பொது செய்தி

இந்தியா

யாதுமாகி நின்றாய் காளி; விஜயதசமி ஸ்பெசல்

Added : அக் 07, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
யாதுமாகி நின்றாய் காளி; விஜயதசமி ஸ்பெசல்


ஒரே சொல்லில் எல்லா மந்திரமும் அடக்கம்:

அனலன் என்னும் அசுரனை அழிக்க, காளி வடித்தில் அம்பிகை பூலோகம் வந்தாள். உக்கிரம் மிக்க அவளை சிவபெருமான் சாந்தப்படுத்தி மணந்து கொண்டார். மணக்கோலத்தில் அவள் அழகாக இருந்ததால், 'அபிராமா அம்பிகை' எனப் பெயர் பெற்றாள். 'அபிராமம்' என்பதற்கு 'அழகு' என்பது பொருள். அவளே திண்டுக்கல்லில் அபிராமியாக அருள்கிறாள். இங்கு சிவன் சன்னிதி இருந்தாலும், அம்பிகைக்கே முக்கியத்துவம். கோவிலும் 'அபிராமி அம்மன் கோவில்' என அழைக்கப்படுகிறது. 'அபிராமா அம்பிகை' என்பதே காலப்போக்கில் அபிராமி என மருவியது. 'அபிராமா' என ஒரு முறை சொன்னாலே அம்பிகைக்குரிய எல்லா மந்திரத்தையும் சொன்ன பலன் கிடைக்கும். இக்கோவில் துாணில் பாலதுர்கை காட்சி தருகிறாள்.


மலையில் ஒரு மகாராணி:

மேருமலையில் பிரம்மலோகம், விஷ்ணு லோகம், சிவலோகம் என மும்மூர்த்திக்கும் உலகங்கள் உள்ளன. இதுபோல அம்பிகைக்கு இந்த மலையின் ஒரு சிகரத்தில் தனி உலகம் இருக்கிறது. இதற்கு 'ஸ்ரீபுரம்' என பெயர். தேவர்களுக்கு இடையூறு செய்த பண்டாசுரனை வதம் செய்த அம்பிகை, இங்கு லலிதாம்பிகாவாக வீற்றிருந்து அருள்கிறாள். ஸ்ரீபுரத்தின் நடுவில் தேவலோக தச்சரான விஸ்வகர்மா மூலம் அமைக்கப்பட்ட 'சிந்தாமணி கிருகம்' என்னும் அரண்மனை உள்ளது. இங்கு தேவர்கள் அம்பிகையை தினமும் 'ஜகன்மாதாவான இவளே நம் மகாராணி ராஜராஜேஸ்வரி' என வழிபாடு செய்கின்றனர்.


யாதுமாகி நின்றாய் தேவி:

தேவி ஆதிபராசக்தி பூவுலகம் முழுவதும் ஆட்சி செய்கிறாள். 'யாதுமாகி நின்றாய் காளி' என தேவியே இந்த உலகமாக இருக்கிறாள் என்கிறார் பாரதியார். புல், பூண்டு, புழு, மரம், பசு, புலி, மனிதர் என எல்லா உயிர்களுமாக இருப்பவள் அவளே. அனைத்து உயிர்களிலும், பொருள்களிலும் அவளைக் காண வேண்டும் என்பதே கொலு வைப்பதன் நோக்கம். கொலுவிற்கு 'சிவை ஜோடிப்பு' என்றும் பெயருண்டு. 'சிவை' என்றால் 'சக்தி'. சக்தியின் வடிவே பொம்மை அலங்காரமாகச் செய்யப்படுகிறது. கொலு வைத்தால் மட்டும் போதாது. எல்லா உயிர்களையும் தன்னுயிர் போலக் கருதும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.


