அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜெ., எடுத்த துணிச்சலான முடிவை செயல்படுத்தியுள்ளோம்

Added : அக் 09, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 ஜெ., எடுத்த துணிச்சலான முடிவை செயல்படுத்தியுள்ளோம்

விக்கிரவாண்டி : ''கீழடி அகழாய்வு என்பது, பல ஆண்டுகளின் ஆழ்ந்த முயற்சியாகும். முன்னாள் முதல்வர், ஜெ., எடுத்த துணிச்சலான முடிவை, நாங்கள் செயல்படுத்தியுள்ளோம்,'' என, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு வந்த அமைச்சர் பாண்டியராஜன், 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி: சிவகங்கை மாவட்டம், கீழடியில் ஐந்தாவது அகழாய்வு ஆராய்ச்சி நடந்து கொண்டிருந்தபோது, நான்காவது அகழாய்வு ஆராய்ச்சி முடிவை, நாம் எழும்பூர் மியூசியத்தில் வெளியிட்டோம். இன்றுடன் ஒரு மாதம் ஆகிறது. அதிலிருந்து உலகமெங்கும் பெரிய அளவில் பேசப்பட்டது.

தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கீழடி சென்றவர், தமிழக அரசையும், என்னையும் பாராட்டினார். ஆனால், ஊடகங்களில் குறிப்பிட்டு தாக்குவது போல் பேசி வருகின்றனர். பாரதிய நாகரிகத்தின் அடித்தளமே, தமிழ் நாகரிகம்தான். கீழடி என்பது தமிழ் நாகரிகம் தான் எனக் கூறினேன். அதற்கு நிறைய எதிர்ப்புகள் வந்துள்ளன. அதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் கூறியது, 2,580 ஆண்டுகளுக்கு முந்தையது தமிழர் நாகரிகம் என, கீழடியில் கண்டுபிடிக்கப்பட்டது. கீழடி ஒரு நகர்ப்புற நாகரிகமாக, தொழில் நாகரிகமாக இருந்துள்ளது. இது தான் கண்டுபிடிக்கப்பட்டது.தேவையில்லாமல் எது முன்னர், எது பின்னர், இந்திய நாகரிகமா... தமிழர் நாகரிகமா... என்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது.

என்றைக்கு, இந்திய குடியரசுக்குள் தமிழ்நாடு கையொப்பமிட்டு உள்ளே வந்ததோ, அதிலிருந்து நாம் முழு அங்கமாக திகழ்கிறோம். அன்றிலிருந்து, பாரத கலாசாரம் என்பதும், தமிழ் கலாசாரம் என்பதும் தனித்தனி என கிடையாது. பாரத பண்பாடு என்ற வானவில்லில், தமிழ் நாகரிகம் ஒரு முக்கிய நிறமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாள நாகரிகம் என அனைத்தும் இந்திய பண்பாட்டின் பல்வேறு தளங்களாக உள்ளன. இதற்கு அடித்தளம் என்பது, தமிழ் நாகரிகம்; அதை கீழடி உணர்த்துகிறது. இப்போது, இந்திய நாகரிகத்தை விட நான் மூத்தவன் எனச் சொல்வது அர்த்தமற்றது. இந்திய நாகரிகம் என்பது ஒரு புறம், தட்சசீலம், நாளந்தா பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்திருக்கிறது.

ஐந்தாவது கட்ட அகழாய்வு ஆராய்ச்சி, இன்னும், 10 நாட்களில் முடிந்து விடும். இதையெல்லாம் முடிவு செய்துதான், ஆறாவது கட்ட அகழாய்வு ஆராய்ச்சி, ஜனவரி மாதத்தில் துவங்க உள்ளது. அதற்காக அந்த பகுதியில், பொதுமக்கள் பார்வையிட தடை செய்யப்பட்டுள்ளது. துாரத்தில் நின்று பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சியை, மேலும் இரண்டு வாரங்கள் நீட்டித்து, இறுதி அறிக்கை தயார் செய்து, ஆராய்ச்சியை பதிவு செய்ய உள்ளோம். அந்தப் பணிக்கு, தற்காலிக பணியாளர்கள், 60 பேர் தேவை இல்லை என்பதால், அவர்களை வெளியே அனுப்பியுள்ளோம்.

நிரந்தரப் பணியாளர்கள், 24 பேர், இந்தப் பணியை செய்து கொண்டிருக்கின்றனர். யாரையும் நாங்கள் அனுப்பவில்லை. அங்குள்ள காலியிடங்களை நிரப்ப முயற்சி செய்து வருகிறோம். முதல்வர், இ.பி.எஸ்., கீழடி அகழாய்வு அருங்காட்சியகத்தை உருவாக்க, ஆராய்ச்சிக்கு எவ்வளவு நிதி தேவையோ அனைத்து நிதியையும் ஒதுக்கித் தருவதாக உறுதி அளித்துள்ளார். மத்திய அரசிடமும் நிதி கேட்டுள்ளோம். கீழடியைப் பொறுத்தவரை அதனுடைய தொன்மையையோ, தமிழர் பெருமையையோ மறைக்கக்கூடிய எந்த ஒரு முயற்சியையும் தமிழக அரசு செய்யப் போவதில்லை என்பதை தெளிவாக கூற விரும்புகிறேன்.

ஆறாவது கட்ட அகழாய்வு ஆராய்ச்சி, கீழடியில், நான்கு கிராமங்களில் செய்ய முடிவு செய்து, மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பி வைத்துள்ளோம். எழும்பூர் அருங்காட்சியகத்தை தரம் உயர்த்த, மத்திய அரசிடம், 14 கோடி ரூபாய் நிதி கேட்டுள்ளோம். அருங்காட்சியக அரங்கு மற்றும் கட்டடம் கட்ட, 57 கோடி ரூபாய் நிதி கேட்டுள்ளோம். கீழடி அகழாய்வு என்பது, பல ஆண்டுகளின் ஆழ்ந்த முயற்சியாகும். முன்னாள் முதல்வர் ஜெ., எடுத்த துணிச்சலான முடிவாகும். அதை நாங்கள் செயல்படுத்தியுள்ளோம். அதற்கடுத்து, முதல்வர், இ.பி.எஸ்., நிதி ஒதுக்கி கொடுத்துள்ளார்.

தி.மு.க., ஆட்சியில் ஒதுக்கிய நிதியை விட இந்த ஒரு ஆண்டில் கூடுதலாக பன்மடங்கு நாம் நிதியை ஒதுக்கி, ஆராய்ச்சி செய்துள்ளோம். இப்போது இவ்வளவு கேள்விகள் கேட்கும், தி.மு.க., கடந்த முறை மத்தியிலும், மாநிலத்தில் ஆட்சியிலிருந்த போது, நிதி ஏதாவது ஒதுக்கி உபயோகமான செயல்பாடுகள் ஏதாவது செய்துள்ளதா? அவர்கள் நினைத்திருந்தால், இந்த துறைக்கு, 100 கோடி ரூபாய் ஒதுக்கி, துறையை மேம்படுத்தியிருக்கலாம்.தி.மு.க.,விற்கு தமிழ் என்பது, தேர்தல் கால வலி நிவாரணியாக, தேர்தல் கால காட்சிப் பொருளாக மட்டுமே பயன்படும். இதை, தமிழக மக்கள் தெளிவாக புரிந்து கொள்வர். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
10-அக்-201916:10:08 IST Report Abuse
Nallavan Nallavan திமுக பற்றி இவர் கூறியது முற்றிலும் உண்மை ..........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X