எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

மாமல்லபுரம் சொல்லப் போகும் செய்தி என்ன?

Updated : அக் 07, 2019 | Added : அக் 06, 2019 | கருத்துகள் (18)
Advertisement
மாமல்லபுரம், மோடி, சீன அதிபர், சந்திப்பு , முக்கியத்துவம்

பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், அடுத்த வாரம் சென்னையை அடுத்த, மாமல்லபுரத்தில் சந்திக்க இருக்கின்றனர். சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு இது. இரு தரப்பு உறவுக்கும், வர்த்தக ரீதியான நெருக்கத்துக்கும் இந்த சந்திப்பு பல வகையில் வழியமைக்கப் போகிறது.


இந்த சந்திப்பின் முக்கியத்துவம் என்ன?பாதுகாப்பு


மாமல்லபுரத்தில் இந்திய பிரதமரும், சீன அதிபரும் சந்திக்கவிருக்கின்றனர் என்ற செய்தி தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது; அதற்கான முன்னேற்பாடுகளும் வெகு வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்தக் கட்டுரை எழுதப்படும் வரை, இந்த சந்திப்புக்கான முறையான அறிவிப்பு வெளியாகவில்லை. என்னென்ன விஷயங்கள் இங்கே இரு நாட்டுத் தலைவர்களும் பேசுவர் என்பதை பற்றிய யூகங்கள் மட்டுமே வெளியாகி உள்ளன.

ஆனால், இந்த சந்திப்புக்கான ஒரு தேவை இருப்பதை, இரு நாடுகளுமே புரிந்து கொண்டுள்ளன. சீன தரப்பிலும், இந்திய தரப்பிலும் பல செய்திகளை தெளிவுபடுத்துவதற்கு, இந்த சந்திப்பு தேவையாக இருக்கிறது. இதற்கு முன், 2018ல், இரு தரப்பு தலைவர்களும், சீனாவில் சந்தித்து பேசினர். அது, ஒரு முக்கியமான முன்னேற்றமாக அப்போது கருதப்பட்டது. அதற்குப் பின், இரு தரப்பிலுமே பல நிலைப்பாடுகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதனால், இரு தரப்பிலும் வருத்தங்களும், சந்தேகங்களும் ஏற்பட்டுள்ளன.

அவற்றைச் சீர்படுத்துவதற்கு சந்திப்பு தேவை. முதலில், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும், 370வது பிரிவை நீக்கிய பின், பாகிஸ்தான் நிலைப்பாட்டுக்கே சீனா ஆதரவு அளித்து வருகிறது. ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் சந்திப்பில், காஷ்மீர் விஷயத்தை பாகிஸ்தான் எழுப்ப முயன்றபோது, அதற்கு சீனா ஆதரவு அளித்தது. இதேபோல் லடாக்கிலும், அருணாச்சல பிரதேசத்திலும் சமீபத்தில், மோதல் சூழல் ஏற்பட்டது; சண்டை ஏற்படவில்லை என்றாலும், இரு தரப்பும் முறைத்துக் கொண்டு நின்றது, கவலை அளிக்கும் விஷயம்.

இதெல்லாவற்றுக்கும் அடிப்படை ஒன்று உண்டு. அது இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா ஆகியவற்றுடன் தன்னுடைய நெருக்கத்தை அதிகப்படுத்திக் கொள்வது, சீனாவுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணத்தின் போது, சீனா தொடர்பாக தெரிவித்த கருத்துகள், வருத்தங்களை ஏற்படுத்தி உள்ளன; சீனா மீது தொடுக்கப்பட்ட, 'தாக்குதலாக' கருதப்படுகிறது. இவை தவிர, இன்னொரு முக்கிய விஷயமும் நடந்துள்ளது. அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாடுகளைக் கொண்ட ஒரு நால்வர் அணி ஏற்பட்டுள்ளது. இதை, 'குவாட்' என்றே அழைக்கின்றனர். இதில், அமெரிக்காவோடு, இந்திய ராணுவம், 1994 முதலே பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

இதில், ஜப்பானும் சேர்ந்து கொண்டது, 2015ல். அது முதல், முத்தரப்பு பயிற்சியாக மாறிவிட்டது. இது வரையில், ராணுவ பயிற்சியில் ஆஸ்திரேலியா சேர்த்துக் கொள்ளப்படவில்லை. ஆனால், நான்கு தரப்புகளும் சேர்ந்து பயிற்சி மேற்கொள்ளும் காலம் விரைவில் வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


