மோடி - ஜின்பிங் பேச்சின் முக்கிய அம்சங்கள்!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மோடி - ஜின்பிங் பேச்சின் முக்கிய அம்சங்கள்!

Updated : அக் 14, 2019 | Added : அக் 13, 2019 | கருத்துகள் (1)
Share
பிரதமர் மோடி - சீன அதிபர் ஸீ ஜின்பிங் இடையிலான, இரண்டாவது முறைசாரா உச்சி மாநாடு, மாமல்லபுரத்தில் இரண்டு நாட்கள் நடந்தது.* இரு தலைவர்களும் இணக்கமான சூழலில், கருத்து பரிமாற்றம் செய்தனர். நீண்ட கால மற்றும் சர்வதேச பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த, பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விவாதித்தனர். தேச வளர்ச்சிக்காக, தங்கள் அணுகுமுறைகளை பரிமாறினர். * இரு தரப்பு உறவு, எத்தகைய
மோடி, சீன அதிபர், சந்திப்பு, அம்சங்கள், மாமல்லபுரம்

பிரதமர் மோடி - சீன அதிபர் ஸீ ஜின்பிங் இடையிலான, இரண்டாவது முறைசாரா உச்சி மாநாடு, மாமல்லபுரத்தில் இரண்டு நாட்கள் நடந்தது.

* இரு தலைவர்களும் இணக்கமான சூழலில், கருத்து பரிமாற்றம் செய்தனர். நீண்ட கால மற்றும் சர்வதேச பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த, பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விவாதித்தனர். தேச வளர்ச்சிக்காக, தங்கள் அணுகுமுறைகளை பரிமாறினர்.


* இரு தரப்பு உறவு, எத்தகைய சாதகமான முறையில் செல்கிறது என்பதை, அவர்கள் மதிப்பீடு செய்தனர். இரு தரப்பு கலந்துரையாடல்கள், சர்வதேச அரங்கில், எந்த அளவுக்கு பிரதிபலிக்கிறது என, விவாதித்தனர்.


வளர்ச்சிக்கான சவால்


* சர்வதேச நிலைமை, குறிப்பிடத்தக்க மாற்றத்தை நோக்கி செல்வது குறித்த கருத்துகளை, இரு தலைவர்களும் பகிர்ந்தனர். அமைதியான, பாதுகாப்பான, வளமான உலகை உருவாக்க வேண்டும் என்ற குறிக்கோளை, இரு நாடுகளும் ஏற்றன. உலகில் உள்ள அனைத்து நாடுகளும், அந்தந்த நாடுகளின் வளர்ச்சியை, விதிமுறை சார்ந்த, சர்வதேச நெறிமுறைகளின்படி தொடர வேண்டும் என்று வலியுறுத்தினர்.

* 'சர்வதேச அரங்கில், இந்தியாவும், சீனாவும், நிலைத்தன்மைக்கு முக்கிய காரணமாக உள்ளன' என, சீனாவின் ஊகான் நகரில், 2018 ஏப்ரலில் நடந்த, முதலாவது முறைசாரா உச்சி மாநாட்டின் போது ஏற்பட்ட கருத்தொற்றுமை, மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.

இரு நாடுகளுக்கு இடையிலான, கருத்து வேறுபாடுகளை, விவேகமான முறையில் தீர்த்துக் கொள்வது; அவை பிரச்னையாக உருவெடுக்க அனுமதிப்பதில்லை என, உறுதிபட தெரிவித்தனர்.

* உலக அளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட வர்த்தக நடைமுறைகள், கேள்விக்குறியாகி உள்ள நிலையில், விதிமுறை சார்ந்த, பல தரப்பு வர்த்தக நடைமுறைக்கு, ஆதரவு அளித்து வலுப்படுத்துவது அவசியம்.

அனைத்து நாடுகளுக்கும் பயன் அளிக்கக்கூடிய, வெளிப்படையான வர்த்தக நடைமுறைகளை உருவாக்க, இந்தியாவும், சீனாவும், தொடர்ந்து பாடுபட முடிவு செய்தன. பருவநிலை மாற்றம் மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான சவால்களை எதிர்கொள்ள, இரு நாடுகளிலும் எடுக்கப்படும் முயற்சிகள் குறித்து பேசினர்.

பயங்கரவாதம் தொடர்ந்து அச்சுறுத்தலாக உள்ளது குறித்து, இரு தலைவர்களும் கவலை தெரிவித்தனர். பயங்கரவாதத்தை ஒழிக்க பாடுபட, இரு தலைவர்களும் சம்மதித்தனர்.


கடல்சார் உறவுஇரு நாட்டு மக்களுக்கு இடையிலான, நேரடி தொடர்புகள் மற்றும் பண்டை கால வர்த்தக பிணைப்புகள் குறித்து, இரு தலைவர்களும் கருத்துகளை பரிமாறினர்.

தமிழகத்திற்கும், சீனாவின் புஜியான் மாகாணத்திற்கும் இடையே, சகோதர உறவை ஏற்படுத்த, இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.

* மாமல்லபுரத்திற்கும், புஜியான் மாகாணத்திற்கும் இடையிலான, பிணைப்பு குறித்து ஆய்வு செய்ய, தனி அமைப்பு ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யவும், கடல்சார் உறவுகள் குறித்து ஆராய்ச்சி செய்யவும், இரு தலைவர்களும் சம்மதித்தனர்.

* அவரவர் நாடுகளின், பொருளாதார வளர்ச்சிக்கான இலக்குகள், தொலைநோக்கு திட்டங்கள் குறித்து, கருத்துகளை பரிமாறினர். இரு நாடுகளும், ஒரே நேரத்தில் வளர்ச்சி அடைவது, இரு நாடுகளுக்கும் பயன் அளிக்கக்கூடிய வாய்ப்புகளை உருவாக்கும். எனவே, இரு நாட்டு தலைவர்கள் இடையிலான தொடர்பை, தொடர்ந்து மேம்படுத்த முன்வந்துள்ளனர்.

* வரும், 2020ம் ஆண்டை, இந்தியா - சீனா கலாசார மற்றும் மக்கள் இடையிலான, பரிமாற்றங்களுக்கான ஆண்டாக அறிவிக்க, முடிவு செய்தனர். இந்தியா - சீனா இடையே உறவு ஏற்பட்டு, 2020ல், 70 ஆண்டுகள் நிறைவடைகிறது. அதை பயன்படுத்தி, அனைத்து மட்டங்களிலும், பரிமாற்றங்களை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டது.

குறிப்பாக, இரு நாட்டு ராணுவம் இடையே, பரிமாற்றங்களை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டது. இரு நாடுகள் இடையே, துாதரக உறவு ஏற்பட்டு, 70 ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடுவது; இரு நாட்டு நாகரிகங்கள் தொடர்பான, வரலாற்று ரீதியான பிணைப்பை ஆராய, கப்பலில் மாநாடு நடத்துவது உட்பட, 70 நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டது.


தீர்மானம்* இரு நாடுகள் இடையிலான வர்த்தகத்தில், சமச்சீரான தன்மையை அதிகரிக்க, தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகளில், பரஸ்பர முதலீடுகளை ஊக்குவிக்க தீர்மானிக்கப்பட்டது.

* எல்லை பிரச்னை உட்பட, இரு நாடுகள் இடையே, தீர்வு காணப்பட வேண்டிய பிரச்னைகள் குறித்தும், இரு தலைவர்களும் கருத்துகளை பரிமாறினர்.

எல்லை பகுதியில், அமைதியை உறுதி செய்வதற்கான முயற்சிகள் தொடர வேண்டும். இந்த குறிக்கோளை அடைய, இரு தரப்பிலும், நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகளை, தொடர்ந்து மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.

* முறைசாரா உச்சி மாநாட்டின் நன்மைகளை, இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர். இந்த நடைமுறையை, எதிர்காலத்தில் தொடர சம்மதித்தனர். மூன்றாவது முறைசாரா உச்சி மாநாட்டிற்காக, சீனா வரும்படி, பிரதமர் மோடிக்கு, ஸீ ஜின்பிங் அழைப்பு விடுத்தார். அதை, பிரதமர் ஏற்றார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X