புதுடில்லி : காஷ்மீர் விவகாரத்தில் அமைதி பேச்சு மூலம் தீர்வு காண வேண்டும் என சீன அதிபர் ஜின்பிங் கூறியதற்கு இந்தியா தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதில், இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாமல் விலகி இருப்பதே, அனைவருக்கும் நலனை அளிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாக்.,க்கு சீனா ஆதரவு அளித்து வந்தது. கடந்த மாதம் நடைபெற்ற ஐநா பொதுக்குழுவில் காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சினையாக்க சீனா ,பாகிஸ்தானுக்கு உதவி செய்தது. இந்நிலையில் நேற்று (அக்.,09) பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சீனா சென்று அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்தார். அப்போது சீன அதிபர் , காஷ்மீரின் நிலைமையைக் கவனித்து வருவதாகவும், அதன் முக்கிய நலன்கள் தொடர்பான பிரச்சினைகளில் பாக்.,க்கு ஆதரவளிக்கப்படும் என்றும் கூறி உள்ளார். பீஜிங்கில் நடந்த கூட்டத்தின் போது பாக்., பிரதமர் இம்ரான் கானிடம், இந்த நிலைமை சரியானதும் தவறும் தெளிவாக உள்ளது. இரு நாடுகளும் அமைதியான பேச்சுவார்த்தை மூலம் சர்ச்சையை தீர்க்க வேண்டும் எனவும் ஜின்பிங் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் சீன அதிபரின் இந்த கருத்திற்கு இந்தியா தரப்பில் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவிஷ் குமார் அளித்துள்ள பதிலில், "பாக்., பிரதமருடன் சந்திப்பின் போது, காஷ்மீர் விவகாரம் தொடர்பாக சீன அதிபர் கூறிய கருத்து தொடர்பான அறிக்கையை கண்டோம். காஷ்மீர், இந்தியாவின் உள்ளார்ந்த பகுதி என்ற இந்தியாவின் நிலைப்பாடு தெளிவாகவும், உறுதியாகவும் உள்ளது. எங்களின் நிலையை சீனாவும் புரிந்து கொண்டுள்ளது. இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் மற்ற நாடுகள் கருத்து கூறுவதை தவிர்ப்பது அனைவருக்கும் நலம் அளிக்கும்" என குறிப்பிட்டுள்ளார். அக்.,11 மற்றும் 12 ஆகிய நாட்களில் இந்திய பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் சந்திப்பு மாமல்லபுரத்தில் நடக்க உள்ள நிலையில் பாக்.,க்கு ஆதரவான நிலைப்பாட்டை மாற்றி, சீனா கருத்து தெரிவித்துள்ளது, இந்தியாவிற்கு கிடைத்துள்ள மிகப் பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE