'கிரைம்' நாவல்களின் ஜாம்பவான் ராஜேஷ்குமார். இவரது நாவல்களில், விறுவிறுப்பு, அதிரடி திருப்பம் என, அத்தனையும் இருக்கும். கடந்த, 50 ஆண்டுகளாக, எழுத்தாற்றலால், வாசகர்களின் மனதை கட்டிப் போட்டிருக்கும் வித்தகர். அவர், நம் நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:
ராஜேஷ்குமார் எழுத்துலகிற்கு வர பின்புலமாக இருந்தது என்ன?
கல்லுாரியில் படித்த போது, ஆண்டு மலருக்கு கதைகள் வேண்டும் என, தமிழ் பேராசிரியர் கேட்டார். என் நண்பன் ஒருவன், 'ராஜேஷ்குமார் நன்றாக கதை எழுதுவான்' என, கூறிவிட்டான்.பேராசிரியரும், 'நாளை கதையுடன் தான் வர வேண்டும்' என, அன்பு கட்டளையிட்டார். மறுநாள், ஒரு சிறுகதை எழுதிச் சென்றேன். படித்து பார்த்த அவர், 'நீ பெரிய எழுத்தாளனாக வருவாய்' என, உச்சிமுகர்ந்தார். ஆண்டு மலரிலும் சிறுகதை வெளிவந்தது. மாணவர்கள் மத்தியில், ஒரு எழுத்தாளனாக அறியப்பட்டேன். அந்த புகழுக்கு நான் மயங்கவில்லை. அரசு பணியில் சேர வேண்டும் என்பதே, என் லட்சியம். அதனால், எழுதும் எண்ணத்தை துாக்கி எறிந்தேன்.க்ஷ
பின் உங்களை பேனா பிடிக்க துாண்டியது எது?
பட்டம் பெற்ற பின், ஆறு மாதங்களாக, அரசு பணியில் சேர முயன்றேன். எதுவும் கிடைக்கவில்லை. அப்போது, 'மாலைமுரசு' நாளிதழ், சிறுகதை போட்டி நடத்தியது. இதில், முதல் பரிசாக, 10 ரூபாய் அறிவிக்கப்பட்டு இருந்தது. நண்பர்கள், என்னை எழுத துாண்டினர். நான் எழுதிய சிறுகதைக்கு முதல் பரிசு கிடைத்தது; தொடர்ந்து எழுதினேன்.என் உறவினர்கள், 'பெரிய கதாசிரியன் போல எழுதிக்கொண்டே இருக்கிறான்; உருப்படாமல் போகப் போகிறான். கண்டியுங்கள்' என, என் தாயிடம் கூறினர். என் தாயோ, 'என் மகன் கதை எழுதினாலும், பெரிய எழுத்தாளனாக வருவான்' என, அவர்கள் வாயை அடைத்தார்.
'கிரைம்' நாவல் பக்கம் தாவியது எப்படி?
'கல்கண்டு' ஆசிரியர், தமிழ்வாணன், சங்கர்லால் என்ற பெயரில், துப்பறியும் நாவல்களை எழுதி, வாசகர்களின் மனதை கொள்ளையடித்து இருந்தார். தமிழ்வாணன் திடீரென மறைந்தார். துப்பறியும் நாவல் தொடர்பாக, கல்கண்டு வாசகர்களுக்கு, வெற்றிடம் ஏற்பட்டது. அப்போது, 'குமுதம்' ஆசிரியர், என்னை, துப்பறியும் நாவலை எழுதச் சொன்னார். 'தமிழ்வாணன் எழுதிய இடத்தில், நான் எழுதுவதா?' என, இலக்கியவாதிகள் போர்க்கொடி துாக்கினர்.அப்படியும், எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதை சவாலாக ஏற்று, '72வது டெஸ்டியூப்' என்ற துப்பறியும் நாவலை எழுதினேன். அது, வாசகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
பதிப்பாசிரியர்கள் உங்களை மொய்த்த போதும், எழுத்தில் தரம் குறையாமல் பார்த்துக் கொண்டது எப்படி?
