'கிரேஸி கிரியேஷன்ஸ்' என்ற, கிரேஸி மோகனின் நாடக நிறுவனத்தின், துாணாக இருப்பவர்; கிரேஸி மோகனின் கதைகளில், 'மாது'வாக வலம் வந்து, 'கிரேஸ்' குறையாமல் பார்த்து கொள்பவர், 'மாது' பாலாஜி. இவர், எப்போதும் போல, இப்போதும், பிஸியோ பிஸி. இப்படி, பிஸியாக இருப்பது எப்படி என்பது பற்றியெல்லாம் கேட்டு, அவருடன் உரையாடலாம்.
மோகன், கிரேஸி மோகனாகவும்; பாலாஜி, மாது பாலாஜியாகவும் உருமாறிய காலகட்டத்தை நினைவுக்கூர முடியுமா? நிச்சயமாக. அது, எங்களின் கல்லுாரி காலம். அண்ணன் மோகன் இன்ஜினியரிங் படித்தார். நான், விவேகானந்தா கல்லுாரியில் படித்தேன். அவர், நாடகங்களை எழுதி, அவர் கல்லுாரியில் நடித்தார்.அதே காலகட்டத்தில், நான், நாகேஷ், மனோரமா உள்ளிட்ட நகைச்சுவை நடிகர்களின் நடிப்பைப் பார்த்து, அதேபோல் வீட்டில் நடித்து காண்பிப்பேன். அதைப் பார்த்த அண்ணன் மோகன், என் கல்லுாரியில், நான் நடிப்பதற்காக, நாடகங்களை எழுதித் தந்தான். இப்படியாக, நாங்கள் கல்லுாரிகளுக்கிடையில் பிரபலமானோம்.அப்போது, எஸ்.வி.சேகரிடம், அண்ணனின் வசனம் குறித்து, சிலர் கூறியதால், அவர், ஒரு நாடகத்தை எழுத வாய்ப்பளித்தார். அவருக்காக, மோகன் எழுதியது தான், 'கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம்' என்ற நாடகம்.அந்த நாடகத்தை எழுதியவர் மோகன் என்று போடுவதில், ஒரு பிரச்னை இருந்தது. அப்போது, இரா.மோகன், ரா.மோகன், ஈ.வெ.ரா.மோகன் என, மோகன் என்ற பெயரில் எழுத்தாளர்களாக இருந்தனர். அதனால், கிரேஸியை துாக்கி முன்னால் போட்டு, கிரேஸி மோகனாக்கியவர், 'ஆனந்த விகடன்' தாத்தா, எஸ்.எஸ்.வாசன். அப்படித் தான், மோகன் கிரேஸி மோகனானான்.
அவனுக்கும், நாகேஷை ரொம்ப பிடிக்கும். அதிலும், எதிர்நீச்சல் படத்தில் மாதுவாக நடித்த நாகேஷை ரொம்ப பிடிக்கும். அந்த, 'மாது' என்ற பாத்திரத்தின் மீது இருந்த ஈர்ப்பால், அவன் எழுதும் நாடகங்களில், எனக்கு, மாது என்ற பாத்திரத்தை ஒதுக்கி, வசனங்கள் எழுதினான். அவன் எழுதிய எல்லா நாடகங்களிலும், எனக்கு, மாது பாத்திரம் தான் என்பதால், பாலாஜியாகிய நான், மாது பாலாஜியாக மாறினேன். எப்போதும் சிரித்தபடி பேசவும், பிறரை சிரிக்கும்படி எழுதவும், உங்களுக்கும், அவருக்கும் எங்கிருந்து தீனி கிடைத்தது?எங்கள் குடும்பம் கூட்டுக்குடும்பம். 16 பேர் இருந்தனர். அதில், தாத்தா, தாத்தாவின் தம்பி, அப்பா, பெரியப்பா என, பெரியவர்கள் நிறைந்திருக்க, நாங்கள் ஆறு குழந்தைகள் வீட்டை ரணகளப்படுத்தி விடுவோம்.நான், என் தாத்தாவுடன் சரிசமமாக உட்கார்ந்து கிண்டலடிப்பேன். மோகனுக்கும் தாத்தா, பாட்டி தான் உயிர். எங்களை யாரும், பெரியோருக்கு சமமாக உட்காராதே; சரிக்கு சமமாக பேசாதே என்றெல்லாம் சொன்னதில்லை. மனம் ஒன்றிய பின், வயதுக்கு என்ன தடை. இப்படிப்பட்ட குடும்பத்தில் உள்ள யாருக்கு தான், நகைச்சுவை வராது.அண்ணாவின் எழுத்துக்கும், என் நடிப்புக்கும், குடும்ப உறவுகளும், உரையாடல்களும் தான் தீனி போட்டன. பல கதைகளில், எங்கள் வீட்டு கதாபாத்திரங்கள் வரும், பல வசனங்களில், எங்கள் வீட்டு உரையாடல்கள் ஒலிக்கும்.