தாய் வீட்டுக்கு வரும் 'தாய்'

காளி என்றாலே நினைவுக்கு வருவது கோல்கட்டா தான். நவராத்திரி பண்டிகையை இங்கு 'துர்காபூஜை' 'காளிபூஜை' என்னும் பெயரில் சிறப்பாக கொண்டாடுகின்றனர். இந்த பண்டிகை நாளில், வீடுகளிலும் துர்காதேவியின் மண் சிலைகளை வைத்து வழிபடுவர். துர்காதேவியை கோல்கட்டா மக்கள் தங்கள் மகளாகக் கருதுகின்றனர். நவராத்திரியின் போது, புகுந்த வீடான இமயமலையில் இருந்து, தாய் வீடான மேற்கு வங்கத்திற்கு அம்பிகை வருவதாக ஐதீகம். இந்த நாட்களில் காலை, நண்பகல், இரவு நேரத்தில் பழம், இனிப்பு வகை படைத்து துர்கையை வழிபடுவர். நண்பகல் பிரசாதத்தில் 'கிச்சடி' என்னும் பொங்கல் இடம் பெற்றிருக்கும். பூஜையின் கடைசி நாள் பிறந்த வீட்டு சீதனத்துடன், வெற்றிலை, பாக்கு கொடுத்து துர்கையை வழியனுப்புவர். அதன்பின், நீர்நிலைகளில் சிலைகளைக் கரைத்து விடுவர். அடுத்த ஆண்டு நவராத்திரிக்கு தேவி மீண்டும் தங்கள் வீட்டு பூஜைக்கு வர வேண்டும் என வேண்டுவர்.


ஒன்பது நாள் ஏன்?

நவராத்திரியை ஒன்பது நாட்கள் கொண்டாடுவதற்கான காரணத்தை புராணங்கள் சொல்கின்றன. மது, கைடபர், சண்டன், முண்டன் மற்றும் மகிஷாசுரன் போன்ற அரக்கர்களை அழிப்பதற்காக ஒன்பது நாட்கள் விரதமிருந்து அன்னை பராசக்தியை தேவர்கள் துதித்தனர். ராவணனை வதம் செய்யக் கிளம்பிய ராமர் வெற்றிக்காக, தேவியை வழிபட்டார். இதனால் ஒன்பது நாட்களிலும் தேவியை ஒன்பது வடிவங்களில் வணங்குகிறோம்.


லலிதா சகஸ்ர நாமம் பிறந்த கதை:

அகத்திய முனிவர் விஷ்ணுவை நோக்கி தவம் புரிந்தார். குதிரை முகம் கொண்ட ஹயக்ரீவராக, விஷ்ணு அகத்தியர் முன் எழுந்தருளினார். அவரிடம் அகத்தியர், பாவத்தில் இருந்து மக்கள் விடுபட வழி கேட்டார். அதற்கு ஹயக்ரீவர், “ஜகன்மாதாவான பராசக்தியின் அருட்கோலமான லலிதாம்பிகையை வழிபட்டால் துன்பம் தீரும்” என்று சொல்லி அம்பிகையின் ஆயிரம் திருநாமங்களை (பெயர்கள்) உபதேசித்தார். அதுவே 'லலிதா சகஸ்ர நாமம்' என பெயர் பெற்றது.


பெரியவர்கள் தரும் தங்க இலை:

மகாராஷ்டிராவில் வன்னிமரத்தை விஜயதசமியன்று வழிபடுவதோடு, அதன் இலைகளையும் பறிப்பர். இளைஞர்கள் வன்னி இலைகளைப் பெரியவர்களின் காலடியில் வைத்து ஆசி பெறுகின்றனர். ஆண்டு முழுவதும் செல்வ வளம் பெறவேண்டும் என்ற அடிப்படையில் அந்த இலைகளைக் கொடுத்து 'இதை தங்கமாக நினைத்து பெற்றுக்கொள்ளுங்கள்' என சொல்லி பெரியவர்கள் ஆசீர்வதிப்பர். மகாராஷ்டிரா கோவில்களில் வன்னிமரத்தடியில் அம்பிகையை வைத்து நவராத்திரி பூஜை நடத்துவர்.


