புதுடில்லி : பிரதமர் மோடியை விட அதிக முறை வெளிநாடு பயணம் மேற்கொண்டது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தான் என மத்திய அமைச்சரும், பா.ஜ., தலைவருமான அமித்ஷா தெரிவித்துள்ளார்.

டில்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், "வயிற்றெரிச்சல் காரணமாகவே மோடியை காங்., வசைபாடுகிறது. மோடி எங்கு சென்றாலும் ஆயிரக் கணக்கான விமான நிலையங்களில் கூட கூடி " மோடி...மோடி"என முழக்கமிடுகின்றனர். இது நாட்டிற்கு கிடைத்த கவுரவம். இது காங்.,க்கு வயிற்று எரிச்சலை கொடுத்துள்ளது. அதனால் தான் அவர்கள், மோடி ஏன் அதிகமாக வெளிநாடு செல்கிறார் என கேட்கின்றனர்.

ஹூஸ்டன் கூட்டத்தில் மோடிக்கு கிடைத்த வரவேற்பு, உலக அளவில் புகழ்பெற்ற பிரதமர் மோடி என்பதை நிரூபித்துள்ளது. சோனியா எழுதி கொடுத்ததை தான் மன்மோகன் வாசிப்பார். ரஷ்யாவிற்கான அறிக்கையை மாற்றி மலேசியாவில் வாசித்தவர் மன்மோகன் சிங். மோடி வெளிநாடு செல்வதை காங்., விமர்சிக்கிறது. ஆனால் மோடியை விட அதிக முறை வெளிநாடு பயணம் சென்றது மன்மோகன் சிங் தான்" என்றார்.
டிசம்பர் மாதம் பார்லி.,யில் பேசிய மத்திய அமைச்சர் வி.கே.சிங்கும், 2014 மே மாதம் பிரதமராக பதவியேற்ற பிறகு மோடி இதுவரை 55 க்கும் அதிகமான நாடுகளுக்கு 48 முறை வெளிநாட்டு பயணம் செய்துள்ளார். இதில் சில நாடுகளுக்கு அதிக முறை சென்றுள்ளார். இந்த கால கட்டத்தில் இந்தியாவில் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் அதிகரித்துள்ளன. 2014 முதல் 2018 ஜூன் மாதம் வரை வெளிநாட்டு நேரடி முதலீடு 81,843.71 மில்லியன் அமெரிக்க டாலரில் இருந்து 136,077.75 மில்லியன்அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது என தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE