மும்பை : ''காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை, காங்கிரஸ் தலைவர்கள் விமர்சிக்கின்றனர். துணிச்சல் இருந்தால், 'காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படும்' என, அவர்களது தேர்தல் அறிக்கையில் வெளியிடத் தயாரா... காங்கிரசை பொறுத்த அளவில், காஷ்மீர், ஒரு சிறிய நிலப் பகுதி; எங்களை பொறுத்தவரை, காஷ்மீர், நம் நாட்டின் கிரீடம்,'' என, பிரதமர் மோடி, மஹாராஷ்டிராவில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் ஆவேசமாக பேசினார்.
மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, வரும், 21ல் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. பா.ஜ., - சிவசேனா கட்சிகள் ஒரு அணியாகவும்; காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் மற்றொரு அணியாகவும், தேர்தலை சந்திக்கின்றன. தேர்தல் பிரசாரத்துக்காக, நேற்று மஹாராஷ்டிராவுக்கு வந்திருந்த, பிரதமர் மோடி, ஜல்காவுன் என்ற இடத்தில் நடந்த பிரசாரத்தில் பேசியதாவது:
விசித்திரம்
ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப் பிரிவை, மத்திய அரசு சமீபத்தில் ரத்து செய்தது. இதை, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கடுமை யாக விமர்சிக்கின்றன. இந்த விஷயத்தில், நம் நாட்டுக்கு எதிராக, சர்வதேச அரங்குகளில், நம் அண்டை நாடு என்ன பேசி வருகிறதோ, அதைத் தான், இந்த தலைவர்களும் பேசி வருகின்றனர். இவர்களுக்கு ஒரு சவால் விடுக்கிறேன். துணிச்சல் இருந்தால், தங்கள் தேர்தல் அறிக்கையில், 'காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படும்' என்ற விஷயத்தை, அவர்கள் சேர்க்கத் தயாரா... அவர்களை பொறுத்தவரை, காஷ்மீரும், லடாக்கும், சிறிய நிலப்பகுதி. எங்களை பொறுத்தவரை, அவை, நம் நாட்டின் கிரீடம்.
காங்கிரசும், தேசிய வாத காங்கிரசும், முதலைக் கண்ணீர் வடிப்பதை நிறுத்த வேண்டும். மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விஷயத்தை, இவர்கள் எதிர்ப்பது விசித்திரமாக உள்ளது. ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டம், அங்கு, பிரிவினைவாதமும், பயங்கரவாதமும் வளர்வதற்கே உதவியது. முஸ்லிம் சகோதரிகள், 'முத்தலாக்' நடைமுறையால், பல்வேறு சிரமங்களை அனுபவித்து வந்தனர். அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே, முத்தலாக் தடை சட்டம் இயற்றப்பட்டது. ஆனால், எதிர்க்கட்சி யினருக்கு இதில் அக்கறை இல்லை.
அதனால் தான், முத்தலாக் தடை சட்டத்தை விமர்சிக்கின்றனர். கடந்த லோக்சபா தேர்தலில், நாட்டு மக்கள், பா.ஜ.,வுக்கு அளித்த அமோக ஆதரவால், நம் நாடு, வளர்ச்சிப் பாதையில் செல்கிறது. புதிய இந்தியாவை உருவாக்க, பல வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றி யுள்ளோம். நாட்டு மக்கள் அளித்த ஆதரவு தான், இதற்கு காரணம்.
மஹாராஷ்டிராவில், பா.ஜ., கூட்டணி அரசு, ஐந்தாண்டு களில் நிறைவேற்றிய திட்டங்களை பார்த்து, எதிர்க்கட்சித் தலைவர்கள் பயந்து, களைப்படைந்து போயுள்ளனர். அவர்களே, இதை வெளிப்படையாக கூறு கின்றனர்.
அதிர்ச்சி
தொண்டர்களுக்கு மதிப்பளிக்கும் ஒரே கட்சி, பா.ஜ., தான். சமீபத்தில், ஒரு அரசியல் கட்சித் தலைவர், தொண்டர் ஒருவரை மேடையில் தாக்கியது தொடர்பான, 'வீடியோ'வை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். பல ஆண்டுகளாக, மீடியா வெளிச்சத்தில் இருக்கும் அந்த தலைவர், ஒரே ஒரு நாள், தொண்டர் மீது, அந்த வெளிச்சம் பட்டு விடக் கூடாது என்பதற்காக தாக்கியுள்ளார். இவ்வாறு, அவர் பேசினார். சமீபத்தில், தேசியவாத காங்., தலைவர் சரத் பவார், மேடையில், கட்சித் தொண்டர் ஒருவரை முழங்கையால் தள்ளி விடுவது போன்ற வீடியோ, சமூக வலைதளத்தில் பரவியது. அதை மறைமுகமாக குறிப்பிட்டு, பிரதமர் மோடி நேற்று பேசினார்.
மாமல்லபுரத்தில் எழுதிய கவிதை
பிரதமர் மோடி, சமூக வலைதளமான, 'டுவிட்டரில்' நேற்று பதிவு செய்துள்ளதாவது: மாமல்லபுரம் கடற்கரையில் சிறிது நேரம் நடந்து சென்றபோது, கடலுடன் மனம் விட்டு பேசினேன். 'என் உணர்வுகளின் உலகம்' என்ற தலைப்பில், அதை கவிதையாக எழுதியுள்ளேன். இவ்வாறு கூறியுள்ள மோடி, ஹிந்தி யில் எழுதப்பட்ட, எட்டு பத்திகள் உடைய அந்த கவிதையையும், அதில் பதிவிட்டுள்ளார். சூரியன், அலை ஆகியவற்றுக்கு, கடலுடன் உள்ள உறவு குறித்தும், பல்வேறு விஷயங்கள் குறித்தும், பிரதமர் மோடி, அந்த கவிதை யில் குறிப்பிட்டு உள்ளார்.
பிரதமர் மோடி கையில் வைத்திருந்த கருவி என்ன?
பிரதமர் மோடி, சமீபத்தில் மாமல்லபுரம் வந்திருந்தபோது, அங்கு, கடற்கரையில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்தார். காலையில், கடற்கரையில் கிடந்த குப்பை கழிவுகளை எடுத்து, துாய்மை பணியில் ஈடுபட்டார். அப்போது, அவர் கையில் ஒரு வித்தியாசமான கருவி இருந்தது; இதைப் பார்த்த பலரும், 'இது என்ன கருவி' என, ஆச்சரியப்பட்டனர்.
இந்நிலையில், சமூக வலைதளத்தில், இது குறித்து பிரதமர் விளக்கம் அளித்துள்ளார்; அவர் கூறியதாவது: மாமல்லபுரம் கடற்கரையில், நான் கையில் வைத்திருந்த கருவியைப் பார்த்து, 'அது என்ன' என, பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். இது, 'அக்குபிரஷர் ரோலர்' எனப்படும் கருவி. இதை, அடிக்கடி பயன்படுத்துவேன். எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
இவ்வாறு அவர், அதில் தெரிவித்துள்ளார். அந்த அக்குபிரஷர் ரோலர் கருவியின் புகைப்படத்தையும், அதில் அவர் பதிவிட்டுள்ளார். பயன் என்ன? அக்குபிரஷர் ரோலர் என்ற கருவி, உள்ளங்கை மற்றும் பாதங்களில் உள்ள நரம்புகளை துாண்டி விட்டு, நம் உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும். இந்த கருவியை பயன்படுத்தி, உடற்பயிற்சி செய்வதன் மூலம், மன அழுத்தம், பதற்றம் ஆகியவை குறைந்து, மனதுக்கு நிம்மதி ஏற்படும்.
பிரதமர் நிகழ்ச்சி ரத்து?
பிரதமர் மோடி, டில்லியில் இன்று, சர்வதேச கச்சா எண்ணெய் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுடன் பேச்சு நடத்துவதாக இருந்தது. ஆனால், இன்று, வேறு பல முக்கிய பணிகள் அவருக்கு இருப்பதால், இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக, பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.