைவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், ஒருவர் மீது ஒருவர், கடும் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருவதால், கூட்டணி முறியும் அபாயம் உள்ளதாக, அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


சட்டசபை பலம் என்ன?


பீஹார் சட்டசபையின் மொத்த பலம், 243. இதில், ஆளும் கூட்டணியில், ஐக்கிய ஜனதா தளத்துக்கு, 69 உறுப்பினர்களும்; பா.ஜ.,வுக்கு, 52 உறுப்பினர்களும் உள்ளனர். கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கு, ஆறு உறுப்பினர்கள் உள்ளனர். எதிர்க்கட்சி வரிசையில், ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கு, 79 உறுப்பினர்கள் உள்ளனர். காங்கிரசுக்கு, 26 உறுப்பினர்கள் உள்ளனர். மீதமுள்ள இடங்கள், மற்ற சிறிய கட்சிகள் வசம் உள்ளன.

பீஹாரில் ஆட்சி அமைக்க, 122 உறுப்பினர்கள் தேவை. மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கின் பேச்சு, அர்த்தமற்றதாக உள்ளது. முதல்வர் நிதிஷ் குமாருக்கு இணையாக, தன்னை நிலைநிறுத்த, அவர் முயற்சிக்கிறார். நிதிஷ் குமாரின் கால் பாதங்களில் இருக்கும் அழுக்குடன் கூட, கிரிராஜ் சிங்கை ஒப்பிட முடியாது. அடிக்கடி, 'ஹர ஹர மகாதேவா' என, சொல்வதால் மட்டும், ஒருவர் தலைவராகி விட முடியாது.

- சஞ்சய் சிங், செய்தி தொடர்பாளர், ஐக்கிய ஜனதா தளம்

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X