பொது செய்தி

தமிழ்நாடு

புத்திசாலித்தனமான பாதை!

Added : அக் 13, 2019
Share
Advertisement
 புத்திசாலித்தனமான பாதை!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சொன்னதை செய்திருக்கிறார். கார்ப்பரேட் நிறுவனங்கள் துவங்கி, சிறு, குறு ஆலைகள் வரை, பல்வேறு சலுகைகளை அறிவித்திருந்த அவர், நாடு முழுவதும், 400 மாவட்டங்களில், கடன் மேளாக்கள் நடத்தப்படும் என்று கூறியிருந்தார். அதன்படி, 250 மாவட்டங்களில், இவை நடத்தப்பட்டிருக்கின்றன.
ஒவ்வொரு மாவட்டங்களிலும், குறைந்தது, 100 கோடி ரூபாய்க்கு மேல், கடன் அனுமதி தரப்பட்டிருக்கிறது. கோவை மற்றும் திருப்பூரில், 250 கோடி ரூபாய் அளவுக்கு கடன் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இந்த வாய்ப்புகளை, பல்வேறு சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் பயன்படுத்தி கொண்டிருக்கின்றன. புதிய நிறுவனங்களுக்கும், முதலீட்டு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
மத்திய அரசின் ஒவ்வொரு அமைச்சகமும், ஸ்டார்ட் அப் துவங்குவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தந்திருக்கின்றன. இத்தகைய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளும் விழிப்புணர்வு, இளம் தொழில் முனைவோரிடம் இருக்க வேண்டும்.வாசனை திரவிய அரசிகல்வியறிவை கூட முழுமையாக பெற முடியாமல் புறக்கணிக்கப்பட்ட, பிரிட்டனை சேர்ந்த, ஜோன் லெஸ்லி மலோனின் வாழ்க்கை, இன்றைய இளைஞர்களுக்கு சிறந்த பாடம்.'நீ, வாழ்க்கையில் எதற்குமே லாயக்கில்லாதவள்' என்று, ஆசிரியை சொன்னார்.
அப்போது, அவருக்கு வயது 15. பள்ளிப்படிப்பை தொடர முடியாமல் வெளியேறினார். அவரிடம் இருந்த 'டிஸ்லெக்சியா'வை(கற்றல் குறைபாடு), சக தோழியர் கூட ஏற்றுக்கொள்ளவில்லை. மலோனிடம் இருந்த பேரார்வம் மற்றும் படைப்புத்திறனை, ஆசிரியை அங்கீகரிக்காமல் போனது துரதிர்ஷ்டம். அதனால் என்ன... ஆசிரியை சொன்னது பலிக்கவில்லை. இன்று, மலோன், வாசனை திரவிய சாம்ராஜ்யத்தின், மறக்க முடியாத ஒரு பொக்கிஷம்.
தோல் பராமரிப்பு கிளினிக்கில், பணிபுரிந்து கொண்டிருந்த தாய்க்கு, கிரீம்கள் மற்றும் வாசனை திரவியங்களை கலக்க, மலோன் உதவிக்கொண்டிருந்தார். அவரை வாசனை ஈர்த்துக்கொண்டே இருந்தது. சமையலறை மேஜையில், நான்கு பிளாஸ்டிக் குடங்கள் மற்றும் இரு உலோக கலங்கள், வாசனை திரவியம் தயாரிக்க, அவருக்குப் போதுமானதாக இருந்தது.
இவர் தயாரித்த வாசனை திரவியத்துக்கு, பனிரெண்டு பேர் மட்டுமே, முதலில் வாடிக்கையாளர்களாக இருந்தனர்.கடந்த, 1988ல் 'ஜோ மலோன்' என்ற தனது சொந்த வாசனை பிராண்டை அறிமுகப்படுத்தினார். பல லட்சம் பேர், இவர் கண்டறிந்த நறுமணத்தில் கிறங்கி, இதன் வாடிக்கையாளர்களாக மாறினர்.''தனக்குரிய பேரார்வம் எது என்பதை கண்டறிந்து பின்பற்றுவது, தொழில்முனைவோர் அல்லது தலைவராக வெற்றி பெறுவதற்கு முக்கியமானது. வாசனை என்னை யோசனைகளால் நிரப்பியதோடு, என்னை முழுமையாக்கியது.
வண்ணங்களிலும், நினைவுகளிலும் நறுமணத்தைக் காண்கிறேன்,'' என்று, பின்னாளில் சொன்னார், மலோன்.வார்த்தைகளில் பலம் கடந்த, 2006ல் தனது பிராண்டை வேறொரு நிறுவனத்துக்கு விற்றார். ''நீங்கள் உங்கள் ஆர்வத்தை விட்டுவிடலாம், ஆனால் அது உங்களை விட்டுவிடாது'' என்று, மலோன் சொன்ன வார்த்தை, அவருக்கே நிஜமானது.
ஐந்து ஆண்டு இடைவெளிக்குப்பின், 2011ல், புதிய பிராண்டை அறிமுகப்படுத்தினார்; அதன் பெயர், ஜோ லவ்ஸ்.''உங்கள் இதயத்தை பின்பற்றுங்கள். பணம் மீதான ஆர்வத்தை விட, நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்ற, வேரூன்றிய ஒரு உந்துதலுடன், ஒவ்வொரு காலையிலும் எழுந்தால், நீங்கள் புத்திசாலித்தனமான பாதையில் செல்கிறீர்கள் என்று அர்த்தம்''மலோனின் வார்த்தைகள்தான், எவ்வளவு உண்மையானவை!எதிர்மறைகளை புறக்கணியுங்கள்'பொருளாதாரமும், தொழில்துறையும் மந்த நிலையில் உள்ளது' என்ற வாசகங்கள், பொருளாதார வல்லுனர்கள் மட்டுமின்றி, சாமானியர்கள் கூட அடிக்கடி உச்சரிப்பவையாக, தற்போது, மாறியிருக்கின்றன.
ஏன்... இப்படிச் சொல்வது, ஒரு பேஷனாகக் கூட உருவாகியிருக்கிறது.அதேசமயம், நேர்மறைத்தன்மையுடன் இயங்கும் தொழில் நிறுவனங்கள், மந்த நிலையை எளிதாகக் கடக்கின்றன. மத்திய, மாநில அரசுகள், இதற்கேற்ப உதவ வேண்டும் என்பது உண்மையென்றாலும், காலத்துக்கேற்ற தொழில்நுட்ப மாற்றமும், அர்ப்பணிப்பு உணர்வும் இல்லாமல், தொழில் நிறுவனங்கள், எந்தக் கடினச்சூழலையும் கடப்பது அவ்வளவு எளிதானது இல்லைதான்.
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், இத்தகைய மாற்றங்களுடன் உருவாகுபவையாக இருந்தால், சாதிப்பது எளிதாகும். இளம் தொழில்முனைவோர் பலரிடம், எதிர்மறைத்தன்மையை உருவாக்குவதற்கான முயற்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.திருப்பூரின் நம்பிக்கைஆண்டுக்கு, ஒரு லட்சம் கோடி ரூபாய் வர்த்தகத்தை எட்ட, திருப்பூர் தொழில்துறையினர், இலக்கு கொண்டிருக்கின்றனர்.
சர்வதேச வர்த்தகப்போட்டி உட்பட தொழில் சூழலில், கடினத்தன்மை நிலவுகிற போதிலும், இதைச் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை, அவர்களிடம் எள்ளளவும் குறையவில்லை.'நிறுவனங்கள், அதிகத் தொகை ஈட்டித்தரும் மதிப்பு கூட்டு ஆடை தயாரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கோடை கால ஆர்டர்களையே, நிறுவனங்கள், அதிகம் கையாள்கின்றன. குளிர் கால ஆடைத் தயாரிப்புக்கு குறைவாகவே ஆர்டர்கள் கிடைக்கின்றன. கோடைக்கு நிகராக, குளிர்கால ஆடைத் தயாரிப்புக்கான ஆர்டர்களை பெறவேண்டும்.
