சென்னை : தமிழகத்தில், பெரிய வெங்காயம் உற்பத்தியை ஊக்குவிக்க, அரசு அலட்சியம் காட்டுவதால், அதன் தேவையை பூர்த்தி செய்ய, பிற மாநிலங்களை எதிர்பார்த்திருக்க வேண்டிய நிலைதொடர்கிறது.
நம்நாட்டில், பெரிய வெங்காயம் உற்பத்தியில், மஹாராஷ்டிரா மாநிலம், முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்து, கர்நாடகா, ம.பி., மாநிலங்கள் உள்ளன. அதேசமயம், வெங்காயம் பயன்பாட்டில், தமிழகம் முன்னணியாக திகழ்கிறது. திருநெல்வேலி, திருப்பூரில், சில இடங்களில் மட்டும், பெரிய வெங்காயம் விளைகிறது. திண்டுக்கல், சேலம், ஈரோடு, கோவை, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில், சின்ன வெங்காயம் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால், பெரிய வெங்காயம் தேவை, பிற மாநிலங்கள் வாயிலாகவே பூர்த்தியாகிறது.
அம்மாநிலங்களில் இருந்து, தமிழகத்தில் உள்ள மொத்த விலை காய்கறி சந்தைகளுக்கு, தினமும், லாரிகளில் வெங்காயம் வருகிறது. அங்கிருந்து, அவை சில்லரை அங்காடிகள் வாயிலாக, மக்களை சென்றடைகின்றன. இதனால், தமிழகத்திற்கு வெங்காயம் வரத்து குறைந்தால், தட்டுப்பாடு ஏற்பட்டு, அதன் விலை உயர்வது, தொடர் கதையாகிறது. சமீபத்தில், பெரிய வெங்காயம் விலை கிலோ, 60 ரூபாய்க்கு மேல் உயர்ந்தது. மத்திய வேளாண் அமைச்சகத்தின் கீழ், தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு செயல்படுகிறது. இதன் கீழ், தேசிய தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு செயல்படுகிறது.
இது, பெரிய வெங்காயம், உருளை கிழங்கு, பூண்டு மற்றும் தோட்ட பயிர்களுக்கு தேவையான தரமான விதைகளை, விவசாயிகளுக்கு குறைந்த விலையில் வழங்குகிறது. மேலும், அவற்றின் உற்பத்தி தொடர்பாக, விவசாயிகளுக்கு, ஆலோசனை மற்றும் பயிற்சிகளையும் வழங்குகிறது. இதனால், பிற மாநில அரசுகள், தேசிய தோட்டக்கலை அமைப்புடன் இணைந்து, தங்கள் மாநிலங்களில், அதிக தேவை உள்ள, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கைகள் எடுக்கின்றன. ஆனால், தமிழகத்தில், வெங்காயம் உற்பத்திக்கான சாதகமான சூழல் நிலவினாலும், அதை ஊக்குவிக்க, கூட்டுறவு துறை, வேளாண் துறைகள் அலட்சியம் காட்டுகின்றன. இதனால், அதன் விலை உயர்வதால், மக்கள் பாதிக்கின்றனர்.
இதுகுறித்து, கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பெரிய வெங்காயம் விலை உயரும்போது, கூட்டுறவு மற்றும் ரேஷன் கடைகளில், சற்று குறைந்த விலைக்கு விற்பதால், நிரந்தர தீர்வு கிடைக்காது. தேசிய தோட்டக்கலையுடன் இணைந்து, தமிழகத்தில், அதன் உற்பத்தியை அதிகரிக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE