புதுடில்லி: வரும், 21ம் தேதி, ஹரியானா மற்றும் மஹாராஷ்டிர மாநிலங்களில், சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன.

தேர்தல் முடிவுகள், 24ல் வெளியாகும். ஹரியானாவில், பா.ஜ., ஆட்சி நடைபெறுகிறது; மஹாராஷ்டிராவில் பா.ஜ., - சிவசேனா கூட்டணி அரசு அமைந்திருக்கிறது.ஆனால், டில்லி அரசியல் வட்டாரங்களில், இந்த மாநில தேர்தல்கள் குறித்து எந்த பரபரப்பும் இல்லை. காரணம், காங்கிரஸ் உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் பரிதாப நிலையில் உள்ளது தான்.
மஹாராஷ்டிராவில், காங்., தலைவர்கள் பலர் ராஜினாமா செய்து, பா.ஜ.,வில் ஐக்கியமாகிவிட்டனர். ஹரியானா காங்கிரசிலோ கோஷ்டிப் பூசல் உச்சத்திலிருக்கிறது. முன்னாள் காங்., தலைவர் ஒருவர், கட்சியை ஒழிக்க சபதம் போட்டுள்ளார்.வழக்கமாக, 'டிவி' சேனல்கள், கருத்து கணிப்பு, விவாதங்கள் என, சூட்டைக் கிளப்பும். ஆனால், இந்த முறை அமைதி நிலவுகிறது.

இரண்டு மாநிலங்களிலும், பா.ஜ., தான் வெற்றி பெறப்போகிறது என, எதிர்க்கட்சிகளும் முடிவு செய்துவிட்டது போல தெரிகிறது. காங்., முன்னாள் தலைவர் ராகுல், இந்த இரு மாநிலங்களிலும் பிரசாரம் செய்ய முடிவெடுத்திருந்தாலும், அது எடுபடுமா என்பது சந்தேகம் தான். காங்., தலைவர் சோனியாவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பிரசாரம் செய்யவில்லை.
ஆனால், இப்போது, காங்கிரஸ் பரிதாப நிலையில் இருப்பதால், வேறு வழியில்லாமல், ஓரிரு பிரசார கூட்டங்களில் பேச முடிவு செய்துள்ளார். 'பொருளாதார மந்த நிலை, வேலை வாய்ப்புகள் குறைவு' என, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பா.ஜ., ஆட்சியை விமர்சித்து வந்தாலும், தேர்தலில் இது எதிரொலிக்குமா என்பது சந்தேகம் தான்.