குறுக்கு வழியில் அரசு வேலை... கொடுக்கிறாங்க விலை!

Added : அக் 08, 2019
Advertisement
 குறுக்கு வழியில் அரசு வேலை... கொடுக்கிறாங்க விலை!

சரஸ்வதி பூஜை கொண்டாட்டத்துக்கு தேவையான பொருட்கள் வாங்க கோவை, பூ மார்க்கெட்டுக்கு சித்ராவும், மித்ராவும் சென்றிருந்தனர். மார்க்கெட் வளாகத்தில் கூட்ட நெரிசலால் இருவரும் திக்குமுக்காடினர்.செவ்வந்திப்பூ வாங்கிய மித்ரா, ''என்னக்கா, பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தக் கூடாதுன்னு, கார்ப்பரேஷன் சொல்லிக்கிட்டு இருக்கு. இங்க, சர்வ சாதாரணமா 'யூஸ்' பண்றாங்களே,'' என, நோண்டினாள்.''ஆமாப்பா, கடுமையா நடவடிக்கை எடுக்காத வரைக்கும் பிளாஸ்டிக் பிரச்னை தீரவே தீராது. ரெண்டு நாளைக்கு முன்னாடி, மேட்டுப்பாளையம் ரோட்டுல இருக்கிற, அண்ணா தினசரி மார்க்கெட்டுக்கு போயிருந்தேன். அங்க ஒரு கடையில, பாக்கெட் பாக்கெட்டா, பிளாஸ்டிக் கவர் வித்துட்டு இருந்தாங்க.''மாமூல் வாங்கிட்டு, கார்ப்பரேஷன் அதிகாரிங்க, கண்டுக்காம இருக்காங்க. அவுங்களை, 'கரப்ஷன்' அதிகாரிங்கன்னு சொல்லறதுல, தப்பேயில்லை,''''கார்ப்பரேஷன் ஆபீசுல புதுசா ஆள் எடுக்குறாங்களாமே...'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள் மித்ரா.''அதுவா, கருணை அடிப்படையில், துப்புரவு தொழிலாளர்கள் வாரிசுகளுக்கு வேலை கொடுக்குறாங்க. வழக்கமா, துப்புரவு தொழிலாளி வேலையே கொடுப்பாங்க. இந்த முறை, படிச்ச படிப்புக்கேத்த மாதிரி கொடுக்கப் போறாங்களாம்,''''கலெக்டர் ஆபீசுக்கும் ஆள் எடுக்குறதா கேள்விப்பட்டேனே...''''அலுவலக உதவியாளர் வேலைக்கு அவசரம் அவசரமா ஆள் எடுக்குறாங்களாம்; 15 பேரு எடுக்குறதுக்கு முடிவு செஞ்சு, எல்லா ஏற்பாடுகளும் செஞ்சிட்டாங்களாம்.''உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியாகுறதுக்கு முன்னாடியே, 'அப்பாயின்மென்ட் ஆர்டர்' கொடுத்திருவாங்களாம். வழக்கமா, வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமா நியமிப்பாங்க. இப்ப, கட்சிக்காரங்க பரிந்துரைக்கிறவங்கள, நியமிக்கப் போறாங்களாம்.''ஒருத்தருக்கு, 2 'ல'கரம் பேரம் பேசியிருக்காங்க. அட்வான்சா, ஒரு 'ல'கரம் கொடுக்கணுமாம்; 'அப்பாயின்மென்ட்' ஆர்டர் வந்ததும், மீதித்தொகை கொடுக்கணும்னு பேசியிருக்காங்களாம்,''மார்க்கெட்டில் இருந்து, திக்குமுக்காடி வெளியே வந்த இருவரும், பேக்கரிக்குள் நுழைந்து, வெஜ் பப்ஸ், காபி ஆர்டர் கொடுத்தனர்.மித்ரா, மொபைல் போனுக்கு அழைப்பு வந்தது. வெஜ் பப்ஸ் சுவைத்த படியே பேசி விட்டு, ''அரசு அலுவலகத்துல, வேலை செய்யாம, 'ஓபி' அடிச்சவங்கள, வேலையை விட்டே துரத்திட்டாங்களாம்,'' என்றாள் மித்ரா.''என்னப்பா சொல்ற, அரசாங்க அலுவலகத்துல, அப்படி செய்ற அளவுக்கு துணிச்சலான அதிகாரிங்க இருக்காங்களா,'' என, ஆச்சரியப்பட்டாள் சித்ரா.''