புதுடில்லி: உத்தர பிரதேச காங்கிரசை சேர்ந்த தலைவர்கள், பல்வேறு கட்சிகளில் இணைந்து வருவதை கண்டு, கட்சி மேலிடம் அதிர்ச்சி அடைந்துள்ளது. இதையடுத்து, மாநிலத்தில் கட்சியை பலப்படுத்தும் நோக்கில், அங்கேயே தங்கி இருந்து கட்சிப் பணிகளை கவனிக்க, காங்., பொது செயலர் பிரியங்கா வீடு பார்க்க துவங்கி உள்ளார்.
உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தின் காங்., பொறுப்பாளராக, அக்கட்சியின் பொது செயலர் பிரியங்கா பதவி வகித்து
வருகிறார்.

ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு ஆதரவாக, உ.பி., ரேபரேலி தொகுதியை சேர்ந்த காங்., எம்.எல்.ஏ., அதிதி சிங், சமீபத்தில் கருத்து தெரிவித்தார். மேலும், பா.ஜ., அரசு, சமீபத்தில் நடத்திய, சிறப்பு சட்டசபை கூட்டத்தில், அதிதி பங்கேற்றார். இதனால், காங்., தலைமை, அதிருப்தி அடைந்தது.
மேலும், காங்.,கை சேர்ந்த பல தலைவர்கள், சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தனர். இப்படி, காங்., தலைவர்கள், தொடர்ந்து கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதைக் கண்டு, பிரியங்கா அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து, 'கட்சி விரோத போக்கில் ஈடுபடுபவர்கள் மீது, கடும் நடவடிக்கை பாயும்' என, எச்சரிக்கை விடுத்தார். உ.பி.,யில், 2022ல் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்குள், கட்சியை பலப்படுத்த முடிவு செய்துள்ளார். இதற்காக, புதிய நபர்களை, கட்சி பொறுப்புகளில் நியமிக்க, பிரியங்கா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், உ.பி.,யிலேயே தங்கி இருந்து, கட்சிப் பணிகளை கவனிக்க, அவர் முடிவு செய்துள்ளார். இதற்காக, பிரியங்காவுக்கு லக்னோவில், வீடு பார்க்கும் பணி நடந்து வருகிறது.
லக்னோவின் கோகலே மார்க் என்ற இடத்தில், இந்திராவின் தாயார் வழி உறவினர், ஷீலா கவுல் என்பவரது பங்களா உள்ளது. அங்கு, பிரியங்கா குடியேற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.