ஓட்டலுக்கு போய் சாப்பிடுவது, கவுரவமாக இப்போது பார்க்கப்படுகிறது. வீடுகளில் உணவு தயாரிக்க போதிய உணவுப் பொருட்கள் இருந்தாலும், மகிழ்ச்சியை கொண்டாடவும், பொழுது போக்கிற்காகவும், ஓட்டல்களுக்குச் சென்று உணவருந்துகின்றனர்.இந்நிலை, 30 - 40 ஆண்டுகளுக்கு முன் கிடையாது. வீடுகளில் உணவு சமைக்காதோர்; குடும்பம் இன்றி, தனியாக தங்கி இருப்போர்; அவசர வேலையாக வெளியூர்களுக்கு செல்வோர் தான், ஓட்டல்களில் சாப்பிடுவர்.கால மாற்றத்தில், ஓட்டலில் சாப்பிடுவதும், ஓட்டல் பண்டங்களை, வீடுகளுக்கு வாங்கி வந்து சாப்பிடுவதும், வீட்டில் இருந்தபடியே, மொபைல் போன், 'ஆப்'பில், விதவிதமான ஓட்டல்களுக்கு, 'ஆர்டர்' செய்து, விரும்பிய உணவுகளை வாங்கி, சாப்பிடும் காலமும் வந்து விட்டது.ஆனால், ஓட்டல்களில் நாம் ருசித்து சாப்பிடும் உணவுகள்; ஓட்டல்களில் இருந்து வரவழைத்து அருந்தும் உணவுகள், எந்த அளவுக்கு சுத்தமாகவும், தரமாகவும் தயாரிக்கப்படுகின்றன என்பதே கேள்வி.
செய்தித் தாள்களிலும், செய்தி சேனல்களிலும், சமீபத்தில் வந்த செய்திகள், வெகுவாக யோசிக்க வைக்கின்றன.தமிழகம் முழுவதும் கிளைகளுடன் கூடிய, இட்லிக்கு பெயர் பெற்ற உணவகம் ஒன்றுக்கு, உணவு பாதுகாப்பு அதிகாரிகள், சமீபத்தில், 'சீல்' வைத்தனர். அந்த உணவகத் தயாரிப்புகளில், புழுக்கள் இருந்ததை கண்டறிந்ததை அடுத்து, அந்த உணவகத்தின் உணவு தயாரிப்பு தொழிற்சாலை மூடப்பட்டது.அதற்கு சில நாட்களுக்கு முன், ருசியான பிரியாணிக்கு பெயர் பெற்ற ஒரு நிறுவனத்திலிருந்து, 'பார்சல்' வாங்கி வந்து சாப்பிட்ட நபர், அதை அவிழ்த்துப் பார்த்து, அதிர்ச்சி அடைந்தார். கால் புண்ணுக்கு கட்டும், 'பேண்டேஜ்' ரத்த கறையுடன், அந்த உணவு பார்சலில் இருந்தது.அதை பார்த்த பின், அந்த உணவை, அவரால் கண்டிப்பாக சாப்பிட்டிருக்க முடியாது. விவகாரம், செய்தி ஊடகங்களுக்கு சென்றது. உணவு பாதுகாப்பு அதிகாரிகள், அந்த உணவகத்தில் ஆய்வு நடத்தி, ஏராளமான சுகாதாரக் கேடுகளை கண்டறிந்தனர்.அந்த உணவகத்தின் கிளை, சில நாட்களுக்கு மூடப்பட்டது. அதன் பின் திறக்கப்பட்டு, வியாபாரம் வழக்கத்தை விட அதிகமாக நடக்கிறது.
நாம் ஆசையாக சாப்பிடும் உணவு, சுத்தமாக தயாரிக்கப்படுகிறதா என்று கூட பலர் கவலைப்படுவதில்லை. நான்கு மாடிகளில் உணவகம்; முழுக்க முழுக்க, 'ஏசி' உணவு பரிமாறும் ஊழியர்கள் அணிந்திருக்கும் வெள்ளுடை; தரையில் கால் வைத்தால் வழுக்கும் அளவுக்கு துடைத்துக் கொண்டே இருக்கும் ஊழியர்கள்; அலங்காரமாக எடுத்து வரப்படும் பண்டங்கள் என, உணவகங்கள் உள்ளன.அது போலத் தான், உணவு தயாரிக்கும் இடங்கள் இருக்கும் என, நினைத்தால் தப்பு. உணவகங்களின் உள்ளே, உணவு தயாரிக்கும் இடங்களின் நிலை; அங்குள்ள பணியாளர்களுக்கு இருக்கும் வசதிகள்; அவர்கள் பயன்படுத்தும் பொருட்கள், பாத்திரங்களின் சுத்தத் தன்மை, பணியாளர் நடத்தை போன்றவை, அதிர்ச்சி ஊட்டும் வகையில் உள்ளன.
நான் வசிக்கும் நகரில், என் தெருவில், பிரபலமான உணவகம் ஒன்று உள்ளது. அதன் ஒவ்வொரு உணவும், இனிப்புகளும், மீண்டும் மீண்டும் சாப்பிடத் துாண்டும் வகையில் இருக்கும். அதன் உரிமையாளருக்கு, சமூகத்தில் நல்ல அந்தஸ்து உள்ளது.எனினும், அவரின் உணவக தயாரிப்பு ஊழியர்களின் செயல்பாடு, காய்கறிகள் நறுக்கும் இடம், அதற்காக பயன்படுத்தும் கத்தி, தேங்காய் துருவி, கிரைண்டர் போன்ற கருவிகள், அறவே சுத்தமில்லாமல் இருப்பதை, அந்த வழியாக போகும் போதும், வரும் போதும் கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.
அந்த உணவக, உணவு தயாரிப்பு கூடத்தில் பணியாற்றும் பலரில், அந்த நபரும் ஒருவராக இருப்பார் போலும்; காய்கறி நறுக்குபவராக இருப்பார் என, நினைக்கிறேன். சாதாரண, தகடு போன்ற, கறுப்பு நிற கைப்பிடியுடன் கூடிய, காய்கறி நறுக்கும் கத்தியுடன், சமையல் அறையிலிருந்து வெளியே வந்து, மொபைலில் பேசிக் கொண்டிருந்தார்.அவர் கையிலிருந்த கத்தி முதுகு, இடுப்பு, நெற்றி, கைகளில் சேர்ந்திருந்த வியர்வையை வழித்துக் கொண்டிருந்தது. மொபைலில் பேசி முடித்து, வேகமாக உள்ளே சென்றவர், அடுத்த நொடியில், காய்கறி நறுக்கிக் கொண்டிருந்தார்.
அது போல, அடுப்பு அருகே நின்று வேலை பார்க்கும் மற்றொரு நபரை, சமையலராக இருப்பார் போலும், இன்னொரு நாள் பார்த்தேன். வேகமாக வெளியே வந்த அவர், வாயில் வைத்திருந்த, 'பான் பராக்' போன்ற ஏதோ புகையிலை பொருளை, தெருவில் துப்பினார்; மூக்கை சீந்தினார். கையை கழுவவோ, வாயை கொப்பளிக்கவோ இல்லை.அவரைப் போன்ற சிலர் தான், நாள் முழுக்க, உணவுப் பண்டங்களை, உணவுக் கூடங்களில் தயாரித்துக் கொண்டிருக்கின்றனர். அவற்றை தான் நாம், 'ருசியாக இருக்கிறது...' என, ரசித்து, ருசித்து சாப்பிடுகிறோம்.
கண்ணில் படும் வகையில் இருந்த, காய்கறி நறுக்கும் கூடத்தை எட்டிப் பார்த்தேன். 9 அடிக்கு, 9 அடி என்ற அளவில் இருந்த அந்த அறைக்குள், நான்கைந்து பேர் அமர்ந்தபடி, நின்றபடி, குனிந்தபடி, குத்த வைத்தபடி காய்கறிகளை நறுக்கிக் கொண்டிருந்தனர். மூடை, மூடையாக காய்கறிகள் கொட்டிக் கிடந்தன; ஒரேயொரு மின் விசிறி ஓடிக் கொண்டிருந்தது.
கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா போன்றவற்றை, தண்ணீரில் அலசி சுத்தப்படுத்துவதே இல்லை. மிளகாய், தக்காளி போன்றவற்றை அப்படியே நறுக்கி தள்ளினர்.சிலருக்கு இயல்பிலேயே, எது சுத்தம், எது சுத்தமின்மை என்பது தெரியாது. ஆனால், உணவகம் நடத்துவோருக்கு தெரிய வேண்டாமா... உணவகத்தில் சாப்பிடும் இடம், எப்படி சுத்தமாக உள்ளதோ, அது போல, உணவு தயாரிப்பு கூடங்களும், பணியாளர்களும் சுத்தமாக இருக்க வேண்டாமா?உங்களை நம்பித் தானே, வாடிக்கையாளர்கள் சாப்பிட வருகின்றனர்; அவர்களை ஏமாற்றலாமா?
உணவகங்களில் உள்ள மிகப் பெரிய மற்றொரு சீர்கேடு, பரிமாறும் பாத்திரங்கள். வாடிக்கையாளர்களுக்கு பரிமாறும் சாம்பார் அல்லது வத்தக்குழம்பு பாத்திரத்தை பார்த்தால், கரண்டியை விட்டு எடுக்கும் போது, சிந்தும் குழம்பு, அந்த பாத்திரத்தின் ஒரு பகுதி முழுவதும் படிந்திருக்கும்.
அதுபோல, கரண்டியும், கை பிடிக்கும் இடம் வரைக்கும், குழம்பில் முக்கிய அடையாளத்தோடு காணப்படும். இது போன்ற சுத்தமற்ற தன்மையை வாடிக்கையாளர்களும், பெரும்பாலும் தட்டிக் கேட்பதில்லை.ஒரு வினாடி நேரம், வழிந்திருக்கும் சாம்பாரை துடைத்து, பணியாளர்கள் சுத்தமாக பரிமாறலாம். இந்த கோளாறை, அநேக ஓட்டல்களில் காண முடிகிறது. உணவகங்களில் பணியாற்றுவோருக்கு சில அடிப்படை விதிமுறைகள் உண்டு. கை விரல்களில், நகம் வளர்த்திருக்கக் கூடாது; முகத்தில் நீண்ட தாடி வைத்திருக்கக் கூடாது; தலையை சொரியக் கூடாது; மூக்கை நோண்டக் கூடாது என்று!
ருசிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் உணவகங்கள், சுத்தத்திற்கும், சுகாதாரமான ஊழியர்களின் செயல்பாட்டிற்கும், கவனம் செலுத்துவதில்லையே என்பது என்னைப் போன்றவர்களின் ஏக்கமாக உள்ளது. அதை சொல்லிக் கொடுப்பதற்கும், கண்காணிக்கவும், அரசில் அதிகாரிகளும் இல்லை; உணவகங்களில் மேற்பார்வையாளர்களும் இல்லை.உரிமையாளர்கள் நல்லவர்களாகவும், சுத்தம், சுகாதாரத்தை பேணுவோராகவும் இருக்கலாம். ஆனால், அவர்களின் நிறுவனங்களில் பணியாற்றும் நபர்கள், அப்படி இல்லையே... இதை சரிசெய்ய வேண்டிய பொறுப்பு, உணவகங்களை நடத்துவோருக்குத் தான் உள்ளது.அடிப்படை சுத்தத்தை, ஊழியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
குறிப்பாக, கை விரல்களை சுத்தமாக வைத்துக் கொள்வது; பதார்த்தங்களை பரிமாறும் போது, எச்சில் தட்டில், கரண்டி படாமல் பார்த்துக் கொள்வது; உணவு மேஜையை துடைக்கும் துணிகளை அவ்வப்போது மாற்றுவது; பணியாளர்களின் சுத்தத் தன்மையை கண்காணிக்க, தகுந்த ஆட்களை பணியமர்த்துவது என, சுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.மூக்கில், காதில் துளை உள்ள, அந்த துளைகளில் ஆபரணங்கள் அணிந்திருப்பவர்களை, மேலை நாடுகளில், உணவகங்களில் பணிக்கு எடுப்பதில்லை என, அறிந்துள்ளேன்.அதுபோல, நம் நாட்டில் செய்ய முடியாது என்றாலும், சுத்தத் தன்மையை பராமரிக்கவாவது வேண்டும். நம் வீடுகளில் எவ்வாறு சுத்தம் பராமரிக்கப்படுகிறது; எவை சுத்தமற்ற செயல்பாடுகள் என்பதை, பணியாளர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.எல்லா உணவகங்களிலும், இதுபோன்ற நிலைமை இல்லை.
சுத்தத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் உணவகங்கள் பல உள்ளன. எனினும், பெரும்பாலான உணவகங்கள், உணவின் ருசிக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை, பிற அம்சங்களுக்கு அளிப்பதில்லை என்பதே, என் கவலை!சமையல் அறை சுத்தமின்மை காரணமாக, உணவுடன், 'பாக்டீரியாக்கள்' உடலுக்குள் நுழைகின்றன; சரியான செரிமானம் நடக்காமல் போகிறது. அது, வாந்தி, பேதி, காய்ச்சல், தலைவலி போன்ற பிரச்னைகளுக்கு வழி வகுக்கிறது.உண்ணும் உணவின் தரம், அது சமைக்கும் முறை, சமையல் அறையின் சுத்தம், சுகாதாரம் எல்லாமே, ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை. சுருக்கமாக சொன்னால், 'ஆரோக்கியம், சமையல் அறையில் தான்' என்றால் மிகையில்லை.
இதில், வீடு, உணவகம் என்ற வேறுபாடு இல்லை!கிச்சன் டவல், அதாவது, கரித்துணி கூட, சுத்தமாக இருக்க வேண்டும். ஈரமானதாகவோ, உணவு படிந்ததாகவோ இருக்கக் கூடாது. வீடுகள் மற்றும் உணவகங்களில் கை துடைக்கவும், பிளேட் துடைக்கவும், சூடான பாத்திரத்தை பிடிக்கவும், ஒரே துணியை தான் அநேகமாக பயன்படுத்துகின்றனர்.காய்கறி நறுக்கும் கத்தி, அரிவாள் மனை, 'கட்டிங் போர்டு' போன்றவற்றை, காய்கறிகளை நறுக்கிய பின், நன்கு கழுவி பாதுகாக்கவில்லை என்றால், அங்கும் கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு!சுத்தமான உணவகத்தில் தான் சாப்பிடுவேன் என, நினைப்போர், சுத்தமான வீட்டு சமையல் அறையில் தான் சாப்பிடுவேன் என்றும் உறுதி கொள்ளுங்கள்.
உணவும், ஆரோக்கியமும், வீடானாலும், உணவகம் என்றாலும், உணவு விஷமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அனைவரின் கடமை.உணவகங்களின் சுத்தத் தன்மையை ஆராய்ந்து, தர வரிசை அளிக்கலாம். இதற்காக, நடுநிலையான நிறுவனங்கள் சில பணிகளை மேற்கொள்ளலாம்.அதுபோல, எந்தெந்த விதங்களில் இந்த உணவகத்தில் சுத்தத்தன்மை பராமரிக்கப்படுகிறது என்பதை, வாடிக்கையாளர்கள் அறியும் வகையில், உணவகங்களும் விளம்பரப்படுத்த வேண்டும். உணவக சுத்தத்தில் சுதாரிக்க வேண்டியது, உணவக உரிமையாளர்களும், சாப்பிடச் செல்லும் நாமும் தான்!
இ.டி.ஹேமமாலினி
சமூக ஆர்வலர்
தொடர்புக்கு:இ- மெயில்: hema338@gmail.com