மோடி - ஜின்பிங் ரசித்த சிற்ப பகுதிகள்; சுற்றுலா பயணியர் குவிந்தனர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மோடி - ஜின்பிங் ரசித்த சிற்ப பகுதிகள்; சுற்றுலா பயணியர் குவிந்தனர்

Added : அக் 13, 2019 | கருத்துகள் (1)
 மோடி - ஜின்பிங் ரசித்த சிற்ப பகுதிகள்; சுற்றுலா பயணியர் குவிந்தனர்

மாமல்லபுரம் : மாமல்லபுரத்தில், பிரதமர் நரேந்திர மோடி - சீன அதிபர் ஸீ ஜின்பிங் கண்டு ரசித்த சிற்ப பகுதிகளை பார்வையிட, சுற்றுலா பயணியர் நேற்று குவிந்தனர்.

பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஸீ ஜின்பிங்கும், 11ம் தேதி, மாமல்லபுரத்தில் சந்தித்து பேசினர்; அங்குள்ள சிற்பங்களை கண்டு களித்தனர். பின், இரு நாட்டு ஒப்பந்தங்கள் குறித்து, கோவளத்தில் பேச்சு நடத்தினர்.இவர்களின் வருகையால், கலை சிற்பப்பகுதி வளாகங்களில், அழகிய புல்வெளி, அலங்கார கற்களில் நடைபாதை, இரவில் சிற்பங்கள் ஒளிர விளக்குகள் அமைக்கப்பட்டன.


தடை

கடற்கரை கோவில், அர்ச்சுனன் தபசு, பாறைக்குன்று பகுதிகள், அலங்கார வளைவுகள், தோரணங்களால் அழகுபடுத்தப்பட்டன.இவை பற்றி எல்லாம், பத்திரிகை, ஊடகங்களில், தொடர்ந்து செய்திகள் வெளியாகின.

இதற்கிடையில், இரு நாட்டு தலைவர்கள் சந்திப்பு நிகழ்வின் பாதுகாப்பு கருதி, சில நாட்கள், சிற்ப வளாகத்திற்குள், சுற்றுலா பயணியர் செல்ல தடை விதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் மாலை, தலைவர்கள் பேச்சு முடித்து கிளம்பியதும், உயர் பாதுகாப்பு நடைமுறைகள் முற்றிலும் விலக்கப்பட்டன.

இதையடுத்து, தொல்லியல் துறை, நேற்று பயணியர் அனுமதியை, முறையாக துவக்கியது. விடுமுறை நாளானதால், காலையிலிருந்தே, சுற்றுலா பயணியர், மாமல்லபுரத்தில் குவிந்தனர். கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், அர்ச்சுனன் தபசு சிற்பங்களை, பிரதமர் - சீன அதிபர் கண்டுகளித்த, நடந்த, அமர்ந்த பகுதிகளில், பயணியரும் அவ்வாறே செயல்பட்டு, நினைவுகூர்ந்து மகிழ்ந்தனர்.


ஏமாற்றம்


இது குறித்து, சுற்றுலா பயணியர் கூறியதாவது:இங்குள்ள சிற்பங்களை, பலமுறை பார்த்து மகிழ்ந்தாலும், பிரதமர் - சீன அதிபர் பார்த்த பகுதிகளில், இப்போது நாங்களும் பார்ப்பது, ஒருவித உணர்வை ஏற்படுத்துகிறது. ஊட்டி, கொடைக்கானலில் அமைக்கும், பழ, காய்கறி அலங்கார வளைவுகள், வரவேற்பு சிலைகளை காண வந்தோம்; அவை இல்லாதது ஏமாற்றமாக இருந்தது.

பிரதமர் - சீன அதிபர் வருவதற்காக, சுற்றுலா பகுதியை மேம்படுத்தினாலும், இதே அழகான நிலை தொடர வேண்டும். மீண்டும், ஆக்கிரமிப்பு ஏற்படாதபடி, அதிகாரிகள் தடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X