புனே: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், பவுலர்கள் அசத்த, இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், தொடரையும் கைப்பற்றியது.
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்திய அணி வென்றது. இரண்டாவது டெஸ்ட் மகாராஷ்டிராவின் புனேயில் நடந்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 601/5 ரன்களுக்கு 'டிக்ளேர்' செய்தது. மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 275 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

ஜடேஜா அசத்தல்
இன்று நான்காம் நாள் ஆட்டம் நடந்தது. 326 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த இந்திய அணி, 'பாலோ ஆன்' தந்தது. இதனால், தென் ஆப்ரிக்க அணிக்கு மீண்டும் பேட்டிங் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இஷாந்த் பந்தில் மார்க்ரம் டக் அவுட்டானார். புருய்ன் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அஷ்வின் 'சுழலில்' கேப்டன் டுபிளசி (5), எல்கர் (48) சிக்கினர். ஜடேஜா பந்துவீச்சில் குயின்டன் (5), பவுமா (38) ஆட்டமிழந்தனர். முத்துசாமி 9 ரன்கள் எடுத்தார். உமேஷ் பந்தில் பிலாண்டர் (37) அவுட்டானார்.
ஜடேஜா 'சுழலில்' மஹராஜ் (22) சிக்கினார். ரபாடா (4) விரைவில் வெளியேற, தென் ஆப்ரிக்க அணி இரண்டாவது இன்னிங்சில் 189 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி வீழ்ந்தது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக உமேஷ், ஜடேஜா தலா 3 விக்கெட் வீழ்த்தினர். இதன் மூலம், ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் இந்திய அணி 2-0 என தொடரை கைப்பற்றியது. மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் வரும் 19ல் ராஞ்சியில் துவங்கவுள்ளது.
உலக சாதனை
அபாரமாக செயல்பட்ட இந்திய அணி, சொந்த மண்ணில் தொடர்ந்து அதிக டெஸ்ட் தொடரை (11) வென்ற அணி என்ற உலக சாதனை படைத்தது. இதற்கு முன், ஆஸ்திரேலியா 10 தொடரை வென்றதே அதிகமாக இருந்தது.