கும்பத்தில் அம்பிகை:

நவராத்திரி வழிபாட்டில் கொலுமேடையில் அம்பிகையை எழுந்தருளச் செய்ய வேண்டும். இதற்காக நுால் சுற்றிய கும்பத்தில் (குடம்) பச்சரிசி, மஞ்சள் கிழங்கு, குங்குமம், ஒரு ரூபாய் காசு, வெற்றிலை, பாக்கு, எலுமிச்சை ஆகியவற்றை வைக்க வேண்டும். குடுமியுடன் கூடிய மஞ்சள் தடவிய தேங்காயில் சந்தனம், குங்குமம் வைத்து, மாலை சூட்டி அதன் மீது வைத்து சுற்றிலும் மாவிலைகளை அடுக்க வேண்டும். கொலுமேடை முன்பு மேஜையிட்டு அதில் கும்பத்தை வைக்க வேண்டும். அதை அம்பாளாக நினைத்து, தினமும் காலை, மாலையில் பூஜை செய்ய வேண்டும்.


தஸ்ராத் தெரியுமா:

மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் தசரா விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அரசு சார்பில் இங்கு பிரமாண்ட ஊர்வலம் நடக்கும். மன்னர்கள் போருக்கு செல்வதற்கு முன், மைசூரு சாமுண்டீஸ்வரியை ஒன்பது இரவு சென்று வணங்குவது வழக்கம். பத்தாவது நாளில் போருக்கு செல்வர். தேவியருளால் வெற்றி வாகை சூடுவர். மைசூருவில் தசரா விழாவை 'தஸ் ராத்' என்பர். இதற்கு 'பத்து இரவுகள்' என பொருள். இது திரிந்து 'தசரா' எனப்படுகிறது.


அங்கச்சி... அட...அது யாரு?

மதுரையில் திருமலை நாயக்கரிடம் மந்திரியாக இருந்தவர் 'ஐயா தீட்சிதர்' என்னும் நீலகண்ட தீட்சிதர். இவர் பாடிய 'சிவ லீலார்ணவம்' என்னும் பாடலில் மீனாட்சியின் சிறப்பை கூறியுள்ளார். “உலகம் அழியும் காலத்தில் தோன்றும் வெள்ளத்தில் சிக்கிய வேதங்களை மீட்க விஷ்ணு மச்சமாக (மீனாக) அவதரித்தார். ஆனால், மீன் போன்ற அழகிய கண்களைப் பெற்ற அங்கயற்கண்ணியின் திருவடிகளைத் தான் அந்த வேதமே தேடிக் கொண்டிருக்கிறது,” என போற்றுகிறார். மீனாட்சி மீது இவர் பாடிய 'ஆனந்த சாகர ஸ்தவம்' என்னும் ஸ்தோத்திரமும் புகழ் மிக்கது. பார்வை இழந்த இவர், இதைப் பாடி மீனாட்சி அருளால் கண்ணொளி பெற்றார். மீனாட்சி என்பதை தமிழில் 'அங்கயற்கண்ணி' என்று குறிப்பிடுவர். இதற்கு 'அழகிய மீன் போன்ற கண்களைக் கொண்டவள்' என பொருள். மதுரையில் பிறந்த பெண் குழந்தைகளை மீனாட்சியின் அம்சமாக 'அங்கச்சி' என அழைப்பது வழக்கம். அங்கயற்கண்ணி என்பதை சுருக்கியே 'அங்கச்சி' என்கின்றனர்.


ஒன்பது நாளுக்கு மூன்று தேவி:

நவராத்திரியின் ஒன்பது நாட்களை மூன்றாகப் பிரித்து முதல் மூன்று நாள் துர்கையையும், அடுத்த மூன்று நாள் லட்சுமியையும், கடைசி மூன்று நாள் சரஸ்வதியையும், விஜயதசமியன்று ஆதிபராசக்தியையும் பூஜை செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வடிவத்தில் அலங்கரித்து வழிபடுவது இன்னும் சிறப்பு. மகேஸ்வரி, கவுமாரி, வராகி, மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி, மகாசரஸ்வதி, நாரசிம்ஹி, சாமுண்டி ஆகிய வடிவங்களில் அம்பிகையை அலங்கரித்து வழிபட வேண்டும். ஒன்பது நாளும் வழிபட முடியாதவர்கள் அஷ்டமி, நவமி, தசமி ஆகிய திதிகளில் வழிபட்டால் நவராத்திரி விரத பலனை எளிதில் பெறலாம்.


நலம் தரும் நவராத்திரி பாட்டு:

மங்கள ரூபிணி மதியொளி சூலினி மன்மத பாணியளே
சங்கடம் நீங்கிட சடுதியில் வந்திடும் சங்கரி சவுந்தரியே
கங்கண பாணியன் கனிமுகம் கண்டநல் கற்பகக் காமினியே
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்கநிவாரணி காமாட்சி

கான் உறுமலர் எனக் கதிர் ஒளி காட்டிக் காத்திட வந்திடுவாள்
தான்உறு தவஒளி தார்ஒளிமதி ஒளி தாங்கியே வீசிடுவாள்
மான்உறு விழியாள் மாதவர் மொழியாள் மாலைகள் சூடிடுவாள்
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி


வெற்றி அருள்வாய் விஜயதுர்கையே...!

மகிஷாசுரனை அம்பிகை வென்றநாள் விஜயதசமி. இன்று அம்மனின் முன் அமர்ந்து இந்த வழிபாட்டைப் படித்தால் நினைத்தது நிறைவேறும்.
* உலகாளும் நாயகியே!
ஆனைமுகத்தானின் அன்னையே!
வேதம் போற்றும் வித்தகியே!
ஞானச்சுடர்க்கொடியே!
மரகதமயிலே! குளிர்ந்த நிலவாக
பிரகாசிப்பவளே! கருணை
மழையைப் பொழிபவளே!
ஈசனின் திருக்கரம் பிடித்தவளே!
வெற்றித் திருநாளான விஜயதசமி
நன்னாளான இன்று எங்களின்
முயற்சிகளில் வெற்றியைத்
தந்தருள வேண்டும்.

* மங்களம் நிறைந்தவளே!
கற்பகம் போல் வாரி
வழங்கும் ஈஸ்வரியே!
பர்வத ராஜனின் மகளே!
அபிராம வல்லியே!
ஆனந்தம் அளிப்பவளே!
ஆதிபராசக்தியே! அங்கயற்கண்ணியே!
திருமாலின் சகோதரியே!
மலர் அம்பும், கரும்பு வில்லும் தாங்கியவளே!
ஈசனின் இடப்பாகத்தில் உறைபவளே!
எங்களின் குடும்பத்தில்
சுபிட்சத்தை அளித்தருள வேண்டும்.

* நாராயணியே! சாம்பவியே!
சங்கரியே! சியாமளையே!
மாலினியே! திரிசூலம் ஏந்திய
சூலினியே! புவனேஸ்வரியே!
மதங்க முனிவரின் மகளே!
பிரபஞ்சத்தைப் படைத்துக் காப்பவளே!
வேதம் போற்றும் வித்தகியே!
வீரத்தின் இருப்பிடமே!
எங்களின் மீது உன்
கடைக்கண்களை காட்டியருள்வாயாக.

* மதுரையில் வாழும் மீனாட்சியே!
காஞ்சியை ஆளும் காமாட்சியே!
காசியில் உறையும் விசாலாட்சியே!
மலையரசனின் புத்திரியே!
மகிஷாசுரனை வதம் செய்து
தர்மத்தை நிலைநாட்டியவளே!
திக்கற்றவருக்கு துணையாக வருபவளே!
வெற்றியருளும் விஜய துர்கையே!
உலக உயிர்கள் எல்லாம்

நலமோடு வாழ அருள்புரிய வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baskaran - Thanjavur,இந்தியா
08-அக்-201907:10:33 IST Report Abuse
Baskaran அருமையான கட்டுரை. வாசகர்களுக்கு தினமலரின் மதிப்பு மிக்க பரிசு. மகிழ்ச்சி. ச.பாஸ்கரன், தஞ்சை
Rate this:
Cancel
Krish - Chennai ,இந்தியா
08-அக்-201906:11:38 IST Report Abuse
Krish துர்கையின் கருணை எல்லோருக்கும் வேண்டும். அன்பாக இருப்போம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X