ஆமாக்கா, கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை அலுவலரா சுந்தர்ன்னு, ஒருத்தரு வந்திருக்காரு. இவரு, திடீர் திடீருன்னு காப்பகங்களை ஆய்வு செய்றாரு. 10 வருஷம் அனுபவம் வாய்ந்த, தற்காலிக ஊழியர்கள் ரெண்டு பேரு, முந்தைய அலுவலர்களிடம் இணைக்கமா இருந்து, வேலையை ஒழுக்கமா செய்யாம இருந்ததை கண்டுபிடிச்சிட்டாரு.''துறை ரீதியா பணிகள் தேக்கமாகி இருந்ததால, 'வேலைக்கு லாயக்கற்றவர்கள்' என கூறி, பணி நீக்கம் செஞ்சிட்டாராம். அதனால, 'ஓபி' அடிக்கறவங்க, கலக்கத்துல இருக்காங்க,''''அடடே... இதே மாதிரி, எல்லா துறையிலும் செஞ்சாங்கன்னா, நல்லா வேலை பார்க்குறவங்களுக்கும் மரியாதை கிடைக்கும்,'' என்றாள் சித்ரா.காபியை உறிஞ்சிய மித்ரா, ''கார்ப்பரேஷன் அதிகாரிகளுக்கு செம டோஸ் விழுந்துச்சாமே,'' என, கிளறினாள்.''ஆமாப்பா, அரசாங்க உத்தரவு எதையுமே, 'டவுன் பிளானிங்' செக்சன்காரங்க அமல்படுத்துறதில்லை. கார்ப்பரேஷன்ல பொறியாளர் சங்கத்துக்காரங்க பலமுறை மனு கொடுத்தாங்க. நடவடிக்கை எடுக்காததால, மினிஸ்ட்டருக்கு கடிதம் அனுப்புனாங்க.''அதுல, கட்டட வரைபட அனுமதி வாங்கறதை எளிமைபடுத்தி, தமிழக அரசு போட்ட உத்தரவு, தேதியை குறிப்பிட்டு, விளக்கமா சொல்லியிருக்காங்க. அதுக்கப்புறம்தான், நம்மூர்ல மட்டும் நடவடிக்கை வராத விஷயம், மினிஸ்டருக்கு தெரிஞ்சிருக்கு. 'டவுன் பிளானிங்' ஆபீசர்களை ஒரு பிடிபிடிச்சிட்டாராம். இனி, மக்களுக்கு நல்லது நடக்கும்னு எதிர்பார்க்குறாங்க,''''அதே மாதிரி, ஹைவேஸ் அதிகாரிங்களுக்கும், 'குட்டு' விழுந்தாதான் வேலைபார்ப்பாங்க, போலிருக்கு. உக்கடத்துல போக்குவரத்து நெரிசல் அதிகமாகிட்டு இருக்கு. மேம்பால வேலை ஆமை வேகத்துல நடக்குது,'' என, நொந்து கொண்டாள் மித்ரா.''அதெல்லாம் சரி, ரேஸ்கோர்ஸ்ல இருக்கற வீட்டு வசதி குடியிருப்புல வசித்த ஒரு அதிகாரி, ரூ.5.5 லட்சம் வாடகை கட்டுனராமே,'' என, ரூட்டை மாற்றினாள் சித்ரா.''ஆமாக்கா, சப்-கலெக்டர் அந்தஸ்துல இருக்கிற பெண் அதிகாரி, நம்மூர்ல இருந்து, சேலத்துக்கு 'டிரான்ஸ்பர்' ஆகிட்டாங்க. அங்கேயும், வீடு ஒதுக்கீடு வாங்கியிருக்காங்க. அப்ப, கோயமுத்துார் வீட்டை திருப்பி ஒப்படைச்சிருக்கணும்.''அப்படி செய்யாம, ஒவ்வொரு வாரமும் 'லீவு'க்கு வந்துட்டு போவாங்களாம். ஒரு அதிகாரிக்கு, ரெண்டு இடத்துல வீடு ஒதுக்கியிருக்கிறதை, வீட்டு வசதி வாரிய அதிகாரிங்க கண்டுபிடிச்சாங்க. மூன்று மடங்கு வாடகை நிர்ணயிச்சு, நோட்டீஸ் கொடுத்திருக்காங்க. வேற வழியில்லாம, ரூ.5.5 லட்சம் வாடகை செலுத்தியிருக்காங்க,''பேக்கரியை விட்டு வெளியே வந்த இருவரும், ஸ்கூட்டரில், புறப்பட்டனர். கல்வித்துறை ஜீப், அவர்களை கடந்து சென்றது.அதைப்பார்த்த சித்ரா, ''மித்து, பாரதியார் பல்கலைக்கு துணைவேந்தர் நியமிக்கப் போறாங்களாம். நம்மூரை சேர்ந்தவரை தேர்ந்தெடுக்கறதுக்கு வாய்ப்பு அதிகம் இருக்கும்னு சொல்றாங்க,''''ஆமாக்கா, நானும் கேள்விப்பட்டேன். சங்கத்துக்காரங்க, ரெண்டு 'குரூப்'பா செயல்பட்டுட்டு இருக்காங்க. தேடல் குழுவை கலைக்கணும்னு ஒரு குரூப், கலைக்கக்கூடாதுன்னு ஒரு குரூப், மாத்தி மாத்தி, கவர்னர் அலுவலகத்துக்கு 'பெட்டிசன்' அனுப்பிட்டு இருக்கு. கல்வித்துறையிலும் அரசியல் புகுந்து விளையாடுறதால, கல்வியாளர்கள் அதிருப்தியில இருக்காங்க. கல்வித்துறைக்கு நல்லது செய்யக்கூடியவரை தேர்வு செய்யணும்னு விரும்புறாங்க,''அவிநாசி ரோடு, மேம்பாலத்தை கடந்து, ரயில்வே ஸ்டேஷன் வழியா, திருச்சி ரோட்டில், ஸ்கூட்டரை இயக்கிய சித்ரா, ''துப்புரவு தொழிலாளர்களுக்கு சம்பளமே கொடுக்கலையாமே...'' என, சப்ஜெக்டை மாற்றினாள்.''ஆமாக்கா, கவர்மென்ட் ஆஸ்பிடல்ல வேலை பார்க்குற ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களுக்கு சில மாதங்களா சம்பளம் கொடுக்கலை. சில ஊழியர்கள், மெட்ராஸ் ஆபீசுக்கு பேசியிருக்காங்க. அவுங்களோ, சம்பளம் ஒதுக்கி ரொம்ப நாளாச்சுன்னு சொல்லிட்டாங்களாம். ஆஸ்பத்திரியில விசாரிச்சா, 'வந்துரும்'ன்னு ஒத்த வார்த்தையில பதில் சொல்றாங்களாம். பண்டிகை வர்ற நேரத்துல, சம்பளம் கூட ஒழுங்கா தர மாட்டேங்கிறாங்களேன்னு, தொழிலாளர்கள் புலம்பிக்கிட்டு இருக்காங்க,''''அச்சச்சோ, ரொம்ப பாவம்ப்பா, ஆஸ்பத்திரியை சுத்தமா பராமரிக்கறவங்களுக்கு ஒழுங்கா சம்பளம் கொடுக்கலைன்னா, எப்படி,'' என்ற சித்ரா, ''டாக்டர் பணியிடத்தை குறைச்சிட்டதாவும், கேள்விப்பட்டேனே, உண்மையா,'' என, நோண்டினாள்.''ஆமா, உண்மைதான். இந்திய மருத்துவ கவுன்சில் விதிப்படி, டாக்டர் பணியிடம் இருக்கணும்; டாக்டர்கள் கூடுதலா இருந்தா, மற்ற மருத்துவ கல்லுாரிகளுக்கு மாறுதல் செய்ய உத்தரவு வந்திருக்கு; நம்மூர்ல, 60 டாக்டர் பணியிடத்தை குறைச்சு, வெளியூர்களுக்கு மாத்திட்டாங்க.''இது, ஆஸ்பத்திரி வட்டாரத்துல புகைச்சலை ஏற்படுத்தியிருக்கு. நாளுக்கு நாள் சிகிச்சைக்கு வர்ற நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாகிட்டு இருக்கறதுனால, மருத்துவமனை நிர்வாகம் மீது, டாக்டர்கள் அதிருப்தியில இருக்காங்க,'' என்றாள் மித்ரா.வீட்டுக்கு முன், ஸ்கூட்டரை நிறுத்திய சித்ரா, ''பா.ஜ., மாநில தலைவர் பதவியை கைப்பத்துறதுக்கு, கொங்கு மண்டலத்தை சேர்ந்தவங்க, முட்டி மோதிக்கிட்டு இருக்காங்களாமே...''''ஆமாக்கா, மத்திய அமைச்சர் மூலமா, ஒருத்தரு, 'மூவ்' செஞ்சிட்டு இருக்காராம். இன்னொருத்தரு, டில்லி 'லாபி'யில் ஈடுபடுறாரு. ஆனா, கொங்கு மண்டலத்தை சேர்ந்தவங்களுக்கு பதவி கெடையாதுன்னு சொல்லிட்டாங்களாம். இருந்தாலும், முயற்சியை கைவிடாம இருக்காங்க,''''அ.ம.மு.க., கட்சியில போட்டிக்கூட்டம் நடத்துனாங்களே... அதைப்பத்தி ஏதும் சொல்லலையே...''''அந்தக்கட்சி அவ்ளோதான். நம்மூரை சேர்ந்தவங்க, ஆளுங்கட்சிக்கு தாவப்போறாங்க. உள்ளாட்சி தேர்தல் நடத்துறதுக்கு முன்னாடி, இணைப்பு விழா நடக்கலாம்னு சொல்றாங்க,'' என்றபடி, 'டிவி'யை 'ஆன்' செய்தாள் மித்ரா.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X