நான், திரைப்படங்கள் பார்ப்பது, வேறு எழுத்தாளர்களின் கதைகளை படிப்பது உள்ளிட்டவை களை, முழுவதுமாக தவிர்த்தேன். புதிய யுக்திகளை யோசித்தேன்.ஒவ்வொரு கதைக்கும், துவக்கம், முடிவு, கதாபாத்திரங்கள், நிகழ்விடம், காலம் உள்ளிட்ட அனைத்தையும் முடிவு செய்த பிறகே, எழுத துவங்குவேன்.அவற்றை, சுருக்கமாக எழுதி, தனித்தனியாக வைத்து விடுவேன். ஒரு கதையில், இன்னொரு கதையின் சாயல் வந்தாலோ, வேறு ஏதேனும் ஒற்றுமை இருந்தாலோ, என் மனைவி படித்து, சுட்டிக்காட்டுவார்.அவர், என் கதைகளின் முதல் ரசிகையாக இருந்ததால், என்னால் எந்த குழப்பமும் இல்லாமல் எழுத முடிந்தது.
உங்கள் காலக் கட்டத்தில், எழுத்தாளர்களுக்கு இடையே உறவு முறைகள் எப்படி?
பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா, தேவிபாலா, ராஜேந்திர குமார் உள்ளிட்ட எழுத்தாளர்களை சந்திக்க நேர்ந்தால், அவர்களின் புதிய யுக்திகளை மனதார பாராட்டுவேன். அவர்களும், என் கதையின் சூட்சமங்களை பாராட்டுவர்.
தற்போதைய, 'டிஜிட்டல்' யுகத்தில்,நாவல், சிறுகதை களுக்கான வரவேற்பு எப்படி உள்ளது?
பெண்களின் திருமண பட்டுப்புடவை, பாட்டிகளின் கதை, அம்மாவின் சாப்பாடு, மனைவியின் அன்பு போல, புத்தக வாசிப்புக்கு, எல்லா காலத்திலும் மதிப்பு உண்டு. நம்மை விட, 10 ஆண்டுகளுக்கு முன், சிங்கப்பூரில், மொபைல் போன்கள் அறிமுகமாகின. அவர்கள், அதிக ஆர்வமுடன், அவற்றை பயன்படுத்தினர்.
தற்போது, 60 சதவீதம் பயணியரிடம், அங்கு மொபைல் போன்கள் இல்லை; புத்தகங்கள் இருக்கின்றன. இந்நிலை, நமக்கும் வரும். அந்த காலகட்டத்தில், வாசகர்களின் ரசனையை பூர்த்தி செய்ய, எழுத்தாளர்கள் இருப்பரா என தெரியவில்லை.
ஏன் அப்படி கூறுகிறீர்கள்?
நான், 10 ஆண்டுகள் சிறுகதைகள் எழுதிய அனுபவத்திற்கு பின், நாவல்கள் எழுதினேன். ஒவ்வொரு எழுத்தாளரும், அப்படி உழைத்து தான், வாசகர்கள் மனதில் இடம் பிடித்தனர். தற்போதைய இளைஞர்கள், துவக்கத்திலேயே நாவல் எழுதி, ஒரு சிலர் பெயரும், புகழும் பெறுகின்றனர்.
ஒரு சிலர், புத்தகம் விற்பனையாகாமல், எழுதுவதில் இருந்து, முடங்கி விடுகின்றனர். வெற்றி பெறுவோரும், தொடர்ந்து வெற்றி கிட்டாததால், காணாமல் போய்விடுகின்றனர்.அதனால், கடின உழைப்பும்; அர்ப்பணிப்பும், தேடுதலும், ஒரு எழுத்தாளனுக்கு அவசியம் என்பதை உணர வேண்டும்.
உங்களின் சினிமா அனுபவம் பற்றி...
எனக்கு, சினிமாவில் கசப்பான அனுபவமேகிடைத்துள்ளது. நேர்மையான சினிமாக்காரர்களுக்காக, என் பேனா எழுத காத்திருக்கிறது.
- நமது நிருபர் -