சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

சீன அதிபர் ஜின்பிங் மாமல்லபுரம் வருகை: உலகமே பேசுது பழந்தமிழர் பெருமையை!

Updated : அக் 09, 2019 | Added : அக் 09, 2019 | கருத்துகள் (4)
Share
Advertisement
சீன அதிபர் ஜின்பிங் மாமல்லபுரம் வருகை: உலகமே பேசுது பழந்தமிழர் பெருமையை!

'திங்க உனக்கு சீனி மிட்டாய் வாங்கித் தரட்டுமா...சிலுக்கு சட்டை சீனா பொம்மை பலுான் வேணுமா...?'
அழும் குழந்தையை சமாதானப்படுத்த பாடும், பழைய பாடலின் வரிகள் இவை. தமிழகத்துக்கும் சீனாவுக்குமான பழந்தமிழ் உறவை எளிமையாக பாடும் வரிகளாகவும், இது உள்ளது.சீன அதிபர் ஜி ஜின்பிங், தமிழகத்தின் மாமல்லபுரத்தில், பிரதமர் மோடியை சந்திப்பது, உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மக்கள் தொகையில் பெருத்த, இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு என்பதை விட, கலாச்சாரத்தில் மூத்த நாட்டு தலைவர்களின் சந்திப்பு என்பதே, உலகம் உற்றுப் பார்க்க காரணம்.


சீன துறவிகள்

சீன அதிபர், மாமல்லபுரத்தை தேர்ந்தெடுத்ததற்கு, சீனாவின் கலாசார, மத, பண்பாட்டு வர்த்தக ரீதியான வளர்ச்சியில், தமிழகம் ஆற்றிய பங்களிப்பு தான் காரணம் என, சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பால், பழந்தமிழரின் பெருமைகள், உலகம் முழுக்க பேசப்படுகின்றன.அதை, கழுகுப் பார்வையில் பார்க்கிறது, இந்த கட்டுரை.புத்த மதம், தமிழகத்தில் தழைத்தது, பல்லவர் காலத்தில் தான். பல்லவர்களின் தலைநகரான காஞ்சி புரத்திற்கு, சீனத் துறவிகளான யுவான் சுவாங் உள்ளிட்டோர் வந்து, தங்கி, புத்த பள்ளிகளை ஆய்வு செய்தனர். அவர்களுக்கு முன்பே, சீனாவுக்கும் தமிழகத்துக்கும் நெருக்கம் இருந்ததை, இரு நாடுகளிலும் கிடைக்கும், அகழாய்வு பொருட்கள் மெய்ப்பிக்கின்றன.சீன நாகரிகத்தின் வயது, 6,000 ஆண்டுகளுக்கு முந்தையது. அங்கிருந்து, கி.மு., 3, 4ம் நுாற்றாண்டுகளில், நாம், பட்டு இறக்குமதி செய்ததாக, அர்த்தசாஸ்திரம் கூறுகிறது. இலக்கியங்களும், கல்வெட்டுகளும், இதை உறுதிப்படுத்துகின்றன. தமிழகத்துக்கும் சீனாவுக்குமான உறவுக்கு ஆதாரமாக, கி.மு., 2ம் நுாற்றாண்டை சேர்ந்த தொல்பொருட்கள், இரு நாடுகளிலும் கிடைத்து உள்ளன. வூ டி என்ற சீன அரசர் காலத்தில், காஞ்சிபுரத்துடன் வணிகத் தொடர்பு இருந்ததை, 'சியன் ஹன்சு' என்ற நுால் தெரிவிக்கிறது.கி.பி., முதலாம் நுாற்றாண்டில், சீன அரசர் பிங் டி, காஞ்சிபுரத்தில் இருந்து, காண்டாமிருகத்தை கேட்டு பெற்றது.கி.பி., 520ல், காஞ்சிபுரத்தை சேர்ந்த புத்த துறவி போதி தர்மர், சீனாவின் தென் பகுதியில் உள்ள, கான்டனுக்கு சென்று, தியான வழியில் புத்த மதத்தையும், மருத்துவம் உள்ளிட்ட அறிவியலையும் போதித்தது உள்ளிட்டவற்றுக்கான ஆதாரங்கள் நிறைய உள்ளன.


