கடிவாளம் தேவை...

Added : அக் 07, 2019
Advertisement

இப்போது பரவலாக பேசப்பட்ட பஞ்சாப் - மஹாராஷ்டிர வங்கி நிதி நெருக்கடி, இத்துறையில் பல நிதி மோசடி ஆதாரங்களை அடிப்படையாக கண்டறிய வழி கண்டிருக்கிறது.சுதந்திர இந்தியாவில், கூட்டுறவு வங்கிகள் என்ற நடைமுறை பல்வேறு எளிய வழிகளாகவும், கிராம அளவில் இருக்கும் மக்களுக்கு, குறைந்த வட்டி விகிதத்தில் கடன் பெற வசதியாகவும் காணப்பட்ட மேம்பட்ட அமைப்பாகும்.

இன்று, பி.எம்.சி., கூட்டுறவு வங்கி மஹாராஷ்டிரம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களை கலக்குகிற வங்கியாக நிற்கிறது. கூட்டுறவு வங்கிகள் விவசாயி களுக்கு கடன் தரும் அமைப்பு, நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள், பயிர்க்கடன் வழங்குவதில் சில உத்திகள் ஆகியவை எதற்காக என்றால், சமுதாயத்தில் பொதுத் துறை வங்கிகளை அணுகி, சுலபமாக பயன்படாதவர்களை காக்கும் முயற்சிகளாக கருதப்பட்டது.

அவை இன்றும் செயல்படும் வகையில் உள்ள மாநிலங்கள் பல உள்ளன. ஆனாலும், என்று பணமதிப்பு இழப்பு என்ற நடவடிக்கை மூலம் கரன்சி புழக்கத்தை சீராக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டதோ, அன்றில் இருந்து எல்லாரும், சேமிப்புக் கணக்கில் ஏதாவது ஒரு வங்கியில் சேர்க்கத் துவங்கினர்.அப்பணம், 1,000 ரூபாய்க்கு குறைவாக இருக்கலாம்; அதிகபட்சம், 1 லட்சம் ரூபாய் வரை இருக்கலாம். ஆனால், பொதுமக்களுக்கு, 1 லட்சம் ரூபாயை வெறும் சேமிப்பில் வைத்திருந்து, அதற்கான மாதாந்திர குறைந்த வட்டி பெறவும் விரும்பவில்லை.

அதே சமயம், பொதுத்துறை வங்கிகள், தங்கள் வாராக்கடன் சுமையாகும் விஷயத்தை மறைக்கும், கணக்கு வழக்கு உத்திகள் மாறும் காலத்தில் இருக்கும் போது, தனியார் துறை பெரிய வங்கிகள், தங்கள் செல்வாக்கை ஓரளவு அதிகரித்திருக்கின்றன. இதில் அஞ்சலக சேமிப்பு, அதன் அடிப்படையில் சில திட்டங்களும், மக்களுக்கு பணப்புழக்கத்தை கையாள வழிகாட்டி உள்ளன.அதனால், தனி நபரை நம்பி, தங்களின் சிறிய சேமிப்புகளை தருவது, அதில் ஏமாறுவது, இப்போது உடனடியாக வழக்குகளாகி விடுகின்றன. அதே சமயம் கடன் கொடுத்து ஏமாந்தவர்கள் அல்லது தவறான வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களில் ஏமாறுவோர், மோசடி சம்பந்தமாக வழக்குகள் தொடர்ந்த போதும், அது முடிவுற்று தீர்ப்பு வெளிவரும் காலத்திற்குள், அந்த அப்பாவிகள் கண்ணீர் விட்டு கதறுவது துயரமாகும்.

இப்போது வாராக்கடன் மட்டும் அல்ல, இம்மாதிரி வங்கிகள் மோசடி விவகாரத்தில், கணக்கு தணிக்கைத் துறைகள் புதிய உத்வேகத்துடன், ரிசர்வ் வங்கிக்கு உடனடி தகவல் தெரிவிக்கும் கட்டமைப்பு களை சிறுகச் சிறுக உருவாக்கி வருகின்றன. இன்று நேற்றல்ல, 10 ஆண்டுகளாக ரிசர்வ் வங்கி இந்த குளறுபடிகளை கையாள, அடுத்தடுத்த வழிகளை அதிகமாக்கி வருகிறது. ஆனால், 'குதிரை லாயத்தை விட்டு பறந்த பின், அந்த லாயத்தை பூட்டுவது போல சில முயற்சிகள்' இருந்திருக்கின்றன.இந்த பஞ்சாப், மஹாராஷ்டிரா கூட்டுறவு வங்கி விவகாரமும் அப்படியே. மஹாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மீது தனிப்பட்ட புகாரும் நீண்ட பட்டியலில் இருக்கிறது என்றதும், அவர் கோபப்படுகிறார்.

அதே சமயம் மஹாராஷ்டிரா, பஞ்சாப் போன்ற அதிகம் வளர்ந்த மாநிலங்களில், இந்த முறைகேடுகள் நடக்கின்றன என்றால், அங்குள்ள முன்னாள் அரசியல் பிரமுகர்கள், தங்கள் பெயர் தவறாகக் கூட வெளிவராமல் இருக்க வேண்டும் என்று விரும்புவது நியாயமே. அதே சமயம், கூட்டுறவு வங்கி டைரக்டர் அல்லது அதன் தலைவர் தன்னிச்சையாக முடிவு எடுத்து, 'வேண்டியவர்களுக்கு சலுகை' என்ற அணுகுமுறை நடைமுறையானதற்கு, யார் இன்று பொறுப்பேற்பர்?

நிர்வாக கோளாறுகளால், அவை ஊழலில் திளைத்திருப்பதை, இந்த பி.எம்.சி., வங்கி கோடிட்டு காட்டுகிறது.இல்லாவிட்டால், அந்த வங்கியின் ஆஸ்தி, 8,500 கோடி ரூபாய் என்ற கணக்கு கூறும் போது, அந்த நிறுவனம் வீடு கட்டும் பெரிய கட்டமைப்பு நிறுவனமாக எச்.டி.ஐ.எல்., பெற்ற கடன் அளவு, 6,500 கோடி ரூபாய். இந்த நிறுவனத்தின் சொத்துக்கள், 3,500 கோடி ரூபாய் முடக்கப்பட்டதும், அதன் தலைவர்கள் ராகேஷ்குமார், சரங்க் என்ற இருவர், பொருளாதார குற்றப்பிரிவு சட்டப்படி கைதாகி நிற்கின்றனர். மேலும், வங்கியின் முன்னாள் தலைவர் வர்யாம் சிங் என்பவர், மோசடியில் உதவியதின் அடையாளமாக, அவர் முதலீடு செய்த, 100 கோடி ரூபாய் முடக்கப்பட்டிருக்கிறது.

நல்ல வேளையாக இந்த வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள், தற்போது, 25 ஆயிரம் ரூபாய் வரை எடுத்துக்கொள்ள அனுமதி தரப்பட்டிருக்கிறது. அதை ரிசர்வ் வங்கி அனுமதிக்கும் முன், வங்கி யின் நிதி ஆதாரங்களைப் பரிசீலித்திருக்கிறது. ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திதாஸ் கருத்துப்படி, 'கூட்டுறவு வங்கிகள் முறைகேட்டைத் தடுக்க கடிவாளம் போட, சில நடைமுறைகள் வரும்' என்கிறார். ரிசர்வ் வங்கி மற்றும் மாநில அரசுகளின் செல்வாக்கு என்ற இரட்டை நடைமுறை, இனி சரிப்படுமா என்று சிந்திக்க வைத்திருக்கிறது இந்த மோசடி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X