போதி தர்மரால் ஏற்பட்ட பிணைப்பை புதுப்பித்த மோடி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

போதி தர்மரால் ஏற்பட்ட பிணைப்பை புதுப்பித்த மோடி

Added : அக் 13, 2019
Share

சென்னை:ஐந்தாம் நுாற்றாண்டில், தமிழகத்திற்கும், சீனாவுக்கும் இடையே, போதி தர்மரால் பிணைப்பு ஏற்பட்டது. தற்போது, 21ம் நுாற்றாண்டில், பிரதமர் மோடியால், சீனாவுக்கும், தமிழகத்திற்கும் இடையிலான பிணைப்பு புதுப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் - சீனா இடையிலான உறவு, 3,000 ஆண்டுகள் பழமையானது. பல்லவ மன்னர்கள், காஞ்சிபுரத்தை தலைநகர மாக வைத்து, ஆட்சி செய்து வந்தனர். அவர்கள்ஆட்சி செய்த பகுதி, தொண்டை மண்டலம் என, அழைக்கப்பட்டது.அவர்கள் ஆட்சி காலத்தில், மாமல்லபுரம்கோவில்கள் கட்டப்பட்டன. கி.பி., 600ல், பல்லவ மன்னர் முதலாம் நரசிம்மவர்மன் காலத்தில், ஹியூன் ஸங் என்ற சீன பயணி, காஞ்சிபுரம் வந்துள்ளார்.எட்டாம் நுாற்றாண்டில், இரண்டாம் நரசிம்மவர்மனுடன், அப்போதைய சீனாவின் தாங் அரசர், ராணுவ ரீதியான தொடர்பு வைத்திருந்தார். திபெத்திடமிருந்து, தென் சீனாவை பாதுகாக்க,அவருக்கு நரசிம்மவர்மன் உதவியுள்ளார்.

150 ஆண்டுகள்

பல்லவர்களின் தலைநகரான காஞ்சிபுரத்திற்கு, சீனாவின் புத்த துறவியான யுவான் சுவாங் வந்துள்ளார். அவர், மாமல்லபுரம் துறைமுக நகருக்கு, கப்பலில் வந்து ஆற்று வழியாக, படகில் காஞ்சிபுரம் சென்றுள்ளார்.பல்லவ மன்னர்கள் பரம்பரையில் வந்தவர் போதி தர்மர். இவர், 5ம் நுாற்றாண்டைச் சேர்ந்த புத்த மத துறவி. தமிழகத்தில் உள்ள காஞ்சிபுரத்தில், பல்லவ மன்னரான கந்தவர்மனின், மூன்றாவது மகனாக பிறந்தார்.அப்போது, புத்த மதம், தமிழகத்தில் தழைத்தோங்கியது. பல்லவ இளவரசராக இருந்த புத்தவர்மன், புத்த மதத்தை தழுவி, போதி தர்மரானார். காஞ்சிபுரத்திலிருந்து சீனா சென்ற போதி தர்மர், அங்கே, மகாயான புத்த வம்சத்தை பரப்பியதாகவும், 150 ஆண்டுகள் உயிரோடு இருந்ததாகவும், சீன வரலாறு கூறுகிறது. சீனாவில், 'ஷாலின் குங்பூ' என்ற தற்காப்பு கலையை, போதி தர்மர் அறிமுகம் செய்ததாக கூறப்படுகிறது. சீனாவுக்கும், தமிழகத்திற்கும் இடையே, நெருங்கிய வணிக தொடர்பு,பண்டைய காலம் முதல் இருந்து வருகிறது.

வாழ்க்கை வரலாறு

இந்த சூழ்நிலையில், இந்தியா - சீனா இடையிலான, இரண்டாவது முறைசாரா உச்சி மாநாட்டை நடத்த, பிரதமர் மோடி, மாமல்லபுரத்தை தேர்வு செய்தார்.அன்று முதல், உலகம் முழுவதும் ஏராளமானோர், மாமல்லபுரத்தின் சிறப்புகளை இணையத்தில் தேடினர்.அப்போது, பல்லவ மன்னர்கள் ஆட்சி, அவர்கள் உருவாக்கிய கலை பொக்கிஷங்கள், தமிழகத்திற்கும் - சீனாவிற்கும் இடையிலான தொடர்பு, போதி தர்மர் வாழ்க்கை வரலாறு என, அனைத்தையும் அறிந்தனர்.பிரதமர் மோடி - சீன அதிபர் ஸீ ஜின்பிங் பங்கேற்ற, இரண்டாவது முறைசாரா உச்சி மாநாடு, நேற்று நிறைவடைந்தது. இரு நாட்களும், உலகத்தின் பார்வை, மாமல்லபுரம் மீது திரும்பியது.

நெருங்கிய தொடர்பு

சீன மக்கள், மாமல்லபுரம் வர ஆர்வம் காட்ட துவங்கி உள்ளனர். போதிதர்மரின் பரம்பரையால், வரலாற்றில் இடம் பிடித்த மாமல்லபுரம், இன்று பிரதமர் மோடியால், மீண்டும் சரித்திரத்தில் இடம் பிடித்துள்ளது.பிரதமர் மோடியின் நடவடிக்கையால், மாமல்லபுரம் மிகப்பெரிய சுற்றுலா தலமாகஉருவெடுக்க உள்ளது.போதி தர்மர், 5ம் நுாற்றாண்டில், தமிழகத்திற்கும் - சீனாவிற்கும் இடையே, நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தினார்.இந்த, 21ம் நுாற்றாண்டில், பிரதமர் மோடி மீண்டும் சீனாவிற்கும், தமிழகத்திற்கும் இடையே, நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தி, அனைவரின் மனதையும் கவர்ந்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X