'தேமதுர தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்' என்பான் பாரதி.உலகின் மூத்த மொழிகளில் ஒன்றான சீன மொழி பேசும் பெண்கள், உலகின் மூத்த மொழிகளில் இனிதான தமிழை, சீன வானொலியின், தமிழ் பிரிவில் இருந்து, கொஞ்சி பேசும் அழகில் சொக்கி, உலகம் முழுக்க, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நேயர்கள் உருவாகி உள்ளனர்.

இதற்கு, அந்த ஒலிபரப்பின் தலைவர்களாக இருந்த, சுந்தரம், கலையரசி ஆகியோர் மிக முக்கியமானவர்கள். அவர்களை தொடர்ந்து, தற்போது, தலைவராக இருப்பவர், கலைமகள். இந்த இனிய தமிழ் பெயர்களை வைத்திருக்கும் இவர்கள் யாரும் தமிழர்கள் அல்ல. தமிழை சீனாவில் கற்று, தமிழால் ஈர்க்கப்பட்டு, தமிழ் பெயரை சூட்டிக் கொண்டவர்கள்.இனி கலைமகளுடன் பேசலாம்…
* கலைமகள், உங்களை பற்றி?
என் இயற்பெயர், ஷாவோ ஜியாங். 25 ஆண்டுகளுக்கு முன், சீன கம்யூனிகேஷன் பல்கலையில், தமிழ் மொழிக்காக தனி பிரிவு துவக்கப்பட்டது; அதில் சேர்ந்தேன். சீன மொழியான மான்டரினைப் போல, தமிழ்மொழி செம்மொழி என்பதை மட்டும் அறிந்திருந்தேன்.என், பேராசிரியர் பீ லுாசா தான், எனக்கு, தமிழின் தொன்மையையும், அதன் சிறப்புகளையும் விளக்கினார். அப்போது, அங்கு, என்னுடன் சேர்த்து, ஐந்து பேர் மட்டுமே, தமிழ் படிக்க சேர்ந்தோம்.
தமிழ் கற்பது, மற்ற மொழிகளைப் போல அல்ல; மிகவும் கடினமானது. எங்கள் மொழியான சீன மொழி, சித்திரம் போல இருக்கும். அதை கற்பது எங்களுக்கு ரசனையும், ஈர்ப்பும் இருக்கும். தமிழ் கோடுகளும், நெளிவு, சுழிவுகளுமாய் இருந்ததால், முதலில் எனக்கு தமிழ் எழுத்துகளை கற்பதில், அயர்வு ஏற்பட்டது.
என்றாலும், அந்த நான்காண்டு தமிழ் கல்வியில், எளிய தமிழ் சொற்கள் மற்றும் பாரதியார் கவிதைகள் உள்ளிட்டவை இடம்பெற்றன.
அந்த கற்பித்தல் முறையால், எனக்கு தமிழ் கற்பதில் ஆர்வம் கூடியது. பின், அதே வானொலியின் தமிழ் ஒலிபரப்பு பிரிவில், நானும் அறிவிப்பாளராக சேர்ந்து, என் பெயரை, கலைமகள் என மாற்றிக் கொண்டேன்.
என் பெயருடன் குரலைக் கேட்டதும், உலகமெல்லாம் உள்ள, தமிழ் நேயர்கள், அன்பையும், உற்சாகத்தையும் கடிதங்களின் வாயிலாக வெளிப்படுத்தினர்.சீன வானொலியில், 65 மொழிகள் ஒலிபரப்பு செய்யப்படுகின்றன. என்றாலும், தமிழ் நேயர்களை போல், அன்பும், பாசமும் உள்ள நேயர்கள், மற்ற மொழிகளில் குறைவு தான்.
* உங்கள் நேயர்களை பற்றி?
தமிழ் ஒலிபரப்பு, 50 ஆண்டு களுக்கு முன் துவக்கப்பட்டது. துவக்கத்தில், அரை மணி நேரமாக இருந்த ஒலிபரப்பு, தற்போது ஒரு மணி நேரமாக விரிந்துள்ளது.
எங்கள் ஒலிபரப்பு சேவையை, தமிழகம், இலங்கை, அமெரிக்கா, கனடா, மலேஷியா, சிங்கப்பூர், ஹாங்காங், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் வாழும், ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கேட்டு மகிழ்ந்து, மின்னஞ்சல் அனுப்புகின்றனர்.
எங்கள் ஒலிபரப்பு பிரிவில், தமிழ் கற்றோர் குறைவு தான் என்றாலும், நாங்கள், உங்கள் ஊரில் உள்ள ஊடகவியலாளர்களை போல, பிற மொழி சொற்களை கலந்து, ஒலிபரப்பு செய்வதில்லை. துாய தமிழில் தான் ஒலிபரப்பு செய்கிறோம். இதை, எங்கள் கொள்கையாகவே பின்பற்றுகிறோம்.சீனாவின், பீஜிங், ஷாங்காய், குவாங்துங், யுனான் உள்ளிட்ட சீன மாநகரங்களில் வாழும், தமிழர்களையும், சீன நாட்டுக்கு வரும் தமிழர்களையும் சந்தித்து, அவர்களின் ஆர்வங்களை புரிந்து, ஒலிபரப்பு செய்கிறோம்.

