சென்னை : 'மாமல்லபுரத்தில், பிரதமர் மோடி - சீன அதிபர் ஸீ ஜின்பிங் சந்திப்பு நிகழ்ந்ததன் ஞாபகார்த்தமாக, நினைவு சின்னம் அமைக்க வேண்டும்' என, முதல்வர் இ.பி.எஸ்.,சுக்கு அதிகாரிகள் யோசனை தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடியும், சீன அதிபர் ஸீ ஜின்பிங்கும், சமீபத்தில் மாமல்லபுரத்தில் சந்தித்து, இரு நாட்டு நல்லுறவை மேம்படுத்துவது குறித்து பேச்சு நடத்தினர். இதற்கான பல்வேறு ஏற்பாடுகளை, தமிழக அரசு செய்து கொடுத்தது. இரண்டு தலைவர்களும், அவர்களுடன் வந்த அதிகாரிகளும், வரவேற்பு ஏற்பாடுகளை பார்த்து பிரமித்தனர்.
விழா வரவேற்பு ஏற்பாடுகளை, முதல்வர் இ.பி.எஸ்., - துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர், இரண்டு முறை சென்று பார்வையிட்டனர். பொதுப்பணித்துறை, தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட அதிகாரிகளுக்கு, சில யோசனைகளையும் வழங்கினர். தற்போது, மோடி - ஜின்பிங் சந்திப்பு, வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. தமிழக அரசின் ஏற்பாடுகளை, மத்திய அரசின் உயர் அதிகாரிகளும் பாராட்டினர்.
இரு தலைவர்களின் சந்திப்பை, வருங்கால தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் வகையில், மாமல்லபுரத்தில், கல்வெட்டுடன் கூடிய நினைவு சின்னம் அல்லது நுழைவு வளைவு அமைக்க வேண்டும் என, பொதுப்பணித்துறை அதிகாரிகள், முதல்வருக்கு யோசனை கூறியுள்ளனர். மாமல்லபுரத்தில், மத்திய தொல்லியல் துறைக்கு சொந்தமான இடங்கள் அதிகம் உள்ளன. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் பூங்கா உள்ளிட்ட சில இடங்கள் உள்ளன. மத்திய தொல்லியல் துறை அனுமதி கிடைக்காவிட்டாலும், பொதுப்பணித் துறைக்கு சொந்தமான இடத்தில், நினைவு சின்னத்தை விரைவில் அமைக்கலாம் எனவும், அவர்கள் யோசனை கூறியுள்ளனர். அமைச்சர்கள் மற்றும் தலைமை செயலர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசித்து, இவ்விஷயத்தில் முடிவெடுப்பதாக முதல்வர் கூறியுள்ளார்.