latest tamil newsநன்றியுடன் பதிவு

அதைத் தொடர்ந்து, 7ம் நுாற்றாண்டில், புத்த மதத்தை கற்றும், பரப்பியும் சென்ற, சீனாவின் புத்த துறவி, யுவான் சுவாங், தன் குறிப்பில், காஞ்சிபுரத்தில், அசோகர் கட்டிய, ஸ்துாபிகள் இருந்ததை பதிவிட்டு உள்ளார். அதுமட்டுமல்ல, காஞ்சிபுரத்தில் தங்கும் சீன வணிகர்களுக்காக, பல்லவர்களால், புத்த விஹார்கள் கட்டப்பட்டதை, கியோ தங் சு என்ற சீன நுால் பெருமையுடன் விவரிக்கிறது. தங்களுக்கு, மரியைாதையும், அன்பையும் வாரி வழங்கிய தமிழர்களை, சீனர் நுால்கள் நன்றியுடன் பதிவு செய்துள்ளன.பல்லவர்களைத் தொடர்ந்து, சோழர்களும், சீனாவுடன் நல்லுறவில் மிளிர்ந்தனர். முதலாம் ராஜராஜன், 1015ல், 52 பேர் கொண்ட துாதுக் குழு வாயிலாக, மிக உயர்ந்த பரிசுகளை, சீன அரசருக்கு அனுப்பி, சீனா - தமிழக வர்த்தக உறவை மேம்படுத்தினார். அதைத் தொடர்ந்து, சீனாவுக்கு, நிறைய தமிழக வணிக குழுக்கள் சென்றன. சீனத் தமிழர்களின் வழிபாட்டுக்காக, தென்சீனாவில், குவன் சு என்ற நகரில், கோவில் கட்டியுள்ளனர். அதற்கு காரணமான அரசர் செகசை கான் பெயரால், அந்த கோவிலுக்கு, திருக்கானீச்சுரம் என, தமிழர்கள் பெயர் சூட்டி நெகிழ்ந்தனர்.


கோவில்கள்

இதேபோல், சீனாவின் பல இடங்களில், தமிழர்களின் கட்டட கலையுடன் சிற்பங்களும், கோவில்களும், இன்றும் உள்ளன; அகழாய்விலும் கிடைக்கின்றன. மேலும், 13ம் நுாற்றாண்டில், தமிழகமும், சீனாவும் பகிர்ந்து கொண்ட துாது குழுக்களைப் பற்றி, 'யுவான் சி' என்ற, சீன நுால் விவரிக்கிறது. சீனத் துறைமுகங்களில், தமிழக கப்பல்கள் மிதந்ததை, மார்கோபோலா தெரிவிக்கிறார்.'தயெ சுலி' என்ற நுால், நாகையில், சீனர்களுக்காக செங்கல் கோவில் கட்டப்பட்டதை தெரிவிக்கிறது. பெரியபட்டிணத்தில், சீனாவின் பெருங்கப்பல்களின் நங்கூரமிடத் தேவையான ஆழ்கடல் துறைமுகம் இருந்ததை, சீன நுால் தெரிவிக்கிறது. நாகை மாவட்டம், ஆணைமங்கலத்தில் கிடைத்த, செப்பேட்டில், சீனர்களின் வழிபாட்டுக்காக, புத்த விஹார் கட்ட, ஒரு ஊரையே தானமளித்த செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களைத் தொடர்ந்து, குலோத்துங்க சோழனும், சீனர்களுடன் நல்லுறவிலும், வணிக தொடர்பிலும் இருந்தார்.அப்போதைய காஞ்சிபுரம், சைவ, வைணவ, புத்த, சமண சமயங்கள் செழித்தோங்கும் இடமாக இருந்தது. இங்குள்ள, விண்ணமங்கலத்தின், வைகுண்டபெருமாள் கோவிலில், சீனர் போன்ற உருவச்சிலை உள்ளது. இது, இரு நாட்டு நல்லுறவுகளுக்கான சான்றாக உள்ளது.இந்த நல்லுறவால், தமிழகம், குறிப்பாக காஞ்சிபுரத்துக்கு, என்ன நன்மை கிடைத்தன?


சீனா, பட்டாடைகள்

உற்பத்தியில் சிறந்து விளங்கியது. போர்சலன், செலடன் என்னும், தரமான பச்சை மற்றும் வெண்ணிற பீங்கான்களையும், பிரத்யேகமாக உற்பத்தி செய்தது.இதுபோல், தனித்துவத்துடனும் கலைநயத்துடனும் தயாரித்த பொருட்களை, ஐரோப்பா, பாரசீகம், ரோம் உள்ளிட்ட நாடுகளுக்கு, கடல் வழியாக ஏற்றுமதி செய்தது. அந்த வணிக கப்பல்கள், இந்தியா, இலங்கை வழியே சென்றன. அந்த பாதை, 'பட்டு வணிக பெருவழி' என, அழைக்கப்பட்டது.சீன கப்பல்கள், ஒடிசா, ஆந்திரா, தமிழகம், இலங்கை வழியாக சென்றன. அவற்றுக்காக, தமிழகத்தின் மாமல்லபுரத்தில், மிக ஆழமான துறைமுகத்தை, பல்லவர்கள் ஏற்படுத்தினர். அதேபோல், நாகை, பழவேற்காடு, கோவளம், அரிக்கமேடு, தரங்கம்பாடி, தேவிப்பட்டிணம், பெரியபட்டணம், பழையகாயல் உள்ளிட்ட இடங்களில், துறைமுகங்கள் உருவாக்கப்பட்டன. தமிழர்களின் கப்பல்கள், சீனக் கடலிலும், சீனர்களின் கப்பல்கள், தமிழக கடலிலும் மிதந்தன. சீனப் பொருட்கள், இங்கெல்லாம் இறக்கி வைக்கப்பட்டு, தமிழக பொருட்களுடன் ஏற்றப்பட்டன. இப்படியாக, தமிழகத்தின் வணிகமும், சீன வணிகமும் சிறந்தன. அதை நிரூபிக்கும் வகையில், மாமல்லபுரம் அகழாய்வில், படகுத்துறை கண்டுபிடிக்கப்பட்டது.


சிறப்பான பெயர்

இப்படியாக, சீனர்களிடம் இருந்து, பல்லவர்கள் கற்ற பட்டு உற்பத்தி தொழில்நுட்பத்தால், இன்றும், காஞ்சிபுரம் பட்டு உற்பத்தியில் சிறப்பான பெயரைப் பெற்றுள்ளது. சீன கடல் வணிகம் பெருக, முக்கிய கடற்கரையாகவும், தியானத்தின் வழியாக, புத்த மதம் பரவ காரணமான போதி தர்மரை நினைவுகூரும் வகையிலும், இந்த சந்திப்புக்கான இடமாக மாமல்லபுரத்தை, சீன அதிபர் தேர்வு செய்துள்ளதாக, சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சீன அதிபர் வருகையால், பழந்தமிழரின் பெருமை, உலகெங்கும் பட்டொளி வீசுகிறது.இந்த சந்திப்பால், மீண்டும், நம் நல்லுறவுகள் தழைத்து, கலாசார வணிக உறவுகள் மேம்படட்டும்.


latest tamil newsகி.ஸ்ரீதரன்
தமிழக தொல்லியல் துறையின் முன்னாள் துணை கண்காணிப்பாளர்

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jaya Ram - madurai,இந்தியா
10-அக்-201918:13:37 IST Report Abuse
Jaya Ram நன்றி அய்யா தங்களின் பதிவிற்கு இதிலிருந்தே இந்தியாவும் தமிழ்நாடும் வேறு வேறு என்று உலகமக்கள் புரிந்துகொள்வார்கள் , மேலும் நம்மை வடநாட்டாரின் அடிமைகளாக கருதும் போக்கும் மாறுபடும் என நினைக்கிறன்
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
10-அக்-201900:44:45 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ஆனா, அதை அழிக்கிறதுக்குன்னு கூவும் இந்திக்கார மூர்க்கர்கள்.. அதற்கு இங்கே லாவணி பாடும் காவி கோடாலி காம்புகள் .
Rate this:
Rafi - Riyadh,சவுதி அரேபியா
15-அக்-201914:01:31 IST Report Abuse
Rafi தமிழர்களின் பெருமையை, விம்மிவிடுவார்களே?...
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
09-அக்-201918:53:22 IST Report Abuse
Sampath Kumar ஆனா உங்க கூட்டம் மட்டும் இதை ஏற்க மறுகிறதே அதன் மர்மம் எனன என்று
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X