பாதுகாப்புக்கு மத்தியில் ஸ்ரீநகர் சந்தையில் மக்கள் கூட்டம்

Added : அக் 13, 2019
Advertisement
 பாதுகாப்புக்கு மத்தியில் ஸ்ரீநகர் சந்தையில் மக்கள் கூட்டம்

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில், பயங்கரவாதிகள், நேற்று முன் தினம், கையெறி குண்டு வீசியதை தொடர்ந்து, பல்வேறு பகுதிகளிலும், நேற்று(அக்.,13) பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மாநிலம் முழுவதும், 70வது நாளாக, கடைகள் அடைக்கப்பட்டு, சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. ஆனால், நேற்று நடந்த ஞாயிறு சந்தையில், மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு, 370, ஆகஸ்ட், 5ல் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் பல இடங்களில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 'இன்டர்நெட்' சேவைகள், மொபைல் போன் இணைப்புகள் முடக்கப்பட்டன. தற்போது, சட்டம் - ஒழுங்கு நிலை சீராகியுள்ளதை அடுத்து, பெரும்பாலான பகுதிகளில், தடை உத்தரவு விலக்கிக் கொள்ளபட்டுள்ளது. சாதாரண தொலைபேசி சேவைகள், வழக்கம் போல் இயங்க தொடங்கி விட்டன. மொபைல் போன் சேவைகள், இன்று மதியம் முதல் இயங்க தொடங்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜம்மு - காஷ்மீர் தலைநகரான ஸ்ரீநகரில் உள்ள கடை வீதி பகுதியில், பயங்கரவாதிகள் நேற்று முன் தினம், கையெறி குண்டு வீசினர். இதில், ஏழு பேர் காயம் அடைந்தனர்.இதையடுத்து, ஸ்ரீநகரின் பல்வேறு பகுதிகளிலும், நேற்று பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. பறக்கும் படையினர், தீவிர சோதனையில் ஈடுபட்டனர். டி.ஆர்.சி., சவுக் மற்றும் லால் சவுக் பகுதிகளில், ஞாயிறு சந்தை நேற்று வழக்கம் போல் நடைபெற்றது. இதில், ஏராளமான வணிகர்கள், வியாபாரத்தில் ஈடுபட்டனர்.

ஜம்மு - காஷ்மீரில், விரைவில் குளிர்காலம் துவங்க உள்ளதால், அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் கூட்டமும் அதிக அளவில் இருந்தது. ஆனால், மாநிலத்தில் உள்ள பெரும்பாலான கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், அடைக்கப்பட்டிருந்தன. சாலைகளில், போக்குவரத்து வெறிச்சோடி காணப்பட்டது. 70 நாளாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இது குறித்து, ஜம்மு - காஷ்மீர் அரசின் செய்தி தொடர்பாளர் ரோஹித் கன்சால், செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜம்மு - காஷ்மீரின் 99 சதவீத இடங்களில், தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.ம க்கள் மத்தியில் வீண் பதற்றத்தை ஏற்படுத்தி, இயல்பு வாழ்க்கையில் பாதிப்புகளை உண்டாக்க, பயங்கரவாதிகள் முயற்சிக்கின்றனர். இதைக்கண்டு, யாரும் அச்சம் அடைய தேவையில்லை. பயங்கரவாதிகளின் சதிகளை முறியடிக்கும் பணிகளை, அரசு திறம்பட செய்து வருகிறது. வணிகர்கள், வர்த்தகர்கள், கடைகள், ஓட்டல்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் வழக்கம் போல தங்கள் பணிகளை மேற்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.


எல்லையில் பாக்., தாக்குதல்

ஜம்மு - காஷ்மீரின், கதுவா மாவட்டத்தில் உள்ள, சர்வதேச எல்லை பகுதியில், பாக்., படையினர், நேற்று முன்தினம் இரவு, பீரங்கி தாக்குதல் நடத்தினர். ஹிராநகர் பகுதியில் உள்ள ராணுவ முகாம் மற்றும் கிராமங்கள் மீது, துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இந்த தாக்குதல், நேற்று அதிகாலை வரை தொடர்ந்தது. நம் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள், பதில் தாக்குதல் நடத்தினர். இதில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X