* உங்களின் தமிழ் சேவை எப்படி உள்ளது?
சீனர்கள், தமிழ் கற்க சிரமப்படக்கூடாது என்பதற்காக, சீன - தமிழ் அகராதி ஒன்றை உருவாக்கி உள்ளோம். சீனாவைப் பற்றிய தகவல்களை, தமிழில் எழுதி வெளியிட்டுள்ளோம். இது போன்ற பல பணிகள் தொடர்கின்றன.
* சீனா - தமிழக உறவு பற்றி?
சீனா பழமையான நாடு; தமிழகமும் பழமையானது. இரண்டு மொழிகளும் உலகின் மூத்த மொழிகள். தமிழர்களும், சீனர்களும் அன்பானவர்கள். தமிழர்களின் பொங்கல் பண்டிகையை போலவே, எங்களுக்கும், கஞ்சியா என்ற பண்டிகை உள்ளது.
அரிய கருத்துகளை உடைய திருக்குறளுக்கு நிகராக, சீன மொழியில் நிறைய பழமொழிகள் உள்ளன. அவற்றை, நான் தொகுத்து, இரண்டையும் ஒப்பிட்டு, நிகழ்ச்சிகளை செய்கிறேன்.சீனாவில், மூன்று பல்கலைகளில், தமிழ் கற்பிக்கப்படுகிறது. ஆயிரக்கணக்கான தமிழர்கள், சீனாவில் இருப்பதை மகிழ்ச்சியாகவே கருதுகின்றனர்; இது, தொடரும்.தமிழர்களின் கலைகளை போலவே, சீனர்களின் கலைகளும் பாரம்பரியம் மிக்கவை. பண்டிகைகளும், மூத்தோரை மதிப்பதிலும், சீனாவும், தமிழகமும் ஒன்று தான். தமிழ் நுால்களை, சீன மொழியில் மொழிபெயர்க்க வேண்டும் என்பது, என் ஆசை.
* சீன அதிபர், இந்திய பிரதமர் சந்திப்பு பற்றி?
இருநாட்டு தலைவர்களும், மாமல்லபுரத்தில் சந்திப்பதால், இருநாட்டு உறவுகள் மேலும் வலுப்பெறும். கலாசார புரிதலும், பகிர்தலும் ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது.
* தமிழகத்திலிருந்து நீங்கள் எடுத்துச் செல்ல நினைக்கும் பொருட்கள் என்னென்ன?
எனக்கு, தமிழக உணவுகள் மிகவும் பிடிக்கும். அதிலும், தோசை மிகவும் பிடிக்கும். மூலிகைகள், கலைப்பொருட்கள், அழகழகான வடிவமைப்புடைய தங்க நகைகள் உள்ளிட்டவையும் எனக்கு பிடிக்கும். எனக்கு மட்டுமல்ல, சீனர்களுக்கும் பிடிக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.
'தமிழர்களுடன் பழக ஆசை':
மற்றொரு அறிவிப்பாளர் பூங்கோதை கூறியதாவது: நான், 2007ல், தமிழ் கற்றேன். அப்போது, எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. சீனர்களை பொறுத்தவரை, தமிழ் கற்க விரும்புகின்றனர். ஆனால், மிகவும் கடினமான மொழியாக தமிழ் உள்ளது. வானொலி சேவையில், 2011ல் சேர்ந்தேன். அதிலிருந்து, தமிழர்களுடன் எனக்கு தொடர்பு உள்ளது; என்றாலும், தமிழர்களைப் போல, பேச்சு தமிழ் எனக்கு அறிமுகமாகவில்லை. இலக்கணத் தமிழில் தான் பேசி வருகிறேன்.
தமிழர்களுடன் நிறைய பழக வேண்டும்; தமிழர்களைப் போல தமிழ் பேச வேண்டும் என்ற ஆசை உள்ளது. நாள்தோறும், அறிவியல் தொடர்பான செய்திகளையும், சீன - தமிழ் ஒற்றுமை குறித்தும் ஒலிபரப்புகிறோம். சீன இசை நிகழ்ச்சியை ஒலிபரப்புகிறோம். அதில், சீன நாட்டுப்புறக் கலைகளை ஒலிபரப்புகிறோம். அதற்கும், தமிழுக்கும் உள்ள தொடர்பை, நேயர்கள் கூறுகின்றனர். தமிழர்கள் நேசத்துக்குரியவர்கள்.இவ்வாறு, அவர் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE