சென்னை: மாமல்லபுரத்தில், சீனா - இந்தியா இடையேயான பேச்சு வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், இளநீர் குடித்த போது, பிரதமர் மோடியும், சீன அதிபர் ஸீ ஜின்பிங்கும் அமர்ந்திருந்த நாற்காலியை கைப்பற்றுவதில், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் இடையே, கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், பிரதமர் மோடியும், சீன அதிபர் ஸீ ஜின்பிங்கும், சமீபத்தில், சந்தித்து பேசினர்.முதல் நாள் சந்திப்பின் போது, ஐந்து ரதத்திற்கு அருகே, ரம்மியமான சூழலில், இருவரும் நாற்காலியில் அமர்ந்து பேசினர். அங்கு, இளநீர் கொடுத்து, சீன அதிபரை, பிரதமர் மோடி உபசரித்தார்.
சிறப்பு அனுமதி
இந்த நிகழ்ச்சி திடீரென ஏற்பாடு செய்யப்பட்டதாகும். சீன பாதுகாப்பு அதிகாரிகள் கூட, இளநீரை எடுத்து வந்த ஓட்டல் ஊழியரை அழைத்து, விசாரித்து தான் தெரிந்து கொண்டனர்.இரண்டு தலைவர்களின் சந்திப்பில், கடைசி நேரத்தில், இந்த நிகழ்ச்சி சேர்க்கப்பட்டுள்ளது. இதற்காக நாற்காலிகள், மேஜையை ஏற்பாடு செய்ய வேண்டும் என, இரண்டு மணி நேரத்திற்கு முன், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம், மத்திய அரசு அதிகாரிகள் கேட்டுள்ளனர்.
இதையடுத்து, பொதுப்பணித் துறை கட்டடங்கள் பிரிவின் முதன்மை தலைமை பொறியாளர் ராஜாமோகன், கிண்டியில் உள்ள ஒரு கடைக்காரரிடம் பேசினார்.தலைவர்கள் அமர்வதற்கு தேக்கு மரத்தால் செய்யப்பட்ட இரண்டு நாற்காலிகள், தேநீர் வைக்கும் மேஜை, மொழி பெயர்ப்பாளர்கள் அமர்வதற்கு, இரண்டு சிறிய நாற்காலிகள் அனுப்பி வைக்கும்படி கேட்டார்.
அதிகாரிகள் அனைவரும் விழா ஏற்பாடுகளில் இருப்பதால், அதற்கான தொகையை, சென்னை வந்ததும் வழங்குவதாக, அதிகாரி தெரிவித்துள்ளார். நாற்காலியை எடுத்து செல்வதற்கு, தமிழக டி.ஜி.பி., அலுவலகத்தில், சிறப்பு அனுமதி பெறப்பட்டது.நச்சரிப்புபின், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் ஆயிரத்தரசு ராஜசேகர், தன் வாகனத்தில் ஏற்றி, கிண்டியில் இருந்து, மாமல்லபுரத்திற்கும் எடுத்து சென்று நாற்காலிகளை ஒப்படைத்தார்.
பாதுகாப்பு சோதனைகளுக்கு பின், அவை, மோடி - ஜின்பிங் அமர பயன்படுத்தப்பட்டன. நிகழ்ச்சி முடிந்ததும், உடனடியாக அந்த நாற்காலிகளை, பொதுப்பணி துறையினர் ரகசிய இடத்தில் பத்திரப்படுத்தி உள்ளனர்.இரு தலைவர்கள் சந்திப்பின் நினைவாக, இந்த நாற்காலிகளை வைப்பதற்கு, பொதுப்பணி துறையினர் முடிவு செய்துள்ளனர். ஆனால், 'வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு என்பதால், அந்த நாற்காலிகளை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்' என, மத்திய அரசு அதிகாரிகள், கேட்கத் துவங்கி உள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க, நாற்காலிகளை விற்பனை செய்த வர்த்தக நிறுவனம், 'ஒரு நாள் வாடகையை மட்டும் வசூல் செய்து கொள்கிறோம். அவற்றை, மீண்டும் எங்களிடம் ஒப்படைத்து விடுங்கள்' என, பொதுப்பணித்துறை அதிகாரிகளை, நச்சரிக்க துவங்கி உள்ளது. இதனால், தலைவர்கள் அமர்ந்த நாற்காலி, யாருக்கு கிடைக்கும் என்பதில் கடும் போட்டி நிலவுகிறது.