மோடி-ஜின்பிங் சந்திப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மோடி-ஜின்பிங் சந்திப்பு

Updated : அக் 11, 2019 | Added : அக் 11, 2019 | கருத்துகள் (32)
மோடி, ஜி ஜின்பிங், மாமல்லபுரம், காஷ்மீர், பாகிஸ்தான்

சென்னை: சென்னை வந்த சீன அதிபர் ஜி ஜின்பிங் பிரதமர் மோடியுடனான முதல் நாள் சந்திப்பு இனிதே நிறைவு பெற்றது. நாளை மீண்டும் சந்தித்து முக்கிய பேச்சு நடத்துகின்றனர். குறிப்பிட்ட நேரத்தை விட கூடுதலாக இருவரும் ஆலோசித்தனர்.
ஜின்பிங்கிற்கு, விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியை சந்திக்க சீன அதிபர் ஜி ஜின்பிங், தனி விமானம் மூலம், பிற்பகல் 1.50 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தார். அங்கு, அவருக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், ஜின்பிங்கை, கவர்னர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பி.எஸ்., உள்ளிட்டோர் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.


வேஷ்டியில் வந்து அசத்திய மோடி


மாமல்லபுரத்தில் சீன அதிபரை சந்திக்க பிரதமர் மோடி, வேஷ்டி, சட்டை, தோளில் துண்டுடன் வந்தார். மாணவ, மாணவிகள் மோடியை , தேசிய கொடியை அமைத்து வரவேற்றனர். தமிழக பாரம்பரிய நடன இசை நிகழ்ச்சிகளும் நடந்தன. வழக்கமாக அணியும் குர்தாவுக்கு பதில் தமிழகத்தின் பாரம்பரியமான உடையான, வேஷ்டி, சட்டை மற்றும் தோளில் துண்டு அணிந்தவாறு மோடி, மாமல்லபுரம் வந்தார்.
Advertisementமாமல்லபுரம் சிற்பங்கள்


மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்த பிரதமர் மோடி, அங்குள்ள வரலாற்று சிற்பங்கள் குறித்து விளக்கி கூறினார். மாமல்லபுரம் வந்த ஜின் பிங்கை, பிரதமர் மோடி கைகுலுக்கி வரவேற்றார். சிறிது நேரம் ஆலோசனை நடத்தியதை தொடர்ந்து, அர்ச்சுனன் தபசிற்கு இரு தலைவர்களும் சென்றனர்.ஜின்பிங்கை, அர்ச்சுனன் தபசை சுற்றி காட்டிய மோடி, அங்குள்ள சிற்பங்கள், வரலாறு, தொன்மை மற்றும் அதன் சிறப்புகளை விளக்கி கூறினார். அர்ச்சுனன் தபசு பகுதியில் இருவரும் கைகுலுக்கி புகைப்படமும் எடுத்து கொண்டனர்.தொடர்ந்து, அங்குள்ள இரு தலைவர்களும், நாற்காலியில் அமர்ந்து இளநீர் குடித்தனர். இதனையடுத்து அங்கு நடந்த கலைநிகழ்ச்சிகளை இருவரும் ரசித்து பார்த்தனர். தொடர்ந்து ஜின்பிங்கிற்கு விருந்து அளிக்கப்பட்டது.


மோடி - ஜின்பிங் சந்திப்பு : 10 சிறப்பம்சங்கள் :


1. மோடி-ஜின்பிங் சந்திப்பின் போது பாதுகாப்பு அதிகாரிகளும், மொழிபெயர்ப்பாளர்களும் மட்டுமே உடன் இருப்பார்கள். இவர்களின் சந்திப்பின் போது புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏதும் கையெழுத்தாகாது எனவும், கூட்டறிக்கை ஏதும் வெளியிடப்படாது எனவும் அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.