வணிக நஷ்டம்


இன்னொரு புறம், சமீபத்தில் ரஷ்யா சென்ற மோடி, அங்கே ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டார். ரஷ்யாவின் துாரக் கிழக்குப் பகுதியான விளாடிவோஸ்டோக் துறைமுகத்தில் இருந்து, சென்னை துறைமுகத்துக்கு நேரடி சரக்குக் கப்பலுக்கான வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவற்றை எல்லாம் பார்க்கும்போது, சீனாவுக்கு வயிற்றில் புளியைக் கரைக்கிறது. அதாவது, சீன ஆதரவு இல்லாமலேயே இந்தியா, தென் கிழக்கு ஆசியப் பகுதியில் மிக முக்கியமான நாடாக உருவாக இருக்கிறது அல்லது உருவாகி வருகிறது. இதை, சீனா ரசிக்கவில்லை. அதனால், தொடர்ச்சியாக, சர்வதேச அரங்குகளில், மன்றங்களில் இந்தியாவின் முயற்சிகளுக்கு, சீனாவால் முட்டுக்கட்டை போட முடியும்.

இந்தியா தரப்பிலும் ஒரு முக்கிய பிரச்னை இருக்கிறது. சீனாவோடு எந்த வகையிலும் இடறலோ, மோதலோ வேண்டாம் என, இந்தியா விரும்புகிறது. மோதல் என்றாலே அது இந்திய தரப்பில் வணிக நஷ்டம் என்று அர்த்தம். ஒருவகையில், இணக்கமான, சமச்சீரான உறவு வேண்டும். இதில், மேலே கீழே என்ற ஏற்றத்தாழ்வுக்கு இடம் இல்லை. சீனா பெரியண்ணனாக நடந்து கொள்ள முயற்சி செய்யும்போதெல்லாம், அதற்குண்டான இடத்தைக் காண்பிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

மாமல்லபுரம் சந்திப்பு அதைத் தான் செய்யவிருக்கிறது. புன்னகையோடும், போட்டோக்களோடும் உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் அதேசமயம், 'உனக்கு நான் போட்டியில்லை, நான் என் பாட்டுக்கு வளர்கிறேன், அதனால், நீ எந்த வகையிலும் அச்சம் அடையத் தேவையில்லை' என்று சீனாவுக்கு உணர்த்தப் போகிறது இந்தியா. வளர்ச்சி என்பது சாதாரணமில்லை. வயிற்றெரிச்சலும், முட்டுக்கட்டைகளும் ஏராளம் இருக்கும். சீனா இத்தகைய முயற்சிகளில் ஈடுபடக் கூடாது என்று தெரிவிக்கவும், இந்தச் சந்திப்பு பயன்படப் போகிறது.

ஈடுபட்டால், அதற்கான மோசமான பாதிப்புகள் என்ன என்பதை, சீனாவுக்கு மறைமுகமாக உணர்த்தவும் இந்த சந்திப்பு பயன்படும். இரு தரப்பு தலைவர்களும் உலகத்துக்கு என்ன சொல்லப் போகின்றனர் என்பதை விட, அவர்களுடைய உடல்மொழி தான், உலகத்துக்குப் பல செய்திகளைச் சொல்லப் போகிறது. மாமல்லபுரம், பல்லவனின் கலையழகுக்கு மட்டுமல்ல, இந்தியாவின் ராஜதந்திரமிடுக்குக்கும் உதாரணமாக அமையட்டும்.

- ஆர்.வெங்கடேஷ், பத்திரிகையாளர்
pattamvenkatesh@gmail.com

Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Believe in one and only God - chennai,இந்தியா
11-அக்-201914:44:27 IST Report Abuse
Believe in one and only God சீன அதிபரின் முகத்தை பார்த்தால் தெரியும், உழைத்து களைத்த முகம். மோடிக்கு போஸ் கொடுப்பது மட்டும் வேலை என்பதால், அவரை சொல்ல ஒன்றும் இல்லை.
Rate this:
Share this comment
Cancel
08-அக்-201900:27:07 IST Report Abuse
srinivasan R ஒருவேளை ராவுலு பிரதமாராயிருந்தால்..... அய்யயோ மிகக்கொடூர கனவிலிருந்து விழித்தேன்..... நிஜத்தில் மோடிஜி யின் பாதுகாப்பான கரங்களில் பாரதம்... நன்றி கடவுளே. பெருமைமிகு இந்தியனாக நெஞ்சம் நிமிர்கிறேன்.
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
07-அக்-201923:55:59 IST Report Abuse
மலரின் மகள் தற்போதைய செய்திகளுடன் சம்பந்தப்பட்ட இது போன்ற கட்டுரைகளை மலரில் தொடர்ந்து வெளியிடவேண்டும். கட்டுரை சிறப்பு. ஆசிரியருக்கு வணக்கங்களும் பாராட்டுதல்களும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X