வாய்ப்புகளை பயன்படுத்தி, வர்த்தகத்தைக் கைப்பற்றி, திருப்பூரின் ஏற்றுமதியை அதிகரிக்கச் செய்யவேண்டும்' என்று கூறுகிறார், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜா சண்முகம்.இந்த இலக்கை எட்டுவதற்கு, அடிப்படை வசதிகள் மற்றும் தொழிலாளர் எண்ணிக்கை மட்டுமல்லாது, நிறுவனங்களும் பெருக வேண்டும். குறிப்பாக, மும்மடங்கு தேவை இருக்கிறது. ஏற்றுமதி என்றில்லாமல், உள்நாட்டு ஆடை உற்பத்தி மூலமும், சாதிக்க வாய்ப்புகள் காத்திருக்கின்றன.
'ஆண்டு முழுவதும் ஆர்டர் பெற, செயற்கை நுாலிழை ஆடை தயாரிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பாலியெஸ்டர், பிளீஸ் போன்ற பின்னலாடைகளை அதிகம் உற்பத்தி செய்யவேண்டும். செயற்கை நுாலிழை துணியை கையாளும் வகையில், ஜாப் ஒர்க் துறையினரும், தங்கள் தொழில் நுட்பங்களை மேம்படுத்த வேண்டும். குறிப்பாக, பிராசசிங் பிரிவில் அதிக முதலீடு செய்யவேண்டும்' என்று கூறுகிறார், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக்கழக (ஏ.இ.பி.சி.,) துணைத்தலைவர் சக்திவேல்.
அதிபுத்திசாலித்தனம் வேண்டாம்
இந்த ஆண்டில், பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், நன்கு கட்டமைத்து கொண்டதுடன், தங்களுக்கு தாங்களே சிக்கல்களை தீர்த்துக் கொள்ளும் பல அளவீடுகளை அடைந்துள்ளன.'கோவை, திருப்பூர் போன்ற தொழில்துறை நகரங்களில், புதிய ஸ்டார்ட் அப்களை துவக்குவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இன்றைய இளைஞர்களிடம், தொழில்நுட்ப ஆற்றல் அதிகம். படைப்பு திறனிலும் சிறந்து விளங்குகின்றனர்.
இதை சாதனையாக மாற்றுவதற்கு, தன்னம்பிக்கை அவசியம்' என்று கூறுகிறார், ஏ.இ.பி.சி., நிர்வாகக்குழு உறுப்பினர் சுப்ரமணியன்.இந்தாண்டு, இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில், ஸ்டார்ட் அப்கள் தற்போது அதிகரிக்க துவங்கியிருக்கின்றன. துவக்கத்தில், மந்தமாக இருந்த 'பி 'மற்றும் 'சி 'நிலை நிறுவனங்கள் இப்போது முதலீடுகளை கவர்வதில், 'ஏ' நிலை நிறுவனங்களை காட்டிலும் சிறப்பாக உள்ளன.யோசித்தால் போதும்ஸ்டார்ட் அப்கள் துவங்க, அதிபுத்திசாலித்தனம் தேவையில்லை. மக்களின் சாதாரண தேவைகளை தெளிவாக உணர்ந்து, அதற்கான தீர்வை எளிதாக தந்தாலே போதும்.
உலகின் மிகச்சிறந்த ஸ்டார்ட் அப்கள், இதைத்தான் செய்து வருகின்றன.மக்களுக்கு தேவையான பொருட்களை தரத்துடன் தயாரித்தல், கடின உழைப்பு தேவையான, அதேசமயம், ஸ்மார்ட்டாக உழைக்கும் ஊழியர்களை பெற்றிருத்தல், தேவையான முதலீடுகளை பெற்று தேவையான செலவுகளை மட்டும் சிக்கனத்துடன் மேற்கொள்ளுதல் உள்ளிட்டவை, ஸ்டார்ட் அப்களின் வளர்ச்சிக்கான தாரக மந்திரம். ஸ்டார்ட் அப் தோல்வியடைந்தது என்றால், இந்த மூன்று அம்சங்களில் ஏதாவதொன்றில் கோட்டை விட்டிருக்கிறது என்று பொருள்.------ -எல்.உமாசங்கர்-

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X