2. பயங்கரவாத பயிற்சி, பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி, பயங்கரவாத குழுக்களுக்கு மற்ற உதவிகள் உள்ளிட்ட பயங்கரவாதம் தொடர்பான ஆலோசனை இந்த சந்திப்பின் போது முக்கிய அம்சமாக இடம்பெறும் என கூறப்படுகிறது. இந்திய-சீன எல்லைகள் தொடர்பான பேச்சுவார்த்தையும் இடம்பெறலாம் எனவும், அது தொடர்பான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

3. மோடியும் ஜின்பிங்கும் இணைந்து அர்ஜூனன் தவம், பஞ்சரதங்கள் மற்றும் கடற்கரை கோயில் ஆகிய 3 இடங்களை சுற்றி பார்த்தனர். தொடர்ந்து கலைநிகழ்ச்சிகளையும் இருநாட்டு தலைவர்களும் கண்டுகளிக்கின்றனர்.

4. அக்.,12 அன்று காலை, இரு நாட்டு தலைவர்களும் தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ் ரிசார்ட் அண்ட் ஸ்பாவில் சந்தித்து உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்த சந்திப்பின் போது பிரதமர் மோடி, அதிபர் ஜின்பிங்கிற்கு பகல் மற்றும் இரவு விருந்து அளிக்க உள்ளார்.

5. கடந்த ஆண்டு டோக்லாமில் இருநாட்டு ராணுவங்களும் 73 நாட்கள் நேருக்கு நேர் எதிர்த்து நின்ற சில மாதங்களிலேயே சீனாவின் வுகான் நகரில் மோடியும் ஜின்பிங்கும் சந்தித்து பேசினர். ஏரிக்கரையில் இருநாட்டு தலைவர்களும் தனிமையில் நடந்த படி பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.

6. டோக்லாமில் எல்லை தொடர்பாக இருநாடுகளிடையே அமைதி நிலவ இந்த பேச்சுவார்த்தை மிக முக்கியமானதாக விளங்கியது. இரு நாடுகளின் வளர்ச்சிக்காக எல்லையில் அமைதியை காக்க வேண்டும் என இருநாடுகளிடையே ஒப்பந்தமும் போடப்பட்டது.

7. மோடி- ஜின்பிங் சந்திப்பிற்கு முன்பு, சீனாவில் ஜின்பிங்கை சந்தித்து காஷ்மீர் விவகாரம் குறித்து பேசிய பாக்., பிரதமர் இம்ரான் கானிடம், இந்தியா - பாக்., நாடுகள் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என கூறி உள்ளார். இதனால் மோடி - ஜின்பிங் சந்திப்பின் போது காஷ்மீர் தொடர்பான பேச்சும் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

8. காஷ்மீர் விவகாரம் தொடர்பாக சீன அதிபரின் பேச்சுக்கு பதிலளித்துள்ள இந்தியா, காஷ்மீர் இந்தியாவின் உள்ளார்ந்த பகுதி என்பதில் இந்தியா தெளிவாகவும், உறுதியாகவும் உள்ளது. இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் மற்ற நாடுகள் தலையிடாமல் இருப்பதே அனைவருக்கும் நலம் பயக்கும் என கூறி இருந்தார்.

9. காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா.,வில் பாக்., எழுப்பிய போது, பாக்.,கிற்கு சீனா மட்டுமே வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தது. இது இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாடாகவே இருந்தது. இதனால் மோடி உடனான சந்திப்பின் போது ஜின்பிங், காஷ்மீர் பிரச்னை குறித்த பேச்சை தவிர்க்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

10. மோடி-ஜின்பிங் சந்திப்பிற்கு பிறகு இருநாட்டு அரசுத்துறை செய்தி தொடர்பாளர்களும் செய்தியாளர்களை சந்தித்து மோடி- ஜின்பிங் சந்திப்பில் ஆலோசிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து விரிவாக விளக்கம் அளிப்பார்கள் என கூறப்படுகிறது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X