இப்படி, நாங்கள் சூழலை தனதாக்கிக்கொள்ள, தாத்தா வெங்கடேசனும் காரணம். அவர், அந்த காலத்தில்… அதாவது, இந்த காலத்தில் அவர் இருந்தால், அவருக்கு, 115 வயது என்பதால், அந்த காலத்தில். அவர், கும்பகோணத்தில் இருந்த, 'வாணி விலாஸ் சபா' என்ற நாடகக் குழுவில் நடித்தாராம். அவருடன் நடித்தவர், நகைச்சுவை நடிகர் காத்தாடி ராமமூர்த்தியின் அப்பாவாம். நாங்கள் இப்படிப்பட்ட பெயர் வாங்க, அதுவும், காரணமாக இருக்கலாம்.சரி… போட்ட நாடகத்தையே எத்தனை முறை போடுவீர்கள்... அதை ரசிக்க வைக்க என்ன செய்வீர்கள்?மோகன், முதல் கதையை, 1974ல், எழுதினான். இதுவரை, அவனுடைய எழுத்தில், 25 நாடகங்கள் மேடையேறி உள்ளன. நாங்கள், 1979ல், 'கிரேஸி கிரியேஷன்ஸ்' என்ற நாடக நிறுவனத்தை துவக்கினோம். இதுவரை, நாங்கள் மட்டுமே, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை, எங்களின் நாடகங்களை மேடையேற்றி இருக்கிறோம். இதுவரை, எங்களுக்கு நல்ல பெயர் உள்ளது.
அதற்கு காரணம், இடத்துக்கும் காலத்துக்கும் ஏற்ப, கதைக் களத்தையும், வசனங்களையும் மாற்றிக்கொள்ளும் அவனுடைய புத்திசாலித்தனம் தான்.சிறுவயதிலேயே, 'தேவன், கல்கி, சித்ராலயா கோபு, சோ' என, அந்த கால எழுத்தாளர்களின் படைப்புகளை அண்ணன் விரும்பி படிப்பான். அதனால், அவனால், எந்த இடத்துக்கும், சூழலுக்கும் ஏற்ப, வசனங்களை மாற்றி எழுத முடிந்தது.மற்றபடி, அன்றைக்கும், இன்றைக்கும், அப்பா அப்பா தான்; அம்மா அம்மா தான். மற்ற உறவுகளும் அப்படியே தான் இருக்கின்றன. அப்போதும், இப்போதும் பெரியவர்கள், சிறியவர்களிடம், 'திருடாதே, பொய் சொல்லாதே...' என்றும், தம்பதியிடம். 'சந்தேகப்படாதே...' என்றும் தான் புத்தி சொல்வர். இப்படி, உறவும், உணர்வும் மாறவில்லை. சூழலும், காலமும் தான் மாறி இருக்கின்றன. அதற்கேற்ப மாற வேண்டியது தானே. நேரத்துக்கு ஏற்ப, வசனங்களை மாற்றுவதில், மோகன் கெட்டிக்காரன்.ஒரே நேரத்தில், கிரேஸியால் சினிமா, டிராமாவில் கொடிக் கட்டி பறக்க முடிந்தது எப்படி?அவன், 1984ல், பொய்க்கால் குதிரைக்கு கதை வசனம் எழுதினான். 1988ல், எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள சுடுகாட்டில், சத்யா படப்பிடிப்பு நடந்தது. அங்கு சென்ற, மோகனிடம், 'நான், அபூர்வ சகோதரர்கள் என்ற படம் எடுக்கிறேன்; நீங்கள் கதை வசனம் எழுத முடியுமா?' என, கமல் கேட்டார். அவனும், சரி என்றான்.
அதிலிருந்து, கமலுக்கு, 18 படங்களுக்கு எழுதிவிட்டான். கடைசி வரை, அவன் ரசிகராகவே கமல் இருந்தார்.காலையில், நாடகத்துக்கு எழுதிவிட்டு, இரவெல்லாம், சினிமாவுக்கு எழுதுவான். ஓய்வில்லாமல் உழைத்தான். எனக்கு, சினிமா மீது ஆர்வமில்லாததால், நாடகத்தை மட்டுமே தொடர்கிறேன்.கிரேஸி மோகன் இல்லாத, கிரேஸி கிரியேஷன்ஸ் நாடங்கள் எப்படி நடக்கின்றன?அவன் பாத்திரத்தில் நடிக்க, சிலரை, அவனே தயார்படுத்தி இருந்தான். அவன் ஆசியால், அவன் இருந்து வழிநடத்துவது போல, நன்றாக நடக்கிறது. அவன் கதைகள் இன்னும் இருக்கின்றன. அவன் துவங்கியது, தொடரும்
. - நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE