பிரியங்காவின் பாசம்

Updated : அக் 13, 2019 | Added : அக் 13, 2019
Advertisement
பிரியங்காவின் பாசம்

பிரியங்காவை பார்க்கும் பொதுமக்கள், அவருடைய பாட்டியும், முன்னாள் பிரதமருமான இந்திராவைப் போலவே இருக்கிறார் என்கின்றனர். உருவ ஒற்றுமையில் மட்டுமல்லாமல், இந்திராவின் சில குணநலன்களும், பிரியங்காவிடம் ஒட்டியிருப்பதாக அவர்கள் சொல்கின்றனர். விலங்குகள் மீது அன்பாக இருந்தவர் இந்திரா. அதேபோல, பிரியங்காவுக்கும், விலங்குகள் மீது தனிப் பாசம் உண்டு. சமீபத்தில், டில்லி மிருக காட்சி சாலையில், 59 வயதான சிம்பன்சி குரங்கு இறந்து போனது. இந்த நிகழ்வு, பிரியங்காவை பெரிதும் பாதித்துவிட்டது. 'அழகான, புத்திசாலியான, வயதான என் தோழி இறந்துவிட்டாள்; வருத்தமாக இருக்கிறது' என, இரங்கல் செய்தி வெளியிட்டார் பிரியங்கா. ரீட்டா என்ற அந்த பெண் சிம்பன்சிக்கும், பிரியங்காவுக்கும் பல காலமாக நட்பு உண்டு. ராஜிவ் பிரதமராயிருந்த போது, அவருக்கு ஒரு சிங்கக் குட்டி அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அந்த குட்டி சிங்கம், சில காலம், ராஜிவ் வீட்டில் வளர்ந்தது. அப்போது பிரியங்கா, அந்த சிங்கத்திடம் விளையாடுவாராம். பிறகு, அந்த குட்டி சிங்கத்தை, ராஜிவ், டில்லி மிருக காட்சி சாலைக்கு கொடுத்துவிட்டார்.இந்த சிங்கத்தைப் பார்க்க, பிரியங்கா அடிக்கடி மிருக காட்சி சாலைக்கு வருவார். அப்போது, சிம்பன்சி ரீட்டாவையும் பார்த்து விட்டுப் போவார். இப்படித்தான் சிங்கம் மூலமாக, ரீட்டாவும் பிரியங்காவிற்கு தோழியானார்.பாட்டி இந்திராவைப் போலவே, பிரியங்காவும் விலங்குகள் மீது நட்போடு இருக்கிறார். ஆனால், இதெல்லாம் தேர்தல் அரசியலுக்கு எப்படி உதவும் என்கின்றனர் விமர்சகர்கள்.


'ஆக்டிவ்' தலைவர்

பா.ஜ.,வின் மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான லால் கிருஷ்ண அத்வானிக்கு, 92 வயதாகிறது. ஆனால், இந்த வயதிலும், டில்லியில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகள் அனைத்திலும் அவர் தவறாமல் கலந்து கொள்கிறார். அதிலும், பார்லிமென்ட் வளாகத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளை அவர் தவற விடுவதேயில்லை. பார்லிமென்டில், மூத்த தலைவர்களின் சிலைகள் மற்றும் படங்கள் உள்ளன. இந்த தலைவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு தினங்களில், மாலை அணிவித்து மரியாதை செய்வது வழக்கம். இவற்றில், அஞ்சலி நிகழ்ச்சிகளுக்கு மட்டும், சில, 'சீனியர்' தலைவர்கள் கலந்து கொள்வர். ஆனால், அத்வானி, அனைத்து நிகழ்ச்சிகளிலும் தவறாமல் கலந்து கொள்கிறார். வயது மூப்பு காரணமாக, அவருடைய மகள் பிரதீபா, அத்வானியின் கையைப்பிடித்து அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அழைத்து வருகிறார்.அத்வானி, அமைச்சர் மற்றும் கட்சிப் பொறுப்பில் இருந்த போது, அவருக்கு செயலராக, பல ஆண்டுகளாக பணியாற்றிய தீபக் சோப்ராவும் உடன் இருக்கிறார். இவர்கள் இருவர் இல்லாமல், அத்வானி வெளியே எங்கும் செல்வதேயில்லை.முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்த போது, அவருக்கு, 93 வயது. ஆனால், அவர், பல ஆண்டுகளாக வெளியே வராமல், வீட்டில், படுக்கையிலேயே இருந்தார். ஆனால், அத்வானி இந்த வயதிலும், அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார் என, சந்தோஷப்படுகின்றனர், பா.ஜ., தலைவர்கள். சமீபத்திய லோக்சபா தேர்தலில், அத்வானியின் தொகுதியான, குஜராத்தில் உள்ள காந்தி நகரில் போட்டியிட, வயது மூப்பு காரணமாக, அவருக்கு, 'சீட்' தரப்படவில்லை. இந்த தொகுதியில், கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா போட்டியிட்டு வெற்றி பெற்றார்.இந்த வயதிலும் ஆக்டிவாக இருக்கும் அத்வானியை, பிரதமர் மோடி, கட்சி தலைவர் -அமித் ஷா ஓரங்கட்டிவிட்டனர் என, பா.ஜ.,வில் ஒரு தரப்பு வருத்தப்படுகிறது.


'டல்' அடிக்கும் மாநில தேர்தல்கள்



வரும், 21ம் தேதி, ஹரியானா மற்றும் மஹாராஷ்டிர மாநிலங்களில், சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன. தேர்தல் முடிவுகள், 24ல் வெளியாகும். ஹரியானாவில், பா.ஜ., ஆட்சி நடைபெறுகிறது; மஹாராஷ்டிராவில் பா.ஜ., - சிவசேனா கூட்டணி அரசு அமைந்திருக்கிறது. ஆனால், டில்லி அரசியல் வட்டாரங்களில், இந்த மாநில தேர்தல்கள் குறித்து எந்த பரபரப்பும் இல்லை. காரணம், காங்கிரஸ் உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் பரிதாப நிலையில் உள்ளது தான். மஹாராஷ்டிராவில், காங்., தலைவர்கள் பலர் ராஜினாமா செய்து, பா.ஜ.,வில் ஐக்கியமாகிவிட்டனர். ஹரியானா காங்கிரசிலோ கோஷ்டிப் பூசல் உச்சத்திலிருக்கிறது. முன்னாள் காங்., தலைவர் ஒருவர், கட்சியை ஒழிக்க சபதம் போட்டுள்ளார்.வழக்கமாக, 'டிவி' சேனல்கள், கருத்து கணிப்பு, விவாதங்கள் என, சூட்டைக் கிளப்பும். ஆனால், இந்த முறை அமைதி நிலவுகிறது. இரண்டு மாநிலங்களிலும், பா.ஜ., தான் வெற்றி பெறப்போகிறது என, எதிர்க்கட்சிகளும் முடிவு செய்துவிட்டது போல தெரிகிறது. காங்., முன்னாள் தலைவர் ராகுல், இந்த இரு மாநிலங்களிலும் பிரசாரம் செய்ய முடிவெடுத்திருந்தாலும், அது எடுபடுமா என்பது சந்தேகம் தான். காங்., தலைவர் சோனியாவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பிரசாரம் செய்யவில்லை. ஆனால், இப்போது, காங்கிரஸ் பரிதாப நிலையில் இருப்பதால், வேறு வழியில்லாமல், ஓரிரு பிரசார கூட்டங்களில் பேச முடிவு செய்துள்ளார். 'பொருளாதார மந்த நிலை, வேலை வாய்ப்புகள் குறைவு' என, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பா.ஜ., ஆட்சியை விமர்சித்து வந்தாலும், தேர்தலில் இது எதிரொலிக்குமா என்பது சந்தேகம் தான்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X