புதுடில்லி : மஹாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களுக்கு, விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், திடீரென தாய்லாந்துக்கு சென்றுள்ளது, அந்த கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் படு தோல்வி அடைந்தது. தோல்விக்கு பொறுப்பேற்று, தலைவர் பதவியை, ராகுல் ராஜினாமா செய்தார். புதிய தலைவராக, சோனியா பொறுப்பேற்றார். இதனால், காங்கிரஸ் கட்சிக்குள் கடும் குழப்பம் நிலவி வருகிறது. இதற்கிடையே, வரும், 21ல், மஹாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தல் பிரசாரத்தில், பா.ஜ., தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், காங்கிரஸ் தரப்பில் மந்தம் நிலவுகிறது.
ஹரியானா மாநில காங்., தலைவராக இருந்த அசோக் தன்வார், சமீபத்தில் கட்சியிலிருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்தார். ராகுல் ஆதரவாளர்கள், காங்கிரசில் புறக்கணிக்கப்படுவதாக, அவர் பரபரப்பான புகாரை தெரிவித்தார். இந்நிலையில், ராகுல் நேற்று, ஆசிய நாடான, தாய்லாந்துக்கு புறப்பட்டுச் சென்றதாக, காங்., வட்டாரங்கள் தெரிவித்தன. இரு மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கும் நிலையில், பிரசாரத்துக்கு வராமல், ராகுல் வெளிநாட்டுக்கு